தமிழின் பெருமைகள் மறைக்கப்பட்ட தமிழ் & தமிழனின் பெருமைகள்!

மறைக்கப்பட்ட தமிழ் & தமிழனின் பெருமைகள்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழின் பெருமைகள்  
படம்

    பெரியார் பேசத் தொடங்கும் முன் தலைவர்களே! தோழர்களே! என்று மட்டுமே கூறிவிட்டு தொடங்குவார். அனைவரின் பெயர்களையும் கூறுவதற்கே அதிக நேரம் ஆகிவிடும். அதனால் பெரியாரின் வழியில் நானும் அனைவருக்கும் வணக்கம் சொல்லிக்கொள்கிறேன்.

    ரமேஷ்பிரபா நூலை தவரித்து மலர் என்று சொல்லுவோம் என்றார். அவர் தவிர்க்கச் சொன்ன நூல் பூநூல். நம் தமிழர்கள் மலரை மாலையாக தொடுக்க நாரினைதான் பயன்படுத்துவர். வாழைநாரே இயற்கையானது. நூல் என்பது செயற்கையானது. எனவே செயற்கையான நூலை தவிர்ப்போம்.

    அறிவியல் பார்வை என்பது நம்மை பற்றி நாம் அறிய, நமக்குள்ளே நம்மை சிந்திக்க வைப்பது. அடிப்படை நிலை என்ன என்பது புரிந்துவிட்டால் எல்லம் எளிதாகிவிடும். நமது அறிவியல் அறிவு இன்று மதங்களால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.சாதி என்பது தொழில் முறையால் உருவாக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்டுள்ளது. உண்மையில் தொழில் முறையால் இழிவு என்பது கிடையாது. இழிவை ஏற்படுத்தியவை வர்ணமும் மதமும்தான்.

    மருத்துவம் என்ற சாதி தமிழில்தான் இருக்கிறது. பிரசவத்திற்காக தனியான படிப்பு எதுவும் படிக்காவிட்டாலும் பிரசவம் பார்க்கக் கூடிய தகுதியுடையவர்கள் அவர்கள். குழந்தைக்கு வயிற்று போக்கு என்றால்... மருந்து,  மாத்திரை, ஊசி என்று கொடுத்து அந்தப் பிஞ்சு உடம்பை புண்ணாக்கி விடுகிறார்கள். ஆனால், நமது கிராமப்புறத்தில் உள்ள மூதாட்டியர்களிடம் காட்டினால், வயிற்றைத் தட்டிப் பார்த்தே காற்று அடைத்திருக்கிறது, மாந்தம் ஏற்படிருக்கிறது என்று கூறிவிடுவார்கள். அதுமட்டுமில்லாமல், பால் கொடுக்கும் தாயிடம் என்ன உணவு உண்டாய் என்று விசாரித்து, தாய் உண்ட உணவு தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு சென்று,  இது போன்ற வயிற்றுப் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறி... தாய் என்னென்ன சாப்பிடவேண்டும் என்ற ஆலோசனையையும் வழங்குவார்கள்.

    அப்படிப்பட்ட மருத்துவச்சி பெற்றப் பிள்ளைக்கு 2 மதிப்பெண் குறைந்தால் மருத்துவம் படிக்க அனுமதி கிடைப்பதில்லை. இவர்களுக்கு கிடைக்காத மருத்துவம் யார் யாருக்கோ கிடைக்கிறது. அப்படி வாய்ப்புக் கிடைத்து டில்லியில் மருத்துவம் படித்துவிட்டு வருபவர்கள், கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கச் சொன்னால், இங்கு வந்து தெருக்கூட்டுவதா என்கிறார்கள்.


    தமிழன் அடிப்படையிலேயே அறிவுடையவன். “உஷ்ணதேசத்து பாம்புக்கு விஷம் அதிகம்.  உஷ்ணதேசத்து தாவரத்திற்கு வீரியம் அதிகம். பிறகு எப்படி உஷ்ணதேசத்து மனிதன் மட்டும் முட்டாளாவான்? ” என்று பெரியார் கேள்வி கேட்பார். சிந்துவெளி நாகரிகக் காலத்திலேயே கட்டிடக் கலையில் சிறந்து விளங்கியவன் தமிழன். அன்றே அவன் கழிவுநீரை அகற்ற கால்வாயை வடிவமைத்தவன். இந்தகைய தமிழனின் அறிவு நுட்பத்தைதான் இன்றுவரை பிற நாடுகளில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    தமிழனின் அறிவை பறித்து மறைத்து வைக்கப்பட்டதற்கு பேர்தான் ‘மறை’வேதம். இருப்பதை பகிர்ந்து அளிப்பதுதானே சிறந்த அறிவு.அப்படி பகிர்ந்தளிக்காமல் மறைத்து வைப்பதற்கு பேர் வேதமா?. அவர்களிடம் இருந்து போராடி நமக்கான அறிவையும், பெருமையினையும் தக்க வைத்திட வேண்டும்.

    அழகு, கவர்ச்சி, எளிமையோடு சொல்லப்படும் ஒன்றுதான் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். அந்த வகையில் இந்த அறிவியல் மலர் உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குறியது. தணிகைச்செல்வன் இந்த மலரில் குறிப்பிட்டிருப்பது போல், சந்திரனை தொட்டுவிட்டோம் என்றால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சூரியனை தொட்டுவிட முடியுமா? என்று வாக்குவாதம் செய்வார்கள். அவர்களின் அத்தகைய கேள்வியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு அடுத்த அறிவியல் கண்டுப்பிடிப்புக்கு தூண்டுதலாக இருக்கும்.

    பூமி மற்றும் வானியல் குறித்த அறிவியல் கருத்துக்களை உலகிற்கு தெரியப்படுத்திய கலிலியோவின் மீது 474 வழக்குகளை போப் ஆண்டவர் தொடுத்திருந்தார். இந்த வழக்குகளால், தனது ஆய்வுப் பணியை விட்டுவிட்டு, 47 வழக்கறிஞர்கள் மற்றும் 17 நீதிபதிகளை கலிலியோ சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அன்பில் விளைந்த தேவசபை கலிலியோமீது கொஞ்சமும் அன்பு, இரக்கமின்றி அவரை வருத்தெடுத்தது. கலிலியோவின் மீது வழக்கு தொடுத்தே, போப் ஆண்டவரின் கஜானாவே காலியாகிவிட்டதாம். இப்படி கலிலியோ, அரிஸ்டாட்டில், புருனோ, கோபர் நிகாஷ் போன்றவர்களின் அறிவியல் உண்மைகளை உலகிற்கு தெரியவிடாமல் மதவாதிகள் தடுத்தனர்.   
    

    மணப்பாறை முறுக்குக்கு காப்புரிமை பெறுவது பற்றி வின்சென்ட் என்னிடம் பேசியுள்ளார்.  நாம் அதற்கு காப்புரிமை பெறவில்லை என்றால் அதை ரிலையன்ஸ்காரன் பெற்றுவிடுவான். இப்படித்தான் இன்று நமது எத்தனையோ இயற்கை வளங்களுக்கும், மருந்துவ குணம்கொண்ட மூலிகைகளுக்கும் அன்னிய நிறுவனங்கள் காப்புரிமை பெற்றுவிட்டன.

    நமது சமலறை சாமான்களான கடுகு, சீரகம், சோம்பு, இஞ்சி,மிளகு என எல்லாமே மருதுவக்குணம் நிறைந்தவை. இவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே எந்த நோயும் நம்மை அண்டாது. ஆங்கிலத்தில் பருப்பு வகைகளுக்கு நட்ஸ் (nuts), பீன்ஸ் (beans), கிராம்ஸ்(grams) என மூன்றே பெயர்கள்தான். ஆனால் தமிழில் கடலை, உளுந்து, மொச்சை, அவரை, துவரை, பச்சை, பாசிப்பயிறு என்று ஏகப்பட்டப் பெயர்கள் உள்ளன.

    ‘பிரட்’ தயாரிக்கும் போது ஈஸ்ட் என்ற ஒரு செயற்கை நொதிப்பொருளை பயன்படுத்துவார்கள். ஆனால், அரிசியும் உளுந்தும் மட்டுமே கலந்து உருவாகும் நமது இட்லி மாவு தானே நொதிக்கும். கையால் ஆட்டப்படும் மாவுக்கு கைச்சூட்டினால் சுவையும் கூடும், அதே நேரம் நொதிப்பதற்கு கைச்சூடு உந்துதலாக இருக்கும் என்பதை தமிழன் அறிந்து வைத்திருந்தான்.

    இது போன்ற இயற்கையாகவே அறிவு நுணுக்கம் கொண்ட தமிழனின் பாரம்பரிய இயற்கை பொக்கிஷங்களான கடுகு, சீரகம். மிளகு, திப்பிலி போன்ற பலவற்றிற்கு இன்று வெளிநாடுகள் காப்புரிமை வாங்கிவிட்டன. உலக மயமாக்கல் வணிகமுறை, சர்வதேச வர்த்தகம் போன்றவற்றால் மலை வேம்பு, இஞ்சி போன்ற அரிய மருந்துவ தாவர வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

    வேம்பில் மலை வேம்பு, நில வேம்பு என்று இரண்டு வகையுண்டு. நில வேம்பு சிக்கன் குனியா நோயை முற்றிலும் குணமாக்கக்கூடியது. அன்று அம்மைத் தடுப்பூசி என்று ஒரே ஒரு முறைப் போடுவார்கள். குழந்தையாக இருக்கும் போது ஏற்பட்டத் தழும்புகூட நமக்கெல்லாம் இன்னும் மறையவில்லை. ஆனால் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு பிறந்த மூணு மாதத்தில், ஆறுமாதத்தில், எட்டு மாதத்தில் என்று தடுப்பூசிகளை போட்டுக்கொண்டே இருக்கிறோம். இதன் பாதிப்பு இப்போது தெரியாது. இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரிவர்களான பிறகுதான் தெரியும், என்ன? விளைவைத் தரும் என்று.

    இன்று கணினித்துறை மாணவர்கள் அந்தத் துறையல்லாத பிறவிஷயங்கள் பற்றிய தெளிவு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். தகவல் தொழில் நுட்பம் படித்த மாணவனுக்கு அவன் வேலைப்பார்க்கும் அலுவலகத்தில் சம்பளப் பிரச்சனையோ, இல்லை வேறு ஏதோ ஒரு சிக்கலோ ஏற்பட்டால் அது குறித்து எப்படி வழக்கு தொடுக்க வேண்டும் என்ற அடிப்படை தகவல்கள்கூட தெரியாமல் இருக்கிறார்கள். இன்னும் சொன்னால், அவர்கள் பிரச்சனையை ஒரு வழக்கறிஞரிடமோ, காவல் நிலையத்திலோ முறைப்படி எப்படி தெரிவிக்க வேண்டும் என்பதும்கூட தெரிவியவில்லை அவர்களுக்கு. இதே தெரியாமல் என்ன தகவல் தொழில் நுட்பத்தைப் படித்தார்களோ தெரியவில்லை.

    ஐ.டி.ஐ நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் பணிக்கு போவதை கவனித்தால் ஒன்று தெரியும். அவர்களை மொத்தமாக ஒருவண்டியில் ஏற்றிக்கொண்டு போய் மீண்டும் மொத்தமாக ஏற்றிக்கொண்டு வந்து விட்டு விடுவார்கள். பகலெல்லாம் தூங்குவார்கள். இரவெல்லாம் வேலை பார்ப்பார்கள்.இப்படி இராப்பகலா வெளி நாட்டுக்காரனுக்காக வேலைப்பார்க்கும் நம்ம பிள்ளைகளுக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்துவிடும். இதில் வேலைப்பார்க்கும் இரண்டுபேர் கல்யாணம் கட்டிக்கிட்டா குழந்தை பிறக்கமாட்டேங்குது. சோதிச்சா பையனுக்கு ஆண்மைக்குறைவு, பொண்ணுக்கு கர்ப்பப்பை கோளாறு என்கிறார்கள்.

    இப்படி இவர்களுக்கு ஏற்படும் விளைவுகளுக்காக அந்தந்த நிறுவனத்திலேயே  மருத்துவமனைகளையும் அமைத்துள்ளனர். மருந்து மாத்திரையில் இந்தப் பிரச்சனை தீரவில்லையென்றால் சோதனைக் குழாய் மூலம் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுரையும் கூறுவார்கள். இப்படி சிகிச்சை அளிக்கிறோம் என்கிற பேரில்,  இவர்கள் இரவு பகலா உழைச்சதுக்கு அவர்கள் தந்த ஆயிரக்கணக்கான சம்பளத்தை, லட்சக்கணக்கில் மீண்டும் அவர்களே மருத்துவ செலவு கணக்கில் திரும்பவும் பிடிங்கிவிடுகிறார்கள்.  

    இந்தத் தலைமுறை ‘அறிவியல் போர்’ என்ற ஒன்றை சந்தித்து வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம் செல்போன். செல்போன் என்பது இன்று எல்லோரிடமும் இருக்கிறது. மனச்சோர்வு, அலைக் கதிர்வீச்சு தாக்கத்தினால் புற்றுநோய் போன்ற நோய்கள், விவாகாரத்து, விபத்து இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இந்த செல்போனால் ஏற்படுகிறது.
 
    ரமேஷ் பிரபா, மகப்பேறு மருத்துவர் ஞான சௌந்தரி மருத்துவ புத்தகத்தை தமிழில் எழுதியிருப்பது பற்றி குறிப்பிட்டார். ஞான சௌந்தரி பிரசவம் பார்த்த ஒரு பெண்ணுக்கு காய்ச்சல் கட்டுக்கடங்காமல் இருந்தது. என்ன செய்தும் அவரால் காய்ச்சலை குணப்படுத்த முடியவில்லை. காய்ச்சலுக்கான காரணமும் தெரியவில்லை. அப்போது கிராமத்துப் பாட்டி ஒருவரிடம் இது பற்றி ஞான சௌந்தரி கேட்டிருக்கிறார்.

    அதற்கு அந்தப் பாட்டி, அந்தப் பொண்ணு உடம்பிலிருந்து கெட்ட வாடை அடிக்குதா? என்று கேட்டிருக்கிறார். ஆமாம் கெட்ட நாற்றம் வந்தது என்று இவரும் சொல்லி இருக்கிறார். பிரசவம் பார்த்தப்போது ‘தொடக்கு’ வெளியே வந்துச்சா என்று கவனித்தாயா? என்று பாட்டி மறுபடியும் கேட்க, அதற்கு ஞான சௌந்தரி பார்க்கவில்லை என்றிருக்கிறார்.

    ‘தொடக்கு நாறினால் முடக்கிப் போட்டு விடும். போய் தொடக்கு வெளியில் வந்துடுச்சா என்று பார்த்து அதை அகற்று’ என்று பாட்டி ஆலோசனை கூறினாராம். அதன்படியே தொடக்கு என்று சொல்லக் கூடிய நச்சுக்கொடியை அகற்றிய பிறகு அந்தப் பொண்ணுக்கு காய்ச்சல் குறைந்திருக்கு. இப்படிப்பட்ட மருத்துவ நுணுக்கங்களைக்கூட பேச்சுவாக்கில் பழமொழியாக  “தொடக்கு நாறினால், முடக்கிப் போட்டுவிடும்” என்று கிராமத்தில் கூறுவது வழக்கம்.

    நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களை பற்றி...


பழந்தமிழன் அறிந்திருந்தான் என்பதற்கு, நட்சத்திரங்கள் - உடு, நட்சத்திரக் கூட்டம் - உடுமீன்கள் என்று தமிழில் குறிப்பிடப்படுவதும் மற்றும் ஞாயிறு போன்ற தமிழ்ச் சொற்களும் சான்றாகும். செவ்வாய் என்ற சொல், செவ்வாய்க் கோள் சிவப்பானது என்பதை குறிப்பிடுகிறது. சனிக் கோளினை சுற்றி இருக்கும் கரிய வளையத்தை குறிக்கும் விதத்தில், சனிக்கிரகம் - கரியன் என தமிழில் அழைக்கப்படுகிறது. கலிலியோ தொலைநோக்கி மூலம் வான மண்டலத்து கோள்களைப் பற்றி கண்டறிந்து சொல்வதற்கு முன்பே தமிழன் அவற்றைப் பற்றி அறிந்திருந்தான்.  

    தமிழ் மறையாம் திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை. நீர்மேலாண்மை,  விவசாயம், வணிகவியல், மேலாண்மையியல், பொருளாதாரம் என்று எல்லாத் தொழில் துறைக்கும் ஏற்ற, பயன்படக்கூடிய கருத்துக்கள் திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளுன. அந்தந்தத் துறை சார்ந்த திருக்குறளை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களுக்கு படிக்கக் கொடுக்கவேண்டும்.

     இத்தகைய தமிழின் சிறப்பும், தமிழர்களின் அறிவியல் நுட்பமும் ஆரியர்களால் மறைக்கப்பட்டே வந்துள்ளன.  இன்னும் இதே பணிகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. தமிழின் வரலாற்றினையும் பெருமையினையும் மறைத்து சமஸ்கிருதத்தை முன்னிலைப் படுத்தும் பணிகள் கலாச்சேத்திரா, சரஸ்வதி வித்தியா பவன் போன்ற அமைப்புகள் மூலம் நடந்தேறிவருகின்றது.

    வலுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்றுக் கொண்டவர்தான் ருக்குமணி அம்மையார். அதுவரை சேரிப்புறத்தானும் கற்று வளர்த்த நம் பாரம்பரிய கலையான பரத நாட்டியம், ருக்குமணி என்னும் ஒரு அம்மையார் வந்தப் பிறகு பரதக்கலை, ‘அவாள்’ கலையாகிவிட்டது. நமது ராமையா பிள்ளை கற்றுத் தந்த பரதம் இன்று நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு வராது என்று கூறுகிறார்கள் அவர்கள்.

    எனவேதான் தமிழின் தனிச்சிறப்புகள், தமிழனின் அறியல் நுட்பம்,பெருமைகள் பற்றிய உண்மைகளை உள்ளபடி இனிவரும் தலைமுறைகளுக்கு கொண்டுச்சேர்க்கும் பணியை செய்ய வேண்டியது மிகமிக தேவையான ஒன்றாகும்.


தொகுப்பு : நா. இதயா , ஏனாதி..

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்