கட்டுரைகள் ஈழத்தை நோக்கியே நகர்கிறோம் நாம்! - புகழேந்தி தங்கராஜ்

ஈழத்தை நோக்கியே நகர்கிறோம் நாம்! - புகழேந்தி தங்கராஜ்

பதிவர்: நிர்வாகி, வகை: கட்டுரைகள்  
படம்

இந்தக் கட்டுரை வெளியாகிற தினத்தில் ஜெனிவாவில் புயலடித்து ஓய்ந்திருக்கக் கூடும்…. நீதி கிடைக்கும் என்கிற தமிழினத்தின் நம்பிக்கை சாய்ந்திருக்கக் கூடும்….! அதற்கு 24 மணி நேரத்துக்கு முன் எழுதுகிறேன் இதை!

2009ல் நடந்தது நிச்சயமாக இனப்படுகொலை –

அதை நிரூபிக்க சர்வதேச விசாரணை அவசியம் –

இன அழிப்புக் குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது –

குற்றவாளி தன்னைத் தானே விசாரிக்க அனுமதிக்கக் கூடாது – இதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம் நாம்.

அத்தனை நாடுகளும் அமெரிக்காவின் மடியில் படுத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிற நிலையில், தூங்காமல் விழித்திருந்து இந்தியா லாலி பாடிக் கொண்டிருக்கிற நிலையில், நம்முடைய வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப் பட்டிருக்கக் கூடும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் – என்கிற நமது எதிர்பார்ப்பில் மண் விழுந்திருக்கலாம்…..நீதி பெற்றுவிட வேண்டும் – என்கிற நமது ஆசை நிராசையாகி இருக்கலாம்….

நியாயம் கிடைத்துவிடும் – என்கிற நம்பிக்கை நாசமாகியிருக்கலாம்…. இதனாலெல்லாம் நாம் சோர்ந்துவிடக் கூடாது.

இதைப்போன்ற ஏமாற்று வேலைகளும் மோசடிகளும் எம் இனத்தின் லட்சியக் கனவை மேன்மேலும் வலுப்படுத்தியே வந்திருக்கின்றன. அந்த வரலாற்றைப் புரிந்து கொண்டோமென்றால், பீனிக்ஸ் பறவையாய், சாம்பலிலிருந்தே நாம் எழுந்துவிட முடியும்.

தமிழீழம் – என்கிற இந்த இனத்தின் தாயக உரிமையை தந்தை செல்வாவின் அரசியல் போராட்டங்கள் தான் அறிமுகப்படுத்தின. செல்வாவின் கனவே உணவாக வாழ்ந்த பிரபாகரனும் அவனது தோழர்களும், அந்த உரிமையை நம் கைக்கெட்டும் நெருக்கத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.

இன்று திசையெட்டிலும் ஒலிக்கிறது அவர்களது குரல். இந்தக் குரல் ஒரு தேசத்தின் குரல்…. ஒரு தேசத்துக்கான குரல்.

2009ல், எமது ஒன்றரை லட்சம் உறவுகளின் குரல்வளைகளை நெறிக்க இலங்கைக்குத் துணை நின்றவர்கள் தான், அந்த உயிர்களுக்கு நீதி கேட்கும் குரல்களை முடக்க 2015ல் முயற்சிக்கிறார்கள்.

நாம் கேட்கிற சர்வதேச விசாரணைக்கு நேர்மாறாக, உள்ளக விசாரணையைத் திணிக்கிறார்கள், இந்தியாவும் அமெரிக்காவும் ஏனைய அமெரிக்க அடிமைகளும்!

வெடிமருந்தைத் திணிக்கத் திணிக்கத்தான் வெடிக்கிறது – என்கிற யதார்த்தத்தைக்கூட அறியாத அவர்கள், இந்தத் துரோகம்தான் தமிழ் ஈழம் என்கிற சுதந்திர தேசத்துக்கு அஸ்திவாரமாக அமையப் போகிறது என்பதையும் உணரவில்லை.

செல்வாவும் பிரபாகரனின் தோழர்களும் வளர்த்தெடுத்த கனவை, ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு மறுக்கப்படுகிற நீதிதான் நனவாக்கப் போகிறது என்பதை மிக விரைவில் அவர்கள் புரிந்துகொள்ள நேரும்.

ஜோசியம் சொல்லவில்லை நான். ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ராத் ஹுசெய்ன் சொன்னதைத்தான் சொல்கிறேன்…..

“இரு தரப்புக்கும் இடையேயான வேறுபாடுகள் சீழ்பிடித்துப் போய்க் கிடப்பதும், குற்றமிழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிடுவதும், இரு சமூகங்களுக்கும் இடையிலான பிளவை அதிகரிக்கும். எதிர்காலத்தில் புதிய முரண்களைத் தோற்றுவிக்கும்” என்பது ஹுசெய்னின் எச்சரிக்கை. இதன் உட்பொருள் புரிகிறதா உங்களுக்கு!

குற்றவாளிகளைக் காப்பாற்ற வேண்டும் – என்கிற முனைப்பு, ‘இலங்கையை இணைக்க வேண்டும்’ – என்கிற எண்ணத்துக்கு நேர் எதிரானது. ஹுசெய்ன் சொல்வதை, அமெரிக்காவும் இந்தியாவும் புரிந்துகொள்ளவேயில்லை. (இலங்கை சொந்தச் செலவிலேயே சூனியம் வைத்துக் கொள்ளட்டும் – என்று விரும்புகிறார்களா?)

அவர்கள் எதைப் புரிந்துகொள்ளவில்லையோ, அதை நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எதை நோக்கி செல்வாவின் பயணம் தொடங்கியதோ, அதை நோக்கித்தான் நம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

‘அவர்கள்’ என்று நான் குறிப்பிடுவதில் எனது தாய்நாடான இந்தியாவும் அடக்கம். தமிழகத்தில் இருக்கும் எங்களுக்கு, ஈழத்திலிருக்கும் தமிழர்கள் தொப்புள்கொடி உறவுகள்.

நாங்கள் ‘நேசித்த’ இந்தியாவுக்கோ, இலங்கை மிக முக்கியமான நண்பன். நட்பிலும் ‘தொப்புள்கொடி நட்பு’ என்று ஏதோ ஒன்று இருக்கும்போலிருக்கிறது…..

அதனால்தான் எமது எதிர்ப்பையெல்லாம் புறக்கணித்துவிட்டு, குற்றவாளி இலங்கையையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது எங்கள் பாரதம்.

தமிழரின் உயிர்களைக் காட்டிலும் நண்பன் இலங்கையின் இறையாண்மையே முக்கியம் – என்று வெட்கமேயில்லாமல் பிரகடனம் செய்கிறது இந்தியா. 2009ல், நண்பனின் இறையாண்மையைக் காப்பதற்காக, ஒன்றரை லட்சம் தமிழரைப் பலிகொடுத்தது அப்போதிருந்த இந்திய அரசு……

அந்த உயிர்களைக் கொன்று குவித்த இலங்கையைக் குற்றவாளிக் கூண்டிலிருந்து மீட்பதற்காக நீதி நியாயத்தையே பலி கொடுக்கிறது இப்போதிருக்கும் இந்திய அரசு.

இந்த லட்சணத்தில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளும் இந்தியாவுக்கு இருப்பதாக அறிவிக்கிறார் இந்தியப் பிரதமர். அந்தத் தகுதியின் லட்சணம் என்னவென்று இப்போதுதான் புரிகிறது.

தமிழக அரசியல் மேடைகளில் இனப்படுகொலைக்கு எதிராக யார் பேசினாலும், அரசியலுக்காகத்தான் பேசுகிறார்கள் என்று குற்றஞ் சாட்டிக் கொண்டிருந்தார்கள்,

காங்கிரஸும் பாரதீய ஜனதாவும்! சட்டப் பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினால், பிளேட்டைத் திருப்பிப் போட்டுவிடுகிறார்கள். ‘தமிழகக் கட்சிகளைப் போல் பாரதீய ஜனதா பேச முடியாது….

நாங்கள் தேசியக் கட்சி’ என்கிறார் வெங்கையா நாயுடு. தேசியக் கட்சி என்பதால், ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு நியாயமே கேட்கக்கூடாது – என்று பாரதீய ஜனதாவின் பைலாவில் எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா?

(கணேசன், தமிழிசை, பொன்னார், சிபிஆர் – என்று போகிற போக்கில் அத்தனைப் பேர் மீதும் ‘தமிழினத் துரோகி’ என்று பச்சை குத்திவிட்டுப் போகும் வெ.நாயுடு விஷயத்தில் தமிழக பா.ஜ.க. உஷாராக இருப்பது நல்லது.)

நாங்கள் தேசியக் கட்சி – என்கிற புளித்த புளிசாத மூட்டையோடு மீனம்பாக்கத்தில் வந்து இறங்குகிற தேசியத் தலைவர்கள், சிங்கள இலங்கைக்குள்ளிருந்து ஒலிக்கிற குரல்களைக் கேட்டால் வெட்கப்படுவார்கள்.

அத்தகைய குரல்களில் ஒன்று – பேராசிரியர் குமார் டேவிட்டின் குரல். எதிர்விளைவுகள் குறித்தெல்லாம் அஞ்சாமல், தனக்கு நியாயமென்று தோன்றுவதைத் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்து விடுபவர் டேவிட். அதற்கு அடிப்படையாக இருப்பவை, மார்க்சிஸம் குறித்த அவரது அறிவும் தெளிவும்!

முப்பது ஆண்டுகளுக்கு முன், சிங்கள பௌத்த இனவெறியை – இடதுசாரி வண்ணம் பூசி வளர்த்தெடுக்க ஜனதா விமுக்தி பெரமுணா (மக்கள் விடுதலை முன்னணி) முயன்றபோது, அதன் எழுச்சியைக் கடுமையாக விமர்சித்தவர், டேவிட். இடதுசாரி கொள்கைகளும், இனவெறிக் கொள்கைகளும் முற்றிலும் முரண்பட்டவை என்பதைத் துணிவுடன் எடுத்துச் சொன்னவர் அவர்.

விடுதலைப் புலிகளை விமர்சிக்க டேவிட் தயங்கவில்லை. புலிகளோடு கருத்து வேறுபாடுகள் இருந்தன அவருக்கு! என்றாலும், ‘புலிகளின் எழுச்சி இனவெறிக்கு எதிரான புரட்சியின் எழுச்சி’ என்று – கொழும்பு சிங்கள வட்டத்திலிருந்து எழுந்த முதல் குரல்களில் ஒன்றாக, டேவிட்டின் குரல் இருந்தது.

இப்போதும் டேவிட் தன் மனசாட்சிக்கு மட்டுமே மதிப்பளிக்கிறார். வடகிழக்குத் தமிழர்களின் கைக்கெட்டிய நீதியையும் நியாயத்தையும், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் துணையுடன் இலங்கை தட்டிப் பறிப்பதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

இனவெறிக்கு இரையான தமிழர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் காப்பாற்றவும் மைத்திரி-ரணில் கோஷ்டி என்னென்ன செய்யும் என்பதை மிகவும் நுணுக்கமாக விவரித்திருக்கிறார் டேவிட்.

இன்னும் ஓராண்டுக்குள், தமிழர் பகுதிகளில் அதிகாரப் பரவலை அமல்படுத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த மைத்திரி முயற்சிக்கக் கூடும் என்பது டேவிட்டின் அனுமானம்.

போரின் பெயரால் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து – அப்பாவித் தமிழ்ச் சகோதரிகளைச் சீரழித்த சிங்கள ராணுவத்தையும், அதற்கு உத்தரவிட்ட அரசுத் தலைவர்களையும் காப்பாற்றுவதற்காக, இப்படியொரு திசை திருப்பல் நாடகத்தை மைத்திரி நாடகக் கம்பெனி நிச்சயமாக நடத்தும் – என்கிறார் அவர். (‘எங்களால்தான் இதெல்லாம்’ – என்றொரு கூத்து, கூத்தமைப்பால் நடத்தப்படும் என்பதை சொல்லத் தவறியிருக்கிறார் டேவிட்.)

உள்ளக விசாரணையால் எந்தப் பயனும் இருக்காது – என்கிற ஹுசெய்னின் அறம்சார் கருத்தை அறவே மதிக்காமல், இலங்கையை இலங்கையே விசாரித்துக் கொள்ளட்டும் – என்று முடிவெடுத்திருக்கிற இளிச்சவாய்த்தனம், நம்மைப் போலவே டேவிட்டுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

“சர்வதேசப் பங்களிப்பு இல்லாத உள்ளக விசாரணையால் எந்த உபயோகமும் இல்லை….. இப்படியெல்லாம் விசாரிப்பதற்குத் தேவையான எந்தப் பொறிமுறையும் இலங்கையில் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படப் போவதில்லை.

அவர்கள் முதுகில் தட்டக்கூட இந்த விசாரணையால் முடியாது. மைத்திரி, குற்றவாளிகளைக் காப்பாற்ற விரும்புவாரே தவிர தண்டிக்க விரும்ப மாட்டார்” என்கிறார் டேவிட்.

இனப்படுகொலை முடிந்து ஆறு ஆண்டுகள் ஆனபிறகே, மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதன்மீதான நடவடிக்கைகளைத் தொடங்கவே ஒன்றரை ஆண்டுகள் ஆகும்போலிருக்கிறது.

இந்தத் தேவையற்ற காலதாமதம், நம்மைப் போலவே குமார் டேவிட்டையும் கோபப்படுத்தியிருக்கிறது.

“இன்னும் 18 மாதங்கள் காத்திருப்பது இருக்கட்டும். இப்போதே செய்யவேண்டியதை இலங்கை அரசு முதலில் செய்யட்டும். உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இரண்டு.

ஒன்று – வட கிழக்கிலிருந்து ராணுவத்தை முழுமையாக விலக்கிக் கொள்வது. இன்னொன்று – இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளை (நிலங்களை) அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது! இந்த இரண்டையும் நடைமுறைப்படுத்துவதில், அரசுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது?

இராணுவத்தினர் மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகிற நிலையில், ராணுவம் இன்னும் எதற்காக அங்கே நின்றுகொண்டிருக்கிறது?

வடகிழக்கில் வியாபார நடவடிக்கைகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிற இராணுவத்தை அங்கிருந்து விலக்குவதால் நாட்டுக்கு என்ன நஷ்டம்” என்று கேட்கிறார் டேவிட்.

சிங்கள இராணுவத்தின் அருவருப்பான நடவடிக்கைகளால், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரையும், ‘இலங்கை இராணுவம் பாலியல் பலாத்காரத்தைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறது’ என்கிற ஹிலாரியின் குற்றச்சாட்டையும் கவலையோடு நினைவு கூர்ந்திருக்கிறார் அவர்.

‘தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறு, அப்பாவி மக்களின் காணிகளை அவர்களிடம் திரும்பக் கொடு’ – என்கிற இரண்டு கோரிக்கைகளையும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன்.

தனது அறிக்கையில் அந்த இரண்டையும் தெளிவாக வலியுறுத்தியவர், ஹுசெய்ன். அவர்களது கோரிக்கைக்கு வலுச் சேர்த்திருக்கிறார் டேவிட்.

‘வடகிழக்கில் நிற்கும் ஒன்றரை லட்சம் துருப்புகளைத் திரும்பப் பெற்றால் அவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்துவது? குமார் டேவிட் வீட்டில் கொண்டுபோய் விட்டு விடலாமா’ என்கிற கிண்டலையெல்லாம் பொருட்படுத்தாமல், ‘இராணுவத்தை வெளியேற்று’ என்று அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார் டேவிட்.

விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டு ஒன்றையும், டேவிட் வழிமொழிந்திருக்கிறார். ‘தேசப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே வட கிழக்கில் இராணுவம் நிறுத்தப்பட்டிருக்கிறது’ என்கிற வாதம் ஒரு பம்மாத்துவாதம் என்பதையும், அது ஒரு மோசடிவாதம் என்பது ரணிலுக்கும் மைத்திரிக்கும் தெரியும் என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

டேவிட்டின் இந்தக் கருத்துக்கு எதிர்க் கருத்தை எடுத்து வைத்திருக்கிற, ராஜபக்சவின் கைத்தடி தயான் ஜயதிலக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் குற்றஞ்சாட்டி, குட்டையைக் குழப்ப முயற்சித்திருக்கிறார்.

“வடகிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்று – என்று சொல்பவர்கள் பொறுப்பற்றவர்கள். தமிழர் பகுதிகளிலிருந்து 20வது மைலில் தமிழ்நாடு இருக்கிறது. அதன் முதல்வர், தமிழீழத்தை வலியுறுத்தி இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

அப்படியொருவர் இருபதாவது மைலில் ஆட்சியில் இருக்கிற நிலையில், வட கிழக்கிலிருந்து இராணுவத்தை எப்படி விலக்கிக் கொள்ள முடியும்” என்று ஒரு புதிய ரக பீதியைக் கிளப்பியிருக்கிறார் தயான்.

என்னைப் பொறுத்தவரை, 2009ல் நடந்த இனப்படுகொலையை அம்பலப்படுத்தவும், அந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடவும், அது தொடர்பாக நேரடியாக சாட்சியங்களை வழங்கவும் வாய்ப்பிருக்கிற வரை,

வடகிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறாது என்று நிச்சயமாக நம்புகிறேன். அந்த அளவுக்கு, தமிழர் தாயகத்தில் வாழ்கிற எமது உறவுகளின் ஓர்மம் இலங்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, இன்று வரை!

சமீப காலங்களில் தமிழர் தாயகத்திலிருந்து வருகிற, அச்சுவேலி இராணுவ முகாம் உள்ளிட்ட செய்திகளை உற்றுக் கவனிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வார்கள்….

ஒரு கற்பழிப்பு இராணுவம் அங்கேயே நின்று கொண்டிருப்பது, சமந்தகர்களைத் தவிர வேறெவருக்கும் பாதுகாப்பானதுமில்லை, நல்லதுமில்லை!

புகழேந்தி தங்கராஜ்
myth@yahoo.com

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்