தமிழின் பெருமைகள் மணிமேகலை காப்பியத்தில் மதுவிலக்குப் பரப்புரை..!

மணிமேகலை காப்பியத்தில் மதுவிலக்குப் பரப்புரை..!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழின் பெருமைகள்  
படம்

மணிமேகலை காப்பியத்தில் மதுவிலக்குப் பரப்புரை..!
-ரா.பி.சேதுப்பிள்ளை

சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் ஆடல், பாடல், அழகு என்னும் மூன்று நலங்களும் ஒருங்கே வாய்ந்து கோவலனைக் காதலனாகப் பெற்ற மாதவியின் மகளாய் மணிமேகலை தோன்றினாள். கோவலன் தன் குல தெய்வத்தின் பெயரைத் தன் காதல் மகளுக்கு இட்டு மகிழ்ந்தான்.

மதுரையில் கோவலன் கொலையுண்டு இறந்த கொடுமையை அறிந்த மாதவி துறவறத்தை மேற்கொண்டாள். அவளோடு பருவமங்கையாகிய மணிமேகலையும் தன் கருங்குழல் களைந்து துறவற நெறியிற் சேர்ந்தாள். இருவரும் அறவண அடிகள் என்னும் பெற்றோரிடம் ஞானோபதேசம் பெற்றார்கள்.

மணிமேகலை தனக்கென வாழாது சமுதாயத்தின் நலத்திற்காகத் தன்னலத்தைத் தியாகம் செய்த தவநங்கை; சமுதாயத்தை அலைத்துக் குலைத்து அழிக்கும் நோய் பசிநோயே யாதலால் அந்நோயை நீக்கும் முயற்சியை மேற்கொண்டாள். அவள் கையில் அமுதசுரபி என்னும் திருவோடு வந்து சேர்ந்தது. அத் திருவோட்டில் முதன் முதல் கற்புடைய மங்கை ஒருத்தி தன் கையால் அன்னமிட்டால், அவ்வன்னம் அள்ள அள்ளக் குறையாமல் வளரும் என்று மணிமேகலை அறிந்தாள்.

காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த ஆதிரை என்னும் நல்லாளே கற்பின் செல்வி என்று எல்லோரும் எடுத்துரைத்தார்கள். அவள், கணவனே தெய்வம் என்று கருதி வாழ்ந்த கற்புடையாள்; திருவாதிரை நாளில் பிறந்தமையால் அப்பெயர் பெற்றாள் போலும்!

அம்மங்கையின் மனை முற்றத்திற் போந்து, மணிமேகலை திருவோடேந்திப் புனையா ஓவியம்போல நின்றாள். ஆதிரை அன்போடு அன்னமெடுத்து வந்து மணிமேகலையை வலம் வந்து தொழுது "பாரெங்கும் பசிப்பிணி ஒழிக" எனத் திருவோட்டை வாழ்த்தி அதன் சுரை நிறைய அன்னமிட்டாள்.

இங்ஙனம் பசியைச் சபித்த பாவையின் திறத்தினை,

"பாரக மடங்கலும் பசிப்பிணி யறுகென ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்து"

என்று மணிமேகலை போற்றுகின்றது.

பசிப்பிணி யென்னும் பாவியை இப்பாரினின்றும் ஒழிக்க முயன்றாள் ஆதிரை; அவள் கணவனாய சாதுவன், மது என்னும் அரக்கனை இம்மாநிலத்தினின்றும் அகற்ற முயன்றான், ஒரு நாள், கப்பலேறி வங்க நாட்டுக்குப் புறப்பட்டான். நடுக்கடலிற் கப்பல் செல்லும் பொழுது ஒரு சுழல் காற்று எழுந்தது. மரக்கலம் சின்னபின்னமாகச் சிதைந்து தாழ்ந்தது.

கருங்கடலில் மிதந்த சாதுவன் கையில் ஒரு பாய்மரம் அகப்பட்டது. சிலநாள், இரவு பகலாக அலைகளால் மொத்துண்டு அலைந்த அம் மரம், ஒரு தீவிலே அவனைக் கொண்டு சேர்த்தது. அங்கே, நாகர் என்னும் வகுப்பார் வாழ்ந்து வந்தார்கள். விலங்குகளுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை இல்லை. தம்முள் ஒருவனைத் தலைவனாகவும் குருவாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவன் ஆண்கரடி போன்றவன். அவள் மனையாள் பெண்கரடி போன்றவள். கரையிலே ஒதுக்கப்பட்ட சாதுவனை நாகர் சிலர் கண்டார்கள்; நரமாமிசம் கிடைத்ததென்று, நாக்கு ஊறினார்கள்; தம் குருநாதனிடம் அவனைக் கொண்டு சென்றார்கள்.

பசியால் மெலிந்து, குளிரால் நலிந்த சாதுவனைக் குருநாதன் கூர்ந்து நோக்கினான்; "நீ யார்? இங்கு வந்த காரணம் என்னை? என்று நாக நாட்டு மொழியிலே வினவினான். அந்த மொழியை அறிந்திருந்த சாதுவன் கருங்கடலில் நேர்ந்த துன்பத்தை உருக்கமாக எடுத்துரைத்தான்.

அந்நிலையில் குருநாதன் உள்ளத்தில் இரக்கம் பிறந்தது. அருந்துயருற்ற நம்பிக்கு நாட்பட்ட கள்ளும் நல்ல ஊனும் கொடுக்கும்படி அவன் அருகே நின்ற நாகரைப் பணித்தான்! அவ்வுரை கேட்ட சாதுவன் திடுக்கிட்டான் இருகையாலும் செவியைப் பொத்திக் கொண்டு 'ஐயனே! கள்ளும் ஊனும் வேண்டேன்' என்று உறுதியாக உரைத்தான். அவ்வுரை கேட்ட குருநாதன் வியப்படைந்தான்; 'கள் என்ற சொல்லைக் கேட்ட பொழுது துள்ளி மகிழாத உள்ளமும் உண்டோ? நாவுக்கினிய ஊனையும், கவலையை ஒழிக்கும் கள்ளையும் விலக்கலாமோ?' என்று வெகுண்டு வினவினான்.

இது கேட்ட சாதுவன் மதுபானத்தின் தீமையைக் குருநாதன் மனங்கொள்ள உணர்த்தலுற்றான்; "ஐயனே! மானிடப்பிறவியில் நாம் அடைந்துள்ள செல்வங்களுள் எல்லாம் சிறந்தது அறிவுச்செல்வமே ஆகும். அவ்வறிவாலேயே நன்மை தீமைகள், குற்ற நற்றங்கள் இவற்றைப் பகுத்து உணர்கின்றோம். இத்தகைய அறிவை வளர்க்கின்றவர்களே மேலோர்; அதனைக் கெடுக்கின்றவர் கீழோராவர். மதுபானம் நம் அறிவிவை மயக்குகின்றது; நாளடைவில் அதனைக் கெடுத்துவிடுகின்றது. 'செய்யத் தக்கது இது, செய்யத் தகாதது இது' என்று பகுத்தறியும் திறமையை இழந்துவிட்டால் மாலுமியில்லாத மரக்கலம் போல நமது வாழ்க்கை நெறி கெட்டொழியும்.

இதனாலேயே,

"மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறம் செய்வோர் அருநர கடைதலும் உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்"

என்று சாதுவன் எடுத்துரைத்தான்.

உயிர்க்குறுதி பயக்கும் உண்மைகளைச் சாதுவன் வாயிலாகக் கேட்ட நாகர் தலைவன் அவனடிகளில் வீழ்ந்து வணங்கினான்; அதுவரை, கடலிற் கவிழ்ந்த மரக்கலங்களிலிருந்து கைப்பற்றிய அரும்பெரும் பொருள்களை அவனுக்குக் கையுறையாகக் கொடுத்தான். வங்க நாட்டினின்றும் அங்கு வந்தடைந்த வாணிகக் கப்பலில் அவனை ஏற்றி அனுப்பினான்.

ஆகவே, மதுவிலக்குப் பிரசாரம் தமிழ்நாட்டில் புதிதாகத் தோன்றியதொன் றன்று என்பது இக்கதையால் விளங்கும்.

செல்லுமிடந்தோறும் தமிழ் மக்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்யும் கடமையை மேற்கொண்டிருந்தார்கள்; நாட்டில் இருந்தாலும் நடுக்கடலிற் போந்தாலும் அப்பணியை ஒல்லும் வகையால் செல்லும் வாயெல்லாம் செய்து வந்தார்கள்.

நரமாமிசம் புசிக்கும் நாகர் நாட்டிலே ஒதுக்கப்பட்ட ஒரு தமிழ்வணிகன், அறவுரையால் அந் நாட்டு அரசனைத் திருத்தியருளினான் என்னும் தெள்ளிய வரலாறு நாம் போற்றுதற்குரியதன்றோ?

-'சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய "தமிழ் விருந்து" நூலிலிருந்து.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்