இந்தியா இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடை; வெளிநாட்டு படகுகளுக்கு அனுமதி - ராகுல் காந்தி

இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடை; வெளிநாட்டு படகுகளுக்கு அனுமதி - ராகுல் காந்தி

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

மே.12, 2015:- இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதித்துள்ள மத்திய அரசு, வெளிநாட்டு படகுகளுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கியுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மீன்பிடிக்க தடை

பாராளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:–

பணக்காரர்களுக்காக செயல்படும் நமது மத்திய அரசு விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தது. இப்போது மீனவர்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. மத்திய அரசு நமது மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தை நீட்டித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு படகுகள் நமது கடல் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இது இந்திய மீனவர்களை வெகுவாக பாதித்துள்ளது.

இது இந்தியாவில் உள்ள கடலோர மாநிலங்களில் மீனவர்கள் இடையே மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. வழக்கம்போல, நமது அரசு விவசாயிகளின் நலன்களுக்கு, மீனவர்களின் நலன்களுக்கு, தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
விலக்க வேண்டும்

அரசு உடனடியாக இந்த மீன்பிடி தடையை விலக்கிக் கொள்ள வேண்டும். மீனவர்கள் அவர்களது வேலையை பார்க்க அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளை மட்டும் புண்படுத்தவில்லை, இந்த நாட்டில் உள்ள நலிவடைந்த ஒவ்வொரு தனிமனிதனையும் துன்புறுத்துகிறது.

தங்கள் வாழ்வாதாரத்திற்காக பணிபுரியும் ஒவ்வொரு தனிமனிதனையும் கொடுமைப்படுத்துகிறது. நலிவடைந்தவர்களிடம் இருந்து பணத்தை பறிப்பது மட்டுமின்றி துன்புறுத்தும் செயலிலும் ஈடுபடுகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
தவறான குற்றச்சாட்டு

ராகுலின் குற்றச்சாட்டு குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து மந்திரி நிதின்கட்கரியிடம் கேட்டபோது, ‘‘இந்த குற்றச்சாட்டு தவறானது. மத்திய அரசு மீன்பிடி தடை குறித்து இதுபோல் எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த வெளிநாட்டு படகுகளும் இங்கு வந்து மீன்பிடிக்கவும் இல்லை. இதுபோன்ற எந்த சம்பவமும், எந்த புகாரும் இதுவரை அமைச்சகத்துக்கு வரவில்லை’’ என்றார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்