தமிழ்நாடு தொண்டர்களை உற்சாகப்படுத்த ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்

தொண்டர்களை உற்சாகப்படுத்த ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

தி.மு.க., கூட்டணியில் சேர, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறுத்து விட்டதால், சோர்வடைந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. கட்சியின் இளைஞரணி செயலரும், பொருளாளருமான ஸ்டாலினை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, மாவட்ட செயலர்களிடம் யோசனை கேட்க முன்வந்துள்ளது.
தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், 21ம் தேதி திங்கட்கிழமை, சென்னை, அறிவாலயத்தில் நடக்கிறது. கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், முக்கிய முடிவு எடுக்கப் போவதாக மட்டும் கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்ன முடிவு என்பதை அறிய, கட்சி வட்டாரம் ஆவலோடு காத்திருக்கிறது.

நிறைவேறவில்லை:

இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கூட்டணி விஷயத்தில்,

தி.மு.க., எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. பெரிதும் எதிர்பார்த்த, தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு போய்விட்டது. இதனால், கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. உற்சாகத்தோடு களம் இறங்க வேண்டிய தொண்டர்கள், சற்று சோர்வடைந்துள்ளனர். அ.தி.மு.க.,வை போல, தேர்தலுக்கு முன்னரே அவர்களை தனித்துப் போட்டியிடுவதற்கு தயார் செய்திருக்க வேண்டும்; அதை செய்யத் தவறி விட்டோம். 'வலுவான கூட்டணி அமைக்கப்படும்; அதற்கான முயற்சிகள் நடக்கின்றன' என்றே, நம்பிக்கை ஏற்படுத்தி வந்தோம்.

அதனால்,அவர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு இருந்துள்ளது. இப்போது, கூட்டணி இல்லை என்றதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதை எப்படி சரிக்கட்ட முடியும் என்பது தான், எங்கள் முன் எழுந்துள்ள பெரிய கேள்வி. அதுபற்றி விவாதிப்பதற்கு தான், மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட்டப்படுகிறது. ஏற்கனவே, ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கருத்து, கட்சியின் ஒரு தரப்பினரால் எழுப்பப்பட்டு வந்தது; கூட்டணி முயற்சிக்காக அது பரிசீலிக்கப்படவில்லை. இப்போது, கூட்டணி

கட்சிக்காக காத்திருக்க வேண்டிய அவசியமோ, நெருக்கடியோ இல்லை. எனவே, தொண்டர்களை உற்சாகப்படுத்த, ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாமா என்ற யோசனை ஏற்பட்டுள்ளது.

எழுச்சி ஏற்படும்:

அதுபற்றி, மாவட்ட செயலர்களிடம் கருத்து கேட்கப்படும். அவர்களும், இதை வலியுறுத்த தயாராக உள்ள தகவல் கிடைத்து உள்ளது. அப்படி அறிவித்தால் தான், தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படும்; தேர்தல் பணிகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்வர். தே.மு.தி.க., வராததால் உண்டான ஏமாற்றம் முழுமையாக நீங்கும் என்பதை, இந்த கூட்டத்தில் நாங்களும் வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'விஜயகாந்தை சீண்டாதீங்க!'

கூட்டணிக்கு வராத, தே.மு.தி.க.,வை, தி.மு.க.,வினர் விமர்சிக்க துவங்கியுள்ளனர். 'தி.மு.க., ஐஸ் கிரீம் போன்றது; அதன் மேல் இருக்கும் செர்ரி பழம் போன்றவர் விஜயகாந்த்; மக்கள், ஐஸ் கிரீமை சாப்பிட்டு விட்டு, செர்ரி பழத்தை துாக்கி எறிந்து விடுவர்' என, தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன் விமர்சித்தார். 'நதி வராததால், கடல் வற்றாது; தே.மு.தி.க., வந்தால் தான், தி.மு.க., வெற்றி பெறும் என்ற நிலை இல்லை' என, வர்த்தக அணி செயலர் காசி முத்துமாணிக்கம் விமர்சித்தார்.இப்படி விஜயகாந்திற்கு எதிராக கணை தொடுப்பதால், கடைசி நேர கூட்டணி வாய்ப்பு பறிபோய் விடும் என, மகளிர் அணி செயலர் கனிமொழி பயப்படுகிறார்; அதை, கருணாநிதியிடமும்தெரிவித்துள்ளார். இதையடுத்து, 'தி.மு.க., நிர்வாகிகள் யாரும், விஜயகாந்தை பற்றி விமர்சிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்