தமிழ்நாடு மேகி நுாடுல்ஸ் : விளம்பர படங்களில் நடித்த, தமிழக நடிகர், நடிகையரிடையே பீதி!

மேகி நுாடுல்ஸ் : விளம்பர படங்களில் நடித்த, தமிழக நடிகர், நடிகையரிடையே பீதி!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

ஜூன்.04, 2015:- 'மேகி நுாடுல்ஸ்' விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்கு பதிவு செய்ய, பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், உணவுப் பொருட்கள் சம்பந்தமான விளம்பர படங்களில் நடித்த, தமிழக நடிகர், நடிகையரிடையே பீதி ஏற்பட்டு உள்ளது.

கண்டனம்:

தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களான விஷால், கார்த்தி, சூர்யா, தனுஷ், சிம்பு, ஆர்யா, நடிகை ஜோதிகா, தேவயானி, ராதிகா, சினேகா, பிரபு, விஜய், விக்ரம், சரத்குமார் ஆகியோர் விளம்பரங்களில் நடித்து உள்ளனர். 'டிவி' தொடர்களில் நடிக்கும் பல நடிகர், நடிகையர், 'ரியல் எஸ்டேட்' விளம்பர படங்களிலும் நடித்துள்ளனர்.நடிகை ராதிகா இடம் பெற்ற கல்வி நிறுவன விளம்பரம் குறித்து, சமூக வலைதளங்களில் பல செய்திகள் உலா வந்தன; சிலர், ராதிகாவுக்கு கண்டனமும் தெரிவித்து இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா, 'கல்வி நிறுவனத்துடனான என் தொடர்பு, முற்றிலும் தொழில் முறை சார்ந்தது. இனிமேல், அந்த விளம்பரத்தில் என்னை தொடர்புபடுத்தி கொள்ளப் போவதில்லை. நான் விளம்பர துாதர் கிடையாது. கல்வி நிறுவனத்தில் சேரப் போகும் மாணவர்களும், பெற்றோரும், நன்கு விசாரித்துச் செல்ல வேண்டும்' என, தெரிவித்து உள்ளார்.

துவக்கத்தில் சில விளம்பர படங்களில் நடித்து இருந்தாலும், பல ஆண்டுகளாக, விளம்பர படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும், நடிகர் அஜித்தை இதுகுறித்து தொடர்பு கொண்டு பேச முயன்றபோது, அவரது போன், 'சுவிட்ச் ஆப்'பில் இருந்தது. அவரது மேலாளர் பேச மறுத்துவிட்டார்.
நடிகர் சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்ட போது, அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

எனினும், அவருக்கு நெருக்கமானவர் கூறியதாவது:சமீபத்தில், பிரபல பன்னாட்டு குளிர்பான நிறுவனம், சிவகார்த்திகேயனை, தங்கள் விளம்பர படத்தில் நடிக்க நல்ல சம்பளம் தருவதாக அழைத்தும், மறுத்து விட்டார்.

தடை:'உங்கள் கம்பெனி குளிர்பானம், சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு கேடு விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். பணம் மட்டுமே எனக்கு முக்கியமல்ல' என, சிவகார்த்திகேயன் கூறிவிட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.

விளம்பர படங்களில் நடித்த மற்ற நடிகர், நடிகையரிடம் கேட்டதற்கு, 'உடனடியாக பதில் சொல்ல முடியாது' என, பொதுவான பதில் கூறினர்.

இது ஒரு பாடம்:

பெயர் வெளியிட விரும்பாத, முன்னணி சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:பன்னாட்டு குளிர்பான விளம்பரங்களில் நடித்தால், 'டிவி' சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகும்; நாடு முழுவதும், விளம்பர பேனர்களில் இடம் பெறலாம். இது தவிர, கணிசமான சம்பளமும் கிடைக்கும் என்ற ஆசையில் தான், நடிகர், நடிகையர் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் நடிக்கும் விளம்பர பொருட்களில், மக்களின் பயன்பாடு என்ன, பாதிப்பு ஏதும் உண்டா என, பார்ப்பதில்லை. இனிமேல் இப்படி இருக்க முடியாது என்பதற்கு, 'மேகி நுாடுல்ஸ்' விளம்பர பிரச்னை, நடிகர், நடிகையருக்கு ஒரு பாடம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நிருபர் -

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்