இந்தியா "பாரத் மாதா கி ஜே" கூற மறுத்த ஒவைசிக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

"பாரத் மாதா கி ஜே" கூற மறுத்த ஒவைசிக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

'பாரத் மாதா கி ஜே' என கூறமாட்டேன் என அறிவித்த, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஒவைசி மீதும், அக்கட்சி எம்.எல்.ஏ., வாரிஸ் பதான் மீதும் நடவடிக்கை எடுக்கவும், கட்சியை தடை செய்யவும் கோரி, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ம.பி., சட்டசபையில், ஒவைசிக்கு எதிராக, கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

''மக்களிடம் தேச பக்தியை வளர்க்க வேண்டும்; பள்ளி மாணவர்களிடம் தேசிய சிந்தனையை ஏற்படுத்த, 'பாரத் மாதா கி ஜே' வாசகத்தை கூற, எல்லாரையும் பழக்கப்படுத்த வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்.,தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார்.

'சஸ்பெண்ட்':

இதற்கு, அகில இந்திய மஜ்லிஸ் - இ இத்தேஹதுல் முஸ்லிமின் எனப்படும் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதின் ஒவைசி, கடும் கண்டனம் தெரிவித்தார். ''கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினாலும், பாரத் மாதா கி ஜே என கூறமாட்டேன்,'' என்றார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து, மஹாராஷ்டிர சட்டசபையில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., உறுப்பினர் வாரிஸ் பதான் கூறுகையில், ''ஜெய் ஹிந்த் என கூறுவோம்; பாரத் மாதா கி ஜே என, ஒரு போதும் கூறமாட்டோம்,'' என்றார். இதையடுத்து அவர், மஹாராஷ்டிர சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மும்பை ஐகோர்ட்டில், 'ஊழலுக்கு எதிரான பாரதம்' என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில், அதன் தலைவர்

ஹேமந்த் பாட்டீல் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: பாரத் மாதா கி ஜே என கூறமாட்டேன் என்று ஒவைசியும், அவரது கட்சி எம்.எல்.ஏ., வாரிஸ் பதானும், பகிரங்கமாக கூறியுள்ளனர். நாட்டை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதன் மூலம் நாட்டில் மத ஒற்றுமையை சீர்குலைப்பதோடு, தேசிய ஒருமைப்பாட்டையும் சிதைக்கின்றனர்.

கட்சியை தடை செய்யணும்:

இந்த தேச விரோதபேச்சால், நாட்டில் சமூக ஒற்றுமை பாதிக்கப்படும். மத அடிப்படையில் மக்களிடம் பிரிவினை ஏற்படவும் வழிவகுக்கும். இது பற்றி விசாரணை நடத்தி, ஒவைசி மற்றும் பதான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் இருவரின் பேச்சும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறுவதாக உள்ளது. அத்துடன், அரசியல் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கே விரோதமாக அமைந்துள்ளது. தேச விரோதமாக மட்டுமின்றி, மத விரோதத்தை துாண்டும் வகையிலும், ஒவைசி தொடர்ந்து பேசி வருகிறார். அதனால், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியை தடை செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பாரத் மாதா கி ஜே, ஜெய்ஹிந்த்' ஆகிய இரண்டு கோஷங்களும் ஒன்று தான். யாருக்கு எது விருப்பமோ அதை கூறலாம். ஒரு கோஷத்தை கூற மறுப்பவர்களை, தேச விரோதிகள் என கூற முடியாது. மஹாத்மா காந்தியை கொன்ற அமைப்பை சேர்ந்தவர்கள், பாரத் மாதா கி ஜே என, தேச பக்தியுடன் கூறுகின்றனர் என்றால் யாராலும் நம்ப முடியாது. எதையும், யார் மீதும் திணிக்கக் கூடாது.
பிருந்தா கராத்,மார்க்சிஸ்ட் பொலிட்பீரோஉறுப்பினர்

பொறுக்க மாட்டோம்:

மத்திய பிரதேச சட்டசபையில், ஒவைசி மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மத்திய பிரதேச சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று பூஜ்ய நேரத்தின் போது ஒவைசியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் உறுப்பினர் பட்வாரி, தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.இந்த தீர்மானத்தை வழி


மொழிந்து, சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பேசுகையில், ''ஒவைசி போன்றவர், தேச விரோதமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தியாவில், 'ராமரும், ரஹீமும்' ஒன்றாகவே மதிக்கப்படுகின்றனர். இதை சீரழிக்கும் வகையில் சிலர் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது,'' என்றார். பின், ஒவைசிக்கு எதிரான கண்டன தீர்மானம், 'பாரத் மாதா கி ஜே' கோஷத்துடன், சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

ஓட்டுரிமை தராதீங்க:

ஒவைசி மற்றும் பதானின் பேச்சு குறித்து சிவசேனா பத்திரிகையான'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:'பாரத் மாதா கி ஜே' என கூற மறுப்பவர்களின் குடியுரிமையை ரத்து செய்து, ஓட்டளிக்கும் உரிமையையும் பறிக்க வேண்டும். முதலில், 'வந்தே மாதரம்' என கூறமாட்டோம் என்றனர்; பொது சிவில் சட்டத்தை ஏற்கமாட்டோம் என்றனர். இப்போது, பாரத் மாதா கி ஜே என கூறமாட்டோம் என்றனர். அப்படியென்றால், இந்தியாவில் ஏன் இருக்கிறீர்கள்? என, நாங்கள் கேட்டால் மட்டும் கோபம் அடைகின்றனர். ஒவைசிக்கு எதிராக, பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டு, முஸ்லிம்கள்அணி திரள வேண்டும்.முன்னாள் ஜனாதிபதிகள் ஜாகீர் உசேன், அப்துல் கலாம் ஆகியோர் போல், இந்தியா மீது பற்றுடன் வாழ்வது தான் ஒவைசிக்கு, முஸ்லிம்கள் அளிக்கும் சரியான பதிலடி.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்