இந்தியா 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து, நஷ்டஈடு தர வேண்டும் - சசிதரூர்

200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து, நஷ்டஈடு தர வேண்டும் - சசிதரூர்

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

ஜூலை.23, 2015:- இந்தியாவை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அதுபோல், இலங்கை உள்ளிட்ட வேறு சில நாடுகளையும் தங்களது காலனி நாடுகளாக நிர்வாகம் செய்தனர். இந்நிலையில், ‘இங்கிலாந்து, தனது முன்னாள் காலனி நாடுகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டுமா?’ என்ற தலைப்பில், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விவாதம் நடைபெற்றது.

அதில், காங்கிரஸ் எம்.பி.யும், ஐ.நா.வில் அதிகாரியாக பணியாற்றியவருமான சசிதரூர் பங்கேற்று பேசினார். அவர் தனது 15 நிமிட பேச்சில், இந்தியாவுக்கு இங்கிலாந்து தார்மீக கடன்பட்டுள்ளது என்ற பொருளில் உணர்ச்சிகரமாக பேசினார்.

அவர் பேசியதாவது:–

இந்தியாவை இங்கிலாந்து அடிமைப்படுத்துவதற்கு முன்பு, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 23 சதவீதமாக இருந்தது. ஆனால், இங்கிலாந்து வெளியேறியபோது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 4 சதவீதமாக குறைந்திருந்தது. எப்படி? இங்கிலாந்து தனது நலனுக்காகவே இந்தியாவை ஆண்டதுதான் காரணம். இந்தியாவில் அடித்த கொள்ளையால்தான் இங்கிலாந்து தன்னை வளப்படுத்திக்கொண்டது. அதற்காக இந்தியாவுக்கு இங்கிலாந்து நஷ்டஈடு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சசிதரூர், தனது புள்ளிவிவரத்துக்கு எந்த ஆதாரத்தையும் வெளியிடாதபோதிலும், வரலாற்றுரீதியான பொருளாதார ஆராய்ச்சிகள் அவரது கருத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளன. அந்த விவாதத்தில், ஆங்கிலேயர் ஆட்சியால் இந்தியா பலன் அடைந்ததாக சிலர் பேசினர். இருப்பினும், சசிதரூர் கருத்துக்கு ஆதரவாக 185 ஓட்டுகளும், எதிராக 56 ஓட்டுகளும் விழுந்தன.

சசிதரூரின் பேச்சு அடங்கிய வீடியோ, யு டியூப்பில் வெளியாகி, அதை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அவரது கருத்து, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. இளைஞர்கள் பலர் சசிதரூர் கருத்துக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அதனால் அவரது பெயர், ‘ட்ரெண்ட்’ ஏற்படுத்தி உள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்