இந்தியா பாகிஸ்தானை இந்தியா புரட்டியெடுத்த பொன் விழா ஆண்டு இது... !

பாகிஸ்தானை இந்தியா புரட்டியெடுத்த பொன் விழா ஆண்டு இது... !

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

ஆக.29, 2015:- இந்தியா பாகிஸ்தான் இடையே 1965ம் ஆண்டு நடந்த போர் முடிந்து 50 வருடங்களாகி விட்டது. இதையொட்டி டெல்லியில் இன்று முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த இந்தப் போர் 17 நாட்கள் நீடித்தது. 1965ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை நடந்தது. காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானை புரட்டி எடுத்து விரட்டியது.

17 நாள் போர்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உக்கிரமாக நடந்த போர் இது. 17 நாட்கள் எல்லையைக் காக்க தீரத்துடன் இந்திய வீரர்கள் போரிட்ட காலம் அது.

அத்துமீறிய பாகிஸ்தான்
1965ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நுழைந்து ரோந்து வந்ததால் பதட்டம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஏப்ரல் 8ம் தேதி குஜராத்தின் கட்ச் வளைகுடாப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியது.

அதிரடித் தாக்குதலில்
இந்தியா பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலை அதிகரித்து வந்ததால், இந்தியா ஆபரேஷன் ஜிப்ரல்டாரை தொடங்கியது. மேற்கு பாகிஸ்தான் பகுதியில் அதிரடி ராணுவத் தாக்கதுல் தொடங்கியது.

சமாதானப்படுத்திய இங்கிலாந்து
இதையடுத்து ஜூன் மாதம் இங்கிலாந்து பிரதமர் ஹரால்ட் வில்சன் இரு நாடுகளிடமும் தொடர்பு கொண்டு சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பிரச்சினையைத் தீர்க்க முயன்றார்.

காஷ்மீரில் போர் தொடுத்த பாகிஸ்தான்
ஆனால் பாகிஸ்தான் ராணுவமோ, ஆகஸ்ட் மாதம் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் போரை ஆரம்பித்தது. பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீரைத் தாக்கத் தொடங்கினர்.

இந்தியாவின் அதிரடி
ஆகஸ்ட் 28ம் தேதி யூரி மற்றும் பூன்ச் பகுதிகளை இணைக்கும் முக்கியமான ஹாஜிப்பூர் கனவாயை இந்திய ராணுவம் கைப்பற்றியது. இந்தப் பகுதியானது பாகிஸ்தானுக்கு முக்கியமானதாக இருந்தது. இந்தப் பகுதி வழியாகத்தான் பூன்ச் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து செயல்பட்டு வந்த படையினர் ஊடுறுவி வந்தனர். இதை இந்தியா கைப்பற்றியது பாகிஸ்தானுக்குப் பெருத்த அடியாக மாறியது.

பாகிஸ்தானின் ஆபரேஷன் கிரான்ட் ஸ்லாம்
செப்டம்பர் 1ம் தேதி ஜம்முவின் அக்னூர் பகுதியைக் கைப்பற்றும் முகமாக ஆபரேஷன் கிரான்ட் ஸ்லாம் என்ற தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியது.

ஆயிரக்கணக்கில்
இந்தப் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து இரு தரப்பிலும் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். போர் மேலும் வேகம் பிடித்தது.

சமரசத்திற்கு முன்வந்த இந்தியா
இந்த நிலையில் செப்டம்பர் 16ம் தேதி நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு இந்தியா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் லின்டன் ஜான்சனுக்கு இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கடிதம் எழுதினார்.

பிடிவாதம் பிடித்த பாகிஸ்தான்
இந்தக் கடிதத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜுல்பிகர் அலி புட்டோவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. ஆனால் காஷ்மீர் மீதான உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று புட்டோ பதிலளித்தார்.

உருவானது தாஷ்கன்ட் ஒப்பந்தம்
இறுதியில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் தலையீட்டைத் தொடர்ந்து செப்டம்பர் 22ம் தேதி போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனின் தாஷ்கன்ட் நகரில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தாஷ்கன்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா கைப்பற்றிய பாகிஸ்தான் பகுதிகள்
இந்தப் போரின்போது பாகிஸ்தானுக்குச் சொந்தமான 1920 சதுர கிலோமீட்டர் பரப்பளவை இந்தியா கைப்பற்றியிருந்தது. அதேசமயம், இந்தியப் பகுதியில் 550 சதுர கிலோமீட்டர் பரப்பளவை பாகிஸ்தான் கைப்பற்றியிருந்தது.

இந்தியாவுக்கே ஜெயம்
இந்தப் போரில் இந்தியா சமரசத்திற்கு இறங்கி வந்தபோதிலும் இந்தியாவின் கையே இறுதியில் ஓங்கியிருந்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று பாகிஸ்தான் பீற்றிக் கொண்டது.

தோற்றதைக் கொண்டாடும் பாகிஸ்தான்
இந்தப் போரில் தோற்றாலும் கூட, நிறைய இழப்பை சந்தித்தாலும் கூட செப்டம்பர் 6ம் தேதியை பாகிஸ்தான் பாதுகாப்பு தினமாக கொண்டாடி வருகிறது.

விமானப்படைகளின் பலப் பரீட்சை
இரு நாடுகளும் சுதந்திரமடைந்த பின்னர் இந்தப் போரில் முதல் முறையாக விமானப்படையை பெருமளவலில் பயன்படுத்தின. இதில் இந்தியா 3937 முறையும், பாகிஸ்தான் 2364 முறையும் தாக்குதல் நடத்தின.

உலகப் போருக்குப் பின்னர்
1965 போரின்போதுதான், 2ம் உலகப் போருக்குப் பின்னர் அதிக அளவிலான டாங்குகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன. போர் மிகப் பெரிதாக மாறியதால்தான் அமெரிக்காவும், ரஷ்யாவும் தலையிட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தன.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்