தமிழ் செய்திகள் தமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என்று அழைக்கலாம்- அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ் எழுத்துக்களை தமிழ் பிராமி என்று அழைக்கலாம்- அமைச்சர் தங்கம் தென்னரசு

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ் செய்திகள்  
படம்

ஏப் 29,2010:- தமிழகத்தில் இருக்கக் கூடிய பிராமி கல்வெட்டுகள் தமிழ் பிராமி என்ற முறையிலே இப்போது அழைக்கப்பட்டு வருகிறது என்று சட்டசபையில் தெரிவித்தார் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. ஆனால் இதை தமிழி என்று அழைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, தமிழகத்தில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று பாமக உறுப்பினர் கி.ஆறுமுகம் கேள்வி எழுப்பினார்.

இதற்கும், இதைத் தொடர்ந்து, ஜி.கே.மணி (பாமக), ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துப் பேசுகையில்,

பிராமி எழுத்துகளைப் பொருத்தமட்டில், சிந்து எழுத்துகளுக்குப் பிறகு ஹிந்தி எழுத்துகளில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட எழுத்துகள் என்ற வகையில், அவை பிராமி எழுத்துகள் என்ற வகையில் அழைக்கப்படுகின்றன.

அவற்றில், அசோகன் காலத்தில் உருவாக்கப்பட்ட அசோகன் பிராமி, அதற்குப் பிறகு மௌரிய பிராமி, பட்டுப் பிரவலூர் பிராமி என்று வருகிற போது, தமிழகத்தில் இருக்கக் கூடிய பிராமி கல்வெட்டுகள் தமிழ் பிராமி என்ற முறையிலே இப்போது அழைக்கப்பட்டு வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், பிராமி என்ற சொல்லுக்குப் பதிலாக தமிழி என்பதைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சமண, பௌத்த நூல்களான லலித வஸ்திர, பண்ணவான சூத்திர போன்ற பல்வேறு நூல்களில் கூட, இது தமிழி அல்லது திராவிடி என்று அழைக்கப்பட வேண்டுமென்ற குறிப்புகள் இருக்கின்றன.

தொல்லியல் துறை ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் தமிழ் பிராமி என்றே அழைக்கப்பட வேண்டுமென்ற கருத்தையும் நிறுவியுள்ளனர். எனவே, நம்முடைய அறிஞர்கள் கூறிய அடிப்படையில் தமிழ் பிராமி என்ற முறையிலேயே தொல்லியல் துறையிலும் அழைப்பதை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.7.8 கோடி செலவில் 40 சின்னங்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன. "கல்வெட்டுகள் முனைப்புத் திட்டம்' என்ற பெயரில் 25 ஆயிரம் கல்வெட்டுகளில் 23 ஆயிரம் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு வருகிறது. அவை உரிய வகையில் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் உள்ள கீழ்திசை ஓலைச்சுவடி நிலையத்தை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு மாற்றிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். பல்வேறு பிராமி கல்வெட்டுகள் இருக்கக் கூடிய இடங்களிலே கனிமத் துறையின் மூலமாக அங்கே சுரங்கங்கள் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கல்வெட்டுகள், சிலைகளுக்கு இருக்கக் கூடிய பாதிப்புகள் குறித்து, தலைமைச் செயலாளர் தலைமையில் கடந்த ஆண்டு முக்கிய கூட்டம் நடைபெற்றது. கல்வெட்டுகள், சிலைகள் அமைந்திருக்கக் கூடிய முழு மலைப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து நடவடிக்கை எடுத்தால் அவற்றைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

எனவே, தொல்லியல் துறையின் சார்பாக அதைச் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்