தமிழ்நாடு அமித்ஷா வந்த நாளில் கிடைத்த அதிர்ச்சி வைத்தியம்

அமித்ஷா வந்த நாளில் கிடைத்த அதிர்ச்சி வைத்தியம்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வந்த நாளில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிகவின் விஜயகாந்த் இணைந்தது பாஜகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதேபோல சில தினங்களுக்கு முன்பு கூட்டணிக்கு ஆதரவு சொன்ன சமக தலைவர் சரத்குமாரும் திடீரென அதிமுக பக்கம் தாவியதும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி பாஜக தலைவர்களின் கோபத்தை அதிகரித்துள்ளது.


அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள். நிரந்தர எதிரியும் இல்லை... நிரந்தர நண்பனும் இல்லை என்பது அரசியலில் எழுதப்படாத விதி. கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுகவும் தேமுதிகவும் இப்போது எதிரிகளாக களமிறங்குகின்றன.

அதேபோல கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருந்த பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இப்போது தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதில் பாமக தனியாகவும், தேமுதிக தலைமையில் மதிமுகவும் , கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விஜயகாந்த், அன்புமணியை சந்தித்துப் பேசினார். ஆனாலும் அவர்கள் எந்தப் பிடியும் கொடுக்கவில்லை.

விஜயகாந்த் எப்படியும் தங்களின் அணிக்குத்தான் வருவார் என்று ஏகத்திற்கும் எதிர்பார்த்துக் காத்திருந்தது பாஜக. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவே விஜயகாந்தும் கூட்டணிக்குக் கையெழுத்து போட்டு விட்டார்.

நீங்க 'கிங்' ஆ இருங்க... நாங்க கிங் மேக்கரா இருக்கோம் என்று கூறி கூட்டணியின் பெயரையே 'கேப்டன் விஜயகாந்த் கூட்டணி' என்று மாற்றி அறிவித்து விட்டனர் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள். இதனால் தமிழகத்தில் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக பாடுபட்டது. எப்படியாவது அதிமுக, திமுகவிற்கு மாற்றாக அணி அமைத்து தனது கட்சி எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அனுப்பி விட வேண்டும் என்று தலைகீழாக நின்று தண்ணி குடித்து பார்த்தார் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன்.

ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்குடா டீ ஆத்துற? என்று கேட்பது போல பாஜகவிற்கு தமிழகத்தில் செல்வாக்கே இல்லை. ஆனால் ஆளுக்கு ஒருபக்கமாக திரும்பிக்கொண்டு அரசியல் செய்து வருகின்றனர். தமிழிசை, இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் என ஆளுக்கு ஒருபக்கம் நாட்டாமை செய்ய, ஆளை விடுங்கப்பா என்று விஜயகாந்தும், ஆதரவு கொடுத்த சரத்குமாரும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

அமித்ஷா சென்னை வரும்போது எப்படியாவது கூட்டணியை முடிவு செய்து விட வேண்டும் என்று முடிவு செய்திருந்த நிலையில் அது முடியாமலேயே போனது. காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் 23ம் தேதி சென்னை வரும்போது விஜயகாந்தை சந்திப்பார் என்ற செய்தி வெளியானது.

அதற்கு முன்பாகவே அரசியல் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் தமிழக பாஜக தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், விஜயகாந்தை 'கிங்' ஆக ஏற்றுக்கொண்டு முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்து விட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, விஜயகாந்த் தான் வரவில்லை, சரத்குமாரை வைத்தாவது சமாளிக்கலாம் என்று முடிவு செய்திருந்த நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து சிக்னல் கிடைக்கவே, அங்கே பெர்த் கன்பார்ம் என்று கூறி பாஜக ரயிலில் ஏற எடுத்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டு எஸ்கேப் ஆனார் சரத்குமார்.

பங்குனி உத்திர நாளில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்தனர் பாஜக தலைவர்கள். அமித்ஷா சென்னை வந்த நாளில்தான் இத்தனை களேபரமும் அரங்கேறியது பிபியை அதிகரித்தது. இந்த கடுப்பில்தான் பூஜ்ஜியத்துடன் பூஜ்ஜியம் இணைந்து பூஜ்ஜியத்தை பெறும் என்று பேசியுள்ளார் தமிழிசை சவுந்தராஜன். தேமுதிகதான் கைநழுவி விட்டது. பாமகவாவது தங்கள் பக்கம் வருமா என்பதே பாஜகவின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்