தமிழின் சிறப்புகள் உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15வது இடத்தில்!

உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி 15வது இடத்தில்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழின் சிறப்புகள்  
படம்

உலகில் ஆறாயிரத்து எண்ணுற்றுக்கு(6800) மேற்பட்ட மொழிகள் ஏறக்குறைய இருநூறு நாடுகளில் பேசப்படுவதாகவும், இதில் இரண்டாயிரத்து முன்னூறு (2300)மொழிகள் மட்டுமே எழுத்துருவங்களை கொண்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் இரண்டாயிரத்து இருநூறு மொழிகள் ஆசியாவிலும், இருநூற்று முப்பது மொழிகள் ஐரோப்பாவிலும் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வரிசையில், உலகில் உரையாடப்படும் மொழிகளில் தமிழ் மொழி பதினைந்தவாது இடத்தில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகில் மொழி, இனம் ஆகிய அடிப்படையில் உருவாகியுள்ள நாடுகளை பார்க்கும் பொழுது – ஐரோப்பாவில் போலந்து, இத்தாலி, துருக்கி, கிரேக்கம் போன்று வேறு பல ஐரோப்பிய நாடுகளுடன், ஆசியாவில் இந்தோனேசியா, வியாட்நாம், கொரியா, தாய்லாந்து, மியன்மார் (பர்மா), ஈரான் போன்ற நாடுகள் தமிழிற்கு பல படிகள் பின்னனியில் நிற்பதை நாம் காணக் கூடியதாகவுள்ளது.

இதே இடத்தில் சிறீலங்காவின் சிங்கள மொழி, உலகில் 68வது இடத்தில் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. உலகில் பல பாகங்களிலிருந்து வேற்று மொழி பேசும் புத்திஜீவிகள், கல்விமான்கள், அறிவாளிகள், ஆய்வாளர்கள் பலர் தமிழ் மொழியின் சரித்திரம், பண்புகள் போன்றவற்தை உள்ளடக்கி நுற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சொற்கள் பல, ஆங்கில மொழியில் பாவனையில் உள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லையென நம்புகிறேன். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் திருவள்ளுவரினால் எழுதப்பட்ட திருக்குறள், ஐரோப்பிய மொழிகள் உட்பட பல வேற்று மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது பெருமையான விடயமாகும்.

இந்த வரிசையில் கிறீஸ்தவ சமயத்தின் ‘பைபிள்’ இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளில், எழுத்து உருவம் கொண்ட சகல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அதேவேளை, இஸ்லாமியரின் ‘குறான்’ வேற்று மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்வது என்பது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வருகிறது.

குரான் வேற்று மொழியில் மொழி பெயர்க்கப்படும் பொழுது, அராபிய மொழிச் சொற்களுக்கு சரியான சொற்பதங்கள் வேற்று மொழிகளில் தேர்ந்தெடுப்பது கடினமென்றும், அதுமட்டுமல்லாது குரான் தனது புனிதத் தன்மையை இழந்து விடும் என்ற ஐயம் சிலரிடையே நிலவுவது காரணிகளாக அமைகிறதாம்.

இருந்த பொழுதும் 114 ஆசிய ஆபிரிக்க மொழிகளில், குரானின் சில பகுதிகளும், நாற்பத்து ஏழு மொழிகளில் குரானின் முழு அளவிலான மொழி பெயர்ப்பும் தற்பொழுது கணப்படுகிறது. சமயம் சார்ந்த மொழி பெயர்ப்புகளில், இந்துக்களின் ‘பகவத் கீதை’ பைபிளுக்கும் குரானுக்கும் அடுத்த படியாக பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக வட இந்தியர் கூறுகின்றனர். இதேவேளை ஊடகங்களில் வேற்று மொழியென பார்க்கும் பொழுது, பிரித்தானியாவின் பி.பி.சி. வானொலி, தமிழ் உட்பட உலகின் முப்பத்திரண்டு மொழிகளில் செய்திகளை தினமும் ஓலிபரப்புகின்றது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்