தூதுவளை மருத்துவ குணங்கள் : சளி, இருமலை போக்கும் தூதுவளை
தூதுவளை, தும்பை, கொள்ளு ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இவைகளை பயன்படுத்தி உடலுக்கு நன்மை தரும் ரசம் தயாரிக்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட தூதுவளை நீல நிற பூக்களை கொண்டது. இதன் இலைகளின் பின்புறம், காம்புகளில் முட்கள் இருக்கும். தூதுவளை ஆயுளை கூட்டும் மருந்தாக விளங்குகிறது. இது, சளியை கரைக்க கூடியதாக அமைகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
தூதுவளையை பயன்படுத்தி இருமல், சளியை போக்கும் ரசம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தூதுவளை இலை, பூக்கள், பெருங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, கொத்துமல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, புளிகரைசல், கடுகு, நல்லெண்ணெய், உப்பு. நல்லெண்ணெய் விட்டு அதில் சிறிது பெருங்காய பொடி, கடுகு, மிளகாய் வற்றல், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் தூதுவளை இலை, பூக்கள் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு, மஞ்சள் பொடி, புளிகரைசல் சேர்க்கவும்.
தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் மிளகு, சீரகம், பூண்டு கலவை சேர்த்து கொதிக்க வைக்கவும். அதிகமாக கொதிக்க வைக்க கூடாது. இந்த ரசத்தை குடித்துவர இருமல், சளி சரியாகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது. முட்களை நீக்கிவிட்டு தூதுவளை இலைகளை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா சரியாகும். தேனீராக்கி குடிப்பதன் மூலம் உள் உறுப்புகள் தூண்டப்படும்.
தும்பை இலைகளை பயன்படுத்தி ரசம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
தும்பை இலை, மிளகாய் வற்றல், கொத்துமல்லி, கறிவேப்பிலை, புளிகரைசல், நல்லெண்ணெய், மஞ்சள், கடுகு, உப்பு, மிளகு, பூண்டு, சீரகம். நல்லெண்ணெய் விட்டு, பெருங்காய பொடி, கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் மற்றும் தும்பை இலைகளை துண்டுகளாக்கி போடவும். இதனுடன் சிறிது மஞ்சள் பொடி மற்றும் மிளகு, சீரகம், பூண்டு சேர்ந்த கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
புளிகரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த ரசத்தை குடித்துவர காய்ச்சல் தணிகிறது. உடல் வலி குறைகிறது. இருமல் இல்லாமல் போகிறது. ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது. உள் உறுப்புகளை விரைவாக இயங்க வைக்கிறது. சளி நீக்கியாகவும், காது வலியை சரிசெய்யக் கூடியதாகவும் அமைகிறது.
ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. ஒற்றை தலைவலி இருப்பவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம். அற்புத மூலிகையான தும்பையை துவையலாக சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். இதேபோல் கொள்ளுவில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொள்ளு ரசம் வைத்து சாப்பிடும்போது உடல் எடை குறையும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்து குறையும். ஆரோக்கிய உணவாக விளங்கும் கொள்ளு அற்புதமான மருந்தாகிறது.