தமிழ் வரலாறு திராவிட மொழிகள் பற்றிப் பிற நாட்டார் ஆய்வுகள்!

திராவிட மொழிகள் பற்றிப் பிற நாட்டார் ஆய்வுகள்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ் வரலாறு  
படம்

# A Comparative Grammar of the Korean Language and the Dravidian Language of India என்ற நூல் 1905 ல் சியோல் நகரில் தி மெதடிசுடு பப்ளிசிங் அவுசு வெளியிட்ட நூலாகும். பி.ஒமர் அல்பர்ட்டு இந்நூலெழுதி நூற்றாண்டு ஆகிறது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கொரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் ஒப்பிலக்கணம் உண்டு என உணர நூறாண்டு ஆகி விட்டது.

# The Genealogy of the Japanese Language: Tamil and Japanese என்ற தலைப்பில் “சப்பானிய மொழியின் மரபியல்: தமிழும் சப்பானியமும்” என்ற நூலெழுதிய சுசுமோ ஓனோ பற்றி நமது ஊடகங்களில் செய்தி வந்ததுண்டா? “சப்பானிய மொழி திராவிட மொழியே” என்று டாக்டர் பொற்கோ, நந்தன் (1998 சூலை) இதழில்தான் எழுத முடிந்தது. இதுபற்றி ஆங்கில ஏடுகள் ஏன் வெளியிடுவதில்லை? வெளியிடாத அந்த ஏடுகள் ஏன் தமிழின் பெருமைமிகு வரலாற்றை மறைக்கப் பார்க்கின்றன என நாம் எண்ணிப் பார்த்தோமா? அவற்றின் உள்நோக்கம் உணர்ந்த பிறகாவது நம்மிடமுள்ள தொலைக்காட்சி ஊடகங்களை உண்மையை வெளிக்கொணர நாம் பயன்படுத்தினோமா?

# திராவிட மொழிகள் பேசுவோர் 20 கோடியாகும். ஊரல் இன மொழிகளான அங்கேரியன் 1.40, ஃபின்னிசு 0.50, எசுதோனியன் 0.10, மார்த்வின் 0.30 என சுமார் 2 கோடி முப்பது லட்சம் பேராவர். அல்டாய்க் மொழிகளைப் பேசுவோர் பட்டியலில் துருக்கி 4.50, பிற துருக்கிய இன மொழிகள் 5.50, மங்கோலியன் 0.50, எனச் சுமார் 10 கோடியே ஐம்பது இலட்சம் பேருள்ளனர். சப்பானிய மொழி பேசுவோர் 12 கோடியும் கொரிய மொழி பேசுவோர் 6 கோடியும் உள்ளனர். பெருநாட்டில் கொசுவா மொழி பேசுவோர் 1.20 கோடியாவர். ஆக மிக நெருங்கிய ஒற்றுமை கொண்ட ஒட்டுநிலை மொழிகளை (Agglutinative Languages) பேசுவோர் 50 கோடிக்கும் மேலாவர்.

இம்மொழிகள் பற்றி வெளிவந்துள்ள நூற்களைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

1. A Comparitive Grammar of the Dravidian: Languages: A Robert Caldwell (1856)

2. Attinites Des Langues Dravidianness et des langues oural – Altaiques: C. Schoebel: 1873

3. Dravidisch and Uralisch in Zeitschrift fur Indologies and Iranistik: Oho Schrader (1925)

4. Dravidian studies IV : The body in Dravidian and Uralian: T. Burrow (1943-46)

5. Dravidian and Uralian: A Peep into the Prehistory of Language Families: Two lectures on the Historicity of Language Families: M Andronay (1968) அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

6. Dravidian and Uralian : The Lexical Evidence (1968)

7. The Dravido – Altaic Relationship: Some Views and Future Prospects (1987) (செக்கோசுலாவியா)

8. Dravidian Linguistics an Introduction: V. Kamil Zvelebil (1990) புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

9. 1000 Duraljan Etyma : An Extended study in the lexical similarities in the Major Agglunitative Languages (2000) பின்லாந்து

10. Migration and Diffusion (வியன்னாவிலிருந்து வெளியான தொகுதி 1-3, சூலை செப்டம்பர் 2000) இதழில் பக்கங்கள் 62க்கம் 80க்கும் மிடையே பின்லாந்தின் உக்ரோ மொழி பேசுவோருக்கும் பாசுக்கு மொழி பேசுவோருக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள், கி.மு. 7000 அளவில் திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிகளுக்கும் இடையே நிலவிய ஒற்றுமைப் பண்புகள் பற்றி பேராசிரியர் Bemon Zoigniew, Szalek எழுதியுள்ளனர்.

தமிழ்ச் சொற்கள் என்ற நூலில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழில் எழுதப்பட்ட இந்த நூலை எத்தனைத் தமிழாசிரியர்கள் வாங்கிப் படித்திருப்பர்? எத்தனை பேர் படித்ததை வகுப்பறைகளில் மாணாக்கர்களுக்குப் போதித்திருப்பர்? மாலை வேளைகளில் ஒலிப்பெருக்கி பிடிக்க வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல இளவயதில் மனப்பாடம் செய்த சில பாடல்களையே திரும்பத் திரும்பக் கூறுவதால்விளைந்த பயனென்னா?

அதற்குப் பதில் தமிழில் உள்ள இதுபோன்ற நூலில் சொல்லப்பட்ட சில செய்திகளையாவது வெளியில் பரப்புரை செய்ய முன்வருவாராயின் உலக முதன்மொழி தமிழென்ற உண்மை ஒவ்வொரு தமிழனுள்ளத்திலும் பதியாதா?

தமிழின் பெருமையை நிலைநாட்ட உலகெங்கிலும் எடுத்து வைக்கப்படும் வாதங்களை விடாமல் கூர்ந்து கவனித்துக் குறித்து வைத்துக் கொண்டு உரிய முறையில் பதிவு செய்பவர்கள் சிலர் உளர். அவர்களுள் பி. இராமநாதன் க.மு.ச.மு.தனியிடம் பெறுகிறார். ‘சிந்துவெளித் தொல் தமிழ் நாகரிகம்’பற்றி தமிழிலும் “A New Account of the History and Culture of the Tamils”என ஆங்கிலத்திலும் அவரெழுதிய நூல்களை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. அவரை எத்தனை மேடைகளில் தமிழறிஞர்கள் ஏற்றி இருப்பார்கள்? நம்மால் முடியாத பணியை நம்மில் ஒருவன் ஆற்றுங்கால் உவந்து அவன் அறிவுழைப்பைப் போற்றும் அறவுணர்ச்சியும் தமிழார்வலர்களிடையே அற்றுப் போய்விட்டதா?

நம்மவர் சோம்பலை நன்குணர்ந்து பெருந்தமிழ் அறிஞர் இரா. மதிவாணன் நூல்களைப் படிக்காத சோம்பேறிகளும் உரித்த வாழைப்பழத்தை உண்பதுபோல எளிதாக எடுத்தாளட்டும் என தமிழைப் என தமிழைப் பற்றியும் தமிழ்ப்பண்பாடு பற்றியும் தகைசால் அறிஞர்கள் கூறியதை திரட்டி ஆங்கிலத்தில் “Quotations on Tamil and Tamil Culture” என நூலாக்கியுள்ளார். இருமொழி அறிந்தோர் அதைத் தமிழாக்கலாமே!

அன்றி புதுப்புது மேற்கொள்களைத் திரட்டி புது நூலியற்றலாமே! அதுவும் இயலாததாயின் மேற்கோளாகவாவது பயன்படுத்தி தமிழின் பெருமையை நிலை நாட்டலாமே!

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே’ என்ற ஒரு வரியை மட்டும் ஆயிரமாண்டுகள் சொல்லிச் சொல்லித் தமிழின் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கப்போகிறோமா? புதிய அறிவியல் செய்திகள், ஆய்வுகள், அறிஞர் முடிவுகள் துணையோடு நம் தொன்மையை நிறுவத் துடிப்புடன் பாடாற்றாமல், சோம்பிக் கிடக்கும் தமிழறிஞர் தமிழின் அக புறப்பகைவர்களின் தமிழழிப்பு பணி தொடர்வதை வேடிக்கை பார்க்கப் போகிறார்களா?

செய்தித்தாள்களைப் படிக்கும் தமிழறிஞர்கள் தாங்கள் எழுதிய கட்டுரை வெளிவருமாயின் அதை மடுமே படிக்கும் இயல்பினராக உள்ளனர். தமிழுக்கு ஏற்றம் தரும் செய்திகளைப் படிப்பதுமில்லை. பரப்புவது மில்லை என்பது என் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக ஒரு செய்தி.

பூம்புகார் அருகே 9500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய நகரம்: (விஞ்ஞானி தகவல்: – தினமணி டிசம்பர் 4 -2002.)

‘பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார். வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா? உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை?

கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும்.

குமரிக்கண்டம்
குமரிக்கண்டம்

‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது. இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள்.

இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர்)

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன”

என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

# பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது. இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன.அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

நன்றி: நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்