தமிழ் செய்திகள் உங்கள் வீடுகளில் அரிய ஏடுகள் இருந்தால் எங்களுக்கு அறியத்தாருங்கள்...

உங்கள் வீடுகளில் அரிய ஏடுகள் இருந்தால் எங்களுக்கு அறியத்தாருங்கள்...

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ் செய்திகள்  
படம்

தமிழ் மரபு அறக்கட்டளை , இப்பக்கங்களின் மூலமாக சுவடியியல் தொடர்பான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது.

தமிழ் மொழியில் சிந்தனைகளை எழுத உதவியவை பனை ஓலைகள். தமிழர் தம் சிந்தனை பாரம்பரியத்தை வெளிக்கொணர உதவும் இந்த ஓலைகள் முழுவதும் அச்சுப்பதிப்பாக வரவில்லை என்பது உண்மை. பத்தொண்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பல ஊர்களுக்குச் சென்று தமிழ் ஏடுகளைத் திரட்டி பதிப்பித்த பதிப்பாசிரியர்களை நாம் காட்டாயம் நினைவு கூற வேண்டும். இவர்களின் அரும் பணி இல்லையேல் இன்று நமக்கு தமிழின் தொண்மையை அதன் ஆழத்தை விளக்கக் கூடிய நூல்கள் கிடைத்திருக்க முடியாது.

ஓலைச் சுவடி ஆய்வுகளோடு அச்சுப்பதிப்புக்கள் பற்றிய ஆய்வுகளையும் நாம் நோக்கக் கடமை பட்டிருக்கிறோம்.பழைய அச்சுக்கலை அதன் தோற்றம், அதனை பயிற்றுவிக்கும் முறை, பழம் பதிப்பாளர்கள் பற்றியும் செய்திகள் சேகரித்து அதனை மின்பதிப்பாக்கம் செய்வது அவசியமாகின்றது. "அச்சும் பதிப்பும்" என்ற தலைப்பில் திரு.மா.சு.சம்பந்தன் எழுதிய நூல் இந்த வகையிலான பல தகவல்களைத் தருகின்றது. இந்த ஆய்வுகள் மேலும் தொடரப்பட்டு, அவை இணையத்தில் மின்பதிப்பாக்கம் காணப்பட வேண்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 1979ம் ஆண்டு முதல் சுவடியியலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இந்தத் துறையில் நிபுனர்கள் உருவாகும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் சிறப்பாக சுவடிப்புலம் என்ற ஒரு துறையே இயங்கி வருகின்றது. இங்கு தொடர்ந்து ஏடுகள் பதிப்பிக்கப்பட்டு வருவதும் ஆய்வுகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கவை. இந்த செய்திகள் இணையத்தில் மின்பதிப்பாக்கம் செய்யப்பட வேண்டும்.

சுவடியியல் கையேடுகள், சுவடிப் பதிப்பு நெறிமுறைகள், சுவடி அட்டவணைகள் அனைத்தும் வெளிவர வேண்டும். இணயத்திலும் அவை பதிப்பிக்கப் பட வேண்டும். தொடர் ஆய்வுகள் நடைபெற வேண்டும். தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் சுவடிப்புலம், Catalogue of Tamil Palmleaf Manuscripts in Tamil University என்ற பெயரில் ஒரு அட்டவணையில் உலகமெங்குமுள்ள 21,000க்கும் மேற்பட்ட தமிழ் சுவடிகளுக்கான விளக்க அட்டவணையைத் தொகுத்து வெளியிட்டுள்ளது.

அதே போல பற்பல சுவடி நூலகங்களிலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளைத் தொகுத்து Siddha Medical Manuscripts in Tamil உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அத்தோடு, பேராசிரியர்.இரா.மாதவன் தனது சுவடியியல் நூலில், "நாம் இழந்த இலக்கியங்கள்" என்ற தலைப்பில் ஒரு பட்டியலைத் தந்துள்ளார்கள். இம்மாதிரியான செய்திகள் நமது இன்றைய தலமுறையினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதற்கு இணையத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.
 
இந்த ஆண்டில், தமிழ் மரபு அறக்கட்டளை ஏடுகள், பழைய தமிழ் நூல்கள், மற்றும் பாரம்பரிய கலைகள், பாரம்பரிய விளையாட்டுக்கள் தொடர்பான தகவல்களையும் மினபதிப்பாக்கம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட உள்ளது. தமிழ் ஆர்வலர்களே, நமது செய்தி கலந்துரையாடல் பகுதியான மின்தமிழில் சேர்ந்து உங்கள் கருத்துக்களையும் பங்களிப்பையும் தமிழ் மொழிக்காக வழங்குங்கள். சேர்ந்து செயல்படுவோம், தமிழ் மொழிக்காக..!

சுபாஷினி கனகசுந்தம், ஜெர்மனி [01.01.2008]

 

ஏடு என்றாலே அது "நாடி ஜோஸ்யம்" என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏடு வகைகளில் அது ஒன்று அவ்வளவே!

ஏடு என்றால் பனை ஓலைப் புத்தகம் என்று கொள்ள வேண்டும். இன்று புத்தகம் பதிப்பிக்க காகிதம் பயன்படுத்துகிறோம், அன்று பனை ஓலையைப் பயன்படுத்தினர். இன்றையக் காகிதம் கூட மரப்பட்டைகளிலிருந்து உருவாவதே! பனை ஓலை, காகிதத்தைவிட வலுவான ஊடகம்.

10 அல்லது 20 வருடப் புத்தகங்களெல்லாம் மஞ்சள் அடித்து, அப்பளம் போல் ஆகிவிடுகின்றன. ஆனால் முன்னூறு வருஷத்து பனை ஓலைப் புத்தகம் இன்றும் வாசிக்கத்தக்கதாய் உள்ளது. நம்மவரின் பதப்படுத்தும் முறைகளை எண்ணிப் பெருமைப் பட வேண்டும்.

தமிழர் தம் கலையை, அறிவியலை, கதைகளைப் பனை ஓலையில் எழுதி வைத்தனர். மேலும் சமண ஒழுக்கத்தில் பனை ஓலையில் எழுதிய புத்தகங்களைப் படி எடுத்து பரிசாகத்தரும் வழக்கமும் இருக்கிறது. இப்படி சேகரித்து வைத்த புத்தகங்களைக் கண்டு உ.வே.சா அவர்கள் பதிப்பித்து தமிழுக்குப் பெருமை சேர்த்தார்.

அவருக்குப் பின் முறையாக பதிப்பிக்கும் தொழில் குறைந்து போயிற்று. இப்போது தமிழ்ப் பல்கலைக் கழகம் தோன்றிய பின் அதற்கு புத்துயிர் வந்திருக்கிறது. ஆயினும், அறிஞர்களின் வேலைப் பளுவினாலோ இல்லை சோம்பலினாலோ, "உ.வே.சாவிற்குப் பின் பதிப்பிக்கத்தக்க தமிழ்ப் பெரும் நூல் இல்லை" என்றொரு அபிப்பிராயம் உலவி வருகிறது.

இருப்பதெல்லாம் சிறு, சிறு பிரபந்தங்களும், சிற்றிலக்கியங்கள் மட்டுமே என்று. இது ஆராய வேண்டிய கருத்து. தமிழின் செம்மொழி நிலையே, சங்கப் பாடல்களை 20 நூற்றாண்டில் பதிப்பித்த பின்தான் நடந்திருக்கிறது. அதற்கு முன்வரை, குருகுலங்களிலும், புலவர்தம் குழுக்களிலும் மட்டுமே தமிழின் செம்மொழி அறியப்பட்டு வந்திருக்கிறது.

ஆக, தமிழ் செம்மொழி என உலகறிய அறிவிக்க 20 நூற்றாண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. இப்போது கதை முடிந்துவிட்டது என்கிறார்கள். இவ்வளவுதானா தமிழ் கண்டது?

தமிழில் கண்டெடுக்க இனி ஒன்றுமே இல்லையா? இருக்க முடியாதே? தமிழ் ஆழ்கடலாயிற்றே. உ.வே.சா காலத்திலும், ஆறுமுக நாவலார் காலத்திலும் வளையாபதி பதிப்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் ஏடுகள் தொலைந்து போனதால் அம்முயற்சி கைகூடவில்லை!

இப்படித்தொலைந்து போய் கண்டெடுக்க வேண்டிய ஏடுகள் இன்னும் எத்தனையோ? சமீபத்தில் அரசு மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பில் இலட்சத்திற்கு மேலான ஓலைப் புத்தகங்கள் இருப்பது அறிய வந்திருக்கிறது. எனவே நம் வேலை இன்னும் முடிந்துவிடவில்லை.

இனிப் பதிப்பிக்க ஒரு ஏடு இல்லை என்னும்வரை நம் அகழ்வாராய்ச்சி ஓயக்கூடாது. பதிப்பிக்கப்படாத அறிவியல் நூற்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. தமிழ் மருத்துவ நூல்கள் முறையாகப் பதிப்பிக்கப் பட வேண்டும். மிருக வைத்திய நூல்கள் உள்ளன. கட்டிடக் கலை, தாவரவியல், வாண சாத்திரம் (rocket technology), கணிதம், வான சாத்திரம் (cosmology) போன்ற பிற துறை நூல்கள் பதிப்பிக்கப்பட வேண்டும்.
 

பல்கலைக் கழகங்கள் ஏற்றுக் கொண்டுள்ள பெரும்பணிக்கு உறுதுணையாக இச்சிறுபணியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். எங்கள் ஆசை, தமிழர்களுக்கு புத்துணர்ச்சியும், விழிப்புணர்வும் தர வேண்டும் என்பதே.

இப்பகுதியில், ஏடுகள் என்றால் என்ன, எத்தனை வகை ஏடுகள் உள்ளன, ஏடுகளை வாசிப்பது எப்படி?

தமிழ் ஏடுகளின் நூலகங்கள் எங்குள்ளன?

பல்கலைக் கழகங்கள் செய்யும் சீரிய முயற்சிகள் என்ன?

போன்ற பல கேள்விகளுக்கான விடையை மின் படிவங்களாகவும், மின் உரைகளாகவும், மின் பேசும்படங்களாகவும், மின் இணைப்புகளாகவும் அளித்துள்ளோம். உங்கள் வீடுகளில் அரிய ஏடுகள் இருந்தால் எங்களுக்கு அறியத்தாருங்கள். அவைகளை முறையாக மின் நகல் செய்துவிட்டு திருப்பித் தந்துவிடுகிறோம்.

தமிழின் வளம் என்னவென்று உலகறியச் செய்ய இணையம் எனும் ஊடகம் மிகச் சிறந்த தளம். அதுவொரு கல்வி ஊடகமும் கூட. இவ்வூடகத்தின் வழியாக ஏட்டுக்கல்வியை பரவலாக்கி, புதுமைப் படுத்த முடியும். எங்கள் பணியில் உங்கள் உதவும் கரம் சேர்ந்தால் தமிழ் உரம் பெறும் என்பது உறுதி!

நா.கண்ணன், தென் கொரியா [01.01.2008]

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்