ஆரோக்கியம் தினசரி உணவில் 25 - 30 கிராம்நார்ச்சத்து அவசியம்!

தினசரி உணவில் 25 - 30 கிராம்நார்ச்சத்து அவசியம்!

பதிவர்: நிர்வாகி, வகை: ஆரோக்கியம்  
படம்

சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயை, மது மோகம், இனிப்பு மோகம் என்கிறோம். இது பித்தத்தைச் சேர்ந்த நோய். இதை உணவு, உடற்பயிற்சி, மருத்துவத்தால் கட்டுப்படுத்தலாம்.நேரத்துக்கு சாப்பாடு, உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி இவையெல்லாம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

எண்ணெய்க் குளியல் அவசியம்; மண்பாண்டங்களில் சமைத்த உணவுகள் நலம். துரித உணவுகளைத் துரத்தி விட்டு, நம் பாரம்பரிய உணவு முறையை நாடினால், ஆரோக்கியம் சீராகும். மொத்தத்தில், மனிதன் இயற்கைக்குத் திரும்ப வேண்டும்.சர்க்கரை நோயாளிகளுக்குக்காக தனியே சமைக்க தேவையில்லை. சர்க்கரையின் அளவை அதிகரிக்காத எந்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம். சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

இது, உங்களது பசியைக் குறைத்து, உணவு எடுத்துக் கொள்ளும் அளவையும் குறைக்கும். மூன்று வேளை சாப்பிடும் உணவை, ஐந்து அல்லது ஆறு வேளைகளாக பிரித்துச் சாப்பிடலாம். அலுவலக வேலைகளில், 'பிசி'யாக இருப்போர், காய்கறி மற்றும் பழங்களை, 'சாலட்'டாக சாப்பிடலாம். தினசரி உணவில், குறைந்தது, 25 - 30 கிராம் நார்ச்சத்துள்ள உணவு அவசியம். அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை பிரச்னைக்கு, மருந்து, மாத்திரைகள் இருப்பதால், பலரும் உணவுக் கட்டுப்பாடு இல்லாமல் கண்டதையும் சாப்பிடுகின்றனர்; பின், மாத்திரைகளை அள்ளி விழுங்குகின்றனர். ஒரு கட்டத்தில், இந்த மருந்து, மாத்திரைகளின் வீரியம், கிட்னியை காலி செய்துவிடும். அழுத்தத்தைத் தாங்கக் கூடிய கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்பட்டு, கால்களைத் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னை உருவாகலாம் என்பதால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதயப் பிரச்னை வருவதற்கு மிக முக்கியக் காரணம், சர்க்கரை நோய் தான் என்பது, 100ல், 90 பேருக்குத் தெரியாமல் உள்ளது. பெண்களைப் பொறுத்தவரையில், ஹார்மோன்கள் இதயத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும். அதையும் மீறி, சர்க்கரை நோய், அதீத வேலைப் பளு, பரம்பரை நோய் தொடர்ச்சி போன்ற காரணங்களால், இதயம் சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.

இதயப் பிரச்னைகளைப் பொறுத்தவரையில், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்வதே புத்திசாலித்தனம். அதை விட்டு விட்டு, மாரடைப்பு ஏற்பட்ட பின் சிகிச்சைக்கு செல்வது ஆபத்தில் முடியும்.இதயம் சார்ந்த பிரச்னைகளில் சிக்காமல் இருக்க ஒவ்வொருவரும் தவறாமல் ஆண்டுதோறும் சோதனை செய்து, நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

- கும்பகோணத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் நடராஜன்

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்