தமிழின் பெருமைகள் 1578-ல் வெளியான தம்பிரான் வணக்கம் தமிழின் முதல் அச்சு புத்தகம்!

1578-ல் வெளியான தம்பிரான் வணக்கம் தமிழின் முதல் அச்சு புத்தகம்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழின் பெருமைகள்  
படம்

தமிழின் முதல் அச்சு புத்தகம்

ஆகாசமும் பூமியும் படச்சவன் சர்வமும் ஆனவனே, பிதாவே தம்பிரானே விசுவாசம். அவ்வண்ணம் என்னடே கர்த்தாவே யேசு கிறிஸ்து அவ்வனடே புத்ரனே ஒருவனே. சுத்தமான சித்தத்தினொடெய கருணே கொண்டு கெற்பம் ஆயி: கன்னியாஸ்திரி மரியத்தில் பெறந்தவன்: போஞ்சியு பிலாத்து விதித்த விதிகொண்டு வெசனப்பட்டு: குருசினில் தூக்கிச் செத்தான்: குழில் வைத்து...

என்ன, படித்துவிட்டீர்களா? தமிழின் முதல் புத்தகத்தின் சில வரிகளைப் படிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் நீங்கள். தமிழின் முதல் அச்சு நூலுக்கு 450 வயது ஆகிவிட்டது. எழுத்தாணி கொண்டு ஓலைச் சுவடிகளில் எழுதி வந்த காலகட்டத்தில், இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதல் அச்சு நூல் வெளியானது. அதன் பெயர் கார்டிலா! இது உண்மையிலேயே தமிழுக்கும் தமிழர்களும் பெருமை தருகிற விஷயமாகும்.

இந்தியாவில், கோவாவில் 1556-ல் முதல் அச்சகம் ஏற்படுத்தப்பட்ட போதிலும்கூட, அங்கு லத்தீன் மொழியிலும் போர்த்துக்கீசிய மொழியிலும் மட்டுமே முதலில் வெளியீடுகள் வரத் தொடங்கின. கொல்லத்தில் தமிழ் அச்சு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு, 1578-ல் வெளியான தம்பிரான் வணக்கம் என்ற நூலே தமிழ் அச்சு எழுத்துக்களுடன் உருவான முதல் நூலாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவுக்கு அச்சு இயந்திரம் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 1554-ல் லிஸ்பன் நகரில் கார்டிலா என்ற ஒரு தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட் டுள்ளது என்ற செய்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/83/large/1_tamil1.JPG

‘‘தமிழ் அச்சு எழுத்துக்கள் உருவாக்கப்படாத அந்தக் காலத்திலேயே அந்தப் புத்தகம் தமிழ் ஒலியுடன் வாசிப்பதற்கு ஏற்ப ரோமன் எழுத்து வரி வடிவில் வெளியாகியுள்ளது. கார்டிலா என்கிற லூசோ சமய வினா விடை என்ற இந்த நூல் 38 பக்கங்கள் கொண்டது. தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத, ஆனால் போர்ச்சுகீசிய மொழி தெரிந்த கிறிஸ்துவப் பாதிரி யார்களுக்கு உதவும் வகையில் தமிழ் உச்சரிப்பில் வேத வாசகங்களைக் கூறுவதற்காக உருவாக்கப்பட்ட நூல் இது.

http://www.tamilmantram.com/vb/photogal/images/83/large/1_tamil-2.JPG

போர்ச்சுகீசிய அரசர் மூன்றாவது ஜான் உத்தரவின்பேரில் அச்சிடப்பட்ட இந்த நூலை உருவாக்குவதற்கு முத்துக்குளித்துறை என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட தூத்துக் குடி பகுதியிலிருந்து வின்சென்ட் நாசரேத், ஜோஜ் காவல்கோ, தாமஸ் குரூஸ் ஆகிய மூன்று பேர் லிஸ்பன் நகருக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முயற்சியில் இந்த நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. அன்றைய இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் நன்கு சுற்றிப் பார்த்து அறிந்திருந்த பாதிரியார் ஜோன்வில்லா கோண்டி என்பவரின் மேற்பார்வையில் இந்நூல் தயாராகியுள்ளது’’ என்கிறார் கள் இந்த முதல் அச்சு நூல் பற்றித் தகவல் தெரிந்த சிலர்.

அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட அந்தத் தொடக்க கால கட்டத்திலேயே இந்த நூல் இரு வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கறுப்பு வண்ணத்தில் சற்றுப் பெரிய வடிவில் ரோமன் எழுத்துக்களில் தமிழ் வாசகங்கள் உள்ளன. அதன் மேல் பகுதியில் சிவப்பு வண்ணத்தில், ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் சரியான போர்ச்சுகீசிய சொல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் ஒலி வடிவில் உள்ள ரோமன் எழுத்துக்களின் கீழே கறுப்பு வண்ணத்தில் போர்ச்சு கீசிய மொழியில் தமிழ் வாசகங்களின் உச்சரிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

‘‘இவ்வாறு கற்பிக்கும் புது முறைகளையும், இரு நிறங்களையும் திறமையான எழுத்துக்களையும் கொண்ட நூலை ஐரோப்பிய அச்சக வரலாற்றிலேயே காண்பது அரிது’’ என்கிறார் தனிநாயகம் அடிகள் (உலகத் தமிழ் மாநாடுகள் நடப்ப தற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் இவர்). தமிழின் முதல் அச்சு நூலையும் அதன் முக்கியத்துவத்தையும் கண்டறிந்த பெருமை இவருக்கு உண்டு.

தற்போது இந்த நூலின் ஒரே ஒரு மூலப் பிரதிதான் உள்ளது. அது, லிஸ்பனை அடுத்து உள்ள பெலெம் நகரில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளது. ஆய்வுப் பணிகளுக்காக 1954-ல் இந்த அருங்காட்சியகத்துக்குச் சென்ற தனிநாயகம் அடிகள் இந்த நூலைக் கண்டறிந்து, அதன் இரு பக்கங்களின் புகைப்படப் பிரதியைக் கொண்டு வந்தார். தமிழின் முதல் அச்சு நூல்கள் பற்றிய விரிவான கட்டுரையை தமிழ் கல்ச்சர் என்ற ஆங்கில இதழில் எழுதினார்.

தமிழில் வெளியான முதல் அச்சு நூல்களை ஆய்வுரையுடன் மறு பிர சுரம் செய்ததில் மறைந்த ஏசு சபை பாதிரியார் ச. ராஜ மாணிக்கத்துக்கும் குறிப் பிடத்தக்க பங்கு உண்டு. லிஸ்பனில் வெளியிடப் பட்ட கார்டிலா மறுபிரசுர பிரதிகளை தமிழகத்துக்குக் கொண்டுவந்தவரும் அவரே.

‘‘தமிழின் அச்சு நூல் வரலாறு கார்டிலாவிலிருந்து தொடங்குகிறது. அந்த அரிய வரலாற்றை காலக் கறையான்கள் அரிக்கும்படி விட்டுவிடக் கூடாது’’ என்கிறார்கள் தமிழறிஞர்கள் ஆதங்கத்தோடு.

நியாயம்தான்! தமிழை செம்மொழியாக அறிவித்து, தமிழ்ப் பெருமை பேசும் இந்தக் கால கட்டத்தில் தமிழுக்குச் செய்ய வேண்டிய முக்கியப் பணி, கார்டிலா போன்ற தொடக்க கால தமிழ் அச்சு நூல்களை -உடனடியாகச் சேகரித்து, ஆய்வுரையுடன் மீண்டும் மறுபதிப்பு செய்வதுதான்!

தம்பிரான் வணக்கம்!

http://www.tamilmantram.com/vb/photogal/images/83/large/1_tamil3.jpg

தமிழ் அச்சு எழுத்துக்களுடன் முதன்முதலில் வெளியிடப்பட்ட ‘தம்பிரான் வணக்கம்’ 1578-ல் கொல் லத்தில் வெளியானது. இதை தமிழில் மொழிபெயர்த்தவர் தமிழ் அச்சு நூலின் தந்தை எனப் போற்றப்படும் ஹென்றிக்ஸ் பாதிரியார். தூத்துக்குடி பகுதியில் உள்ள மீனவர்கள் அளித்த நன்கொடையினாலேயே முதல் தமிழ் அச்சு நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை அவரே நன்றியுடன் கூறியுள்ளார்!

http://www.tamilmantram.com/vb/photogal/images/83/large/1_tarangampadi_tamil.JPG

நன்றி - விகடன்; விருபா ; கற்க-நிற்க; தமிழ் ஹெரிட்டேஜ்

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்