தமிழ் செய்திகள் ஆங்கிலத்தை தவிர்க்க, எஸ்.பி., அறிவுரை!

ஆங்கிலத்தை தவிர்க்க, எஸ்.பி., அறிவுரை!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ் செய்திகள்  
படம்

"இயன்றவரை தூய தமிழில் பேசுங்கள்' என, திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு எஸ்.பி., அருண் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, கட்டுப்பாடு அறையில் இருந்து, போலீஸ் ஸ்டேஷன்கள் வரை போலீசார் தூய தமிழில் பேச ஆரம்பித்துள்ளனர்.

போலீஸ் ஸ்டேஷன்களில், பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. வழக்குகள் தொடர்பாகவும், வழக்குப்பதிவு குறித்தும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்த மைக் அறிவிப்புகளிலும், 90 சதவீதம் ஆங்கில வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகளின் உத்தரவை தெரிவிக்கும்போதும், மற்ற போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல்களை பரிமாறும்போதும் ஆங்கிலச் சொற்களையே போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். மேற்கு மண்டல காவல் துறையில், கூடுமானவரை ஆங்கிலத்தை தவிர்த்து தூய தமிழில் பேசுமாறு, ஐ.ஜி.,  சிவனாண்டி உத்தரவிட்டுள்ளார்.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில், திருப்பூர் எஸ்.பி., அருண், போலீஸ் ஸ்டேஷன்களில் கூடுமானவரை போலீசார் தூய தமிழில் பேசுமாறு அறிவுத்தியுள்ளார். கடந்த இரு நாட்களாக, போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார், தூய தமிழில் பேசி வருகின்றனர். திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து, தூய தமிழில் பேசுவது துவங்கியுள்ளது.

மைக்கில், "வடக்கு காவல் நிலையம், தொடர்பு கொள்ளுங்கள்... கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசு கிறோம்.... கண்காணிப்பாளர் உத்தரவு, துணை கண்காணிப்பாளர் அழைக்கிறார். அலைபேசியில், ஆய்வாளரை தொடர்பு கொள்ளுங்கள்; விபரத்தை முழுமையாக தெரிந்து கொண்டீர்களா, இத்தகவலை உடனடியாக தங்கள் உயரதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறது,' என்பது போன்ற உரையாடல்களில் போலீசாருடனும், போலீஸ் ஸ்டேஷன்களுடனும் போலீசார் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

இதுமட்டுமின்றி, மொபைல் போன்களில் பேசும் போலீசாரும், நேரில் சந்தித்துக் கொள்ளும் போலீசாரும்,""வணக்கம் ஐயா, ஓய்வாக இருக்கிறீர்களா? பணியில் உள்ளீர்களா, தகவலை தெரிந்து கொண்டீர்களா; வழக்கு தொடர்பான விசாரணையில் என்ன தகவல் உள்ளது,'' என ஒருவருக்கொருவர், தூய தமிழில் பேசிக் கொள்வது, வித்தியாசமாக உள்ளது.

சுருக்கமாக, ஆங்கில வார்த்தைகளில் இதுவரை தகவல்களை மைக்குகளில் உடனுக்குடன் பரிமாறிக் கொண்ட போலீசார் சிலர், தூய  தமிழில் பேச திணறுகின்றனர்.  தூய தமிழில் வார்த்தைகளின் நீளம் அதிகமாக இருப்பதால் ஒரு தகவலை சொல்லி முடிக்கவே, சில நிமிடங்கள் கூடுதலாக ஆகிறது.

அனுபவம் வாய்ந்த போலீசார், ஆங்கில வார்த்தைக்குரிய தமிழ் வார்த்தைகளை உடனுக்குடன் தெரிவித்து விடுகின்றனர். பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளே பேசி வந்த போலீசார், தமிழ் வார்த்தைகள் தெரியாமல் சில விநாடிகள் திணறி, பின் சமாளித்து, கொச்சை தமிழில் பதில் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், ஆங்கிலத்திலேயே கூறி முடிக்கின்றனர். போலீசார் கூறுகையில், "தூய தமிழில் பேசுவது இனிமையாக உள்ளது; ஒருவர் தூய தமிழில் பேசும்போது, எதிரில் பதில் அளிப்பவரும் எளிதில் தூய தமிழுக்கு மாறி விடுகிறார். ஆங்கிலத்தில் மிக பரிச்சயமான வார்த்தைகளை, தமிழில் பேசுவது சிரமம் என்றாலும், நாளடைவில் இது பழக்கமாகி விடும்,' என்றனர்.

தூய தமிழில் பேசுவதை உத்தரவாக இல்லாமல், இயன்றவரை பேச முயற்சியுங்கள் என்று மட்டுமே போலீசாருக்கு எஸ்.பி., அறிவுறுத்தியுள்ளார். எனினும், போலீசார் மிகுந்த ஆர்வத்துடன் தூய தமிழில் பேசி வருவதால், காவல் நிலையங்களில் ஒலிக்கிறது தமிழ்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்