கட்டுரைகள் 50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா?

50 ஆயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா?

பதிவர்: நிர்வாகி, வகை: கட்டுரைகள்  
படம்

பிதுங்கி வழியும் அந்த பேருந்து நெரிசலில், ஓரமாய் ஒதுங்கி தேய்ந்தும், வண்ணம் போயும், இப்போதோ பிறகோ என்று தொங்கும் அந்த திருக்குறள் பலகையில் தான் இன்றைய தமிழர்களின் தமிழ் பயன்பாடு மீதம் இருக்கிறது. தென்றலாய் , தேனாய், அமுதாய், காயாய், கனியாய் எல்லமுமாய் இனித்த தமிழ் இன்று வெள்ளைக்காரனின் புயலில் புழுதியாய் போய்விட்டது, குறைந்தபட்சம் பெயர் கூட தமிழில் தாங்காத தமிழர்களாக இந்த சமுகம் மாறி நிற்கிறது.

மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
தமிழ்தான் இல்லை!!

என்று தமிழ் புலவர்களையும், தமிழ் அறிஞர்களையும் புலம்ப வைத்து, மனம் வெந்தது தான் இன்றைய தமிழர்களின் தமிழ் பயன்பாடு இருக்கிறது.

சாலை இல்லை, விரிவு இல்லை, பேருந்து இல்லை, மகிழுந்து இல்லை, சாளரம் இல்லை, உண்ணும் உணவு கூட சோரு இல்லை, சாதம் என்று சமஸ்கிருதம் ஆகிபோனது, சோறு அவனுக்கு சுடு சொல்லாய் ஆனது, மொத்தத்தில் தமிழன் தமிங்களன் ஆகிபோனான்.

மனிதனால் இப்படி கூட சிந்திக்க முடியுமா? இது உண்மை தானா.. என்று உலகம் வியக்கும் தமிழ் மொழியின் படைப்புகளை பார்த்து. சிவனும், சித்தர்களும், வள்ளுவனும், ஔவ்வையும், கம்பனும், காக்கைபடினியும், எண்ணற்ற தமிழ் பெரும் மக்கள் 50000 ஆண்டுகள் கட்டி காத்த தமிழை, இந்த தலைமுறை பிள்ளைகள் வெறும் 50 ஆண்டுகளில் தொலைத்து விட்டார்கள்.

கிராமங்களில் மட்டும் சிறிது தமிழும் தமிழ் மாதங்கள் பயன்படும் அந்த பெரியவர்களோடு ஊசல் ஆடுகிறது. தன் தாயை அம்மா என்று அழைக்க அவமானம் என்று நினைத்து பிணம்(மம்மி) என்று அழைத்து பெருமைப்படுகிறார்கள்.

உலகத்தில் எல்லோரும் தன் தாய் மொழியில் கல்வி கற்று புதியதை படைக்கிறார்கள். தாய் மொழியில் கல்வி கற்காதவன் அதை வாங்கி பயன்படுத்துகிறான் இது தான் எதார்த்தம்.

தாய் மொழியை பேசுவது அவமானமாக நினைத்தான் தமிழன், தாயை நேசித்தவன் தாய் மொழியை பழித்தான், ஆங்கிலம் வெறும் மொழி என்று கருதாமல் அறிவு என்று நினைத்தான், தமிழ் அழிய வழி வகுத்தான்.

அமெரிக்காவில் இங்கிலாந்தில் பிச்சைக்காரன் கூட ஆங்கிலத்தில் தான் பிச்சை எடுக்கிறன் என்பதை மறந்து போனன், எந்த பொருளிலும் கலப்படம் விரும்பாத மான தமிழன், தாய் மொழியில் கலப்படத்தை அனுமதித்தான் மொழி சிதைந்தது.

ஏதோ ஒரு சந்து பொந்தில் பழுது நீக்கும் நிலையம், பழச்சாறு நிலையம் என்று துரு பிடித்த பதாகையில் பார்க்கும்போது தான் தமிழ் இன்னும் வாழ்கிறது என்று ஆறுதல் கிடைக்கிறது.

ஐம்பதாயிரம் வருடங்கள் நம் முன்னோர்கள் தமிழ் பேசி தானே உலகில் மிக சிறந்த மக்களாக உச்சத்தில் வாழ்ந்தார்கள் நாம் மட்டும் இன்று தமிழ் பேசினால் படித்தால் வாழமுடியாது என்ற மோசமான எண்ணம் எப்படி வந்தது எவ்வளவு மோசமான எண்ணம், இது நம் முன்னோர்களை, அவர்கள் வாழ்வை அவமதிப்பு செய்யும் செயல் இல்லையா??...

எவ்வளவோ இலக்கிய இலக்கணம் கொண்ட உலகின் மிக பழமையான, முதன்மையான  மொழியை சிதைப்பதை பார்த்து கொண்டு இருப்பதா? என்ன செய்யலாம்?

முதலில்:

அரசு , அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி. குழந்தை தவறு செய்தால் தாய் எப்படி சுட்டி காட்டி வழி நடத்துகிறாளோ அப்படி அரசு மக்களை சரியான பாதையில் வழி நடத்த வேண்டும். அரசு அரசு சார்ந்த அனைத்து துறைகளிலும் முழுமையாக கட்டாயம் தமிழ் தான் பயன்படுத்த வேண்டும்.

திருக்குறளை மட்டும் பேருந்திலும் சுவர்களிலும் எழுதி விட்டால் போதும் தமிழ் வளரும் என்ற எண்ணத்தை அரசு கைவிட வேண்டும். அனைத்து கடை பதாகைகலிலும் கட்டாயம் தமிழில் தான் வைக்க வேண்டும் கடுமையான சட்டம் (இப்போது இருக்கும் சட்டம் போல் இல்லாமல்) பிற மொழி விருப்பமாகவும், ஆனால் கட்டயாமாக தமிழ்.


கட்டாயம் தமிழ் வழி கல்வி பிற மொழி அனைத்தும் விருப்ப பாடம். திரைப்படங்கள் இப்போது எல்லாம் எந்த மொழியில் வருகிறது என்று தெரியவில்லை பெயர் மட்டும் தமிழில் வரி விலக்கு என்பதால், இனி தலைப்பு மட்டும் தமிழில் இருந்தால் போதாது படம் முழுக்க தமிழ் இருக்க வேண்டும் இல்லையென்றால் தடை கட்டாயம் விதிக்கபட வேண்டும். அதே போல் அனைத்து தொலைக்காட்சி கட்டாயம் தமிழ் இல்லையேல் உரிமம் இரத்து.

இரண்டாவது:

ஆசிரியர்கள் பள்ளி கூடங்களில் தமிழ் ஆசிரியர்கள் ஏட்டில் படித்து விளக்கம் சொல்லி விட்டு போவதை விட்டோழிக்க வேண்டும், இது தம் மொழி, நமது அடையாளம், நமது பெருமை, நமது கலாச்சாரம் என்று மொழி உணர்வூட்டி தமிழ் மொழியின் அழகை சொல்லி புரியவைக்க வேண்டும்.

இது நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறி சிறப்பு, நமது தாத்தா பாட்டி வாழ்ந்த வாழ்கை முறை வரலாறு என்று மொழி உணர்வும், இன உணர்வு ஊட்ட வேண்டும். தமிழ் உணர்வை ஊட்டி தமிழால் வசிய படுத்துங்கள். மொழியால் கவிதையால் பாடலால் உணர்வை ஊட்டுங்கள், மாணவனை வாசிக்க வைத்து விளக்கம் சொல்லி நகர்வதை விடுங்கள். தமிழ் வாழ்வதும் வீழ்வதும் குழந்தைகள் கையில்.. அந்த குழந்தைகள் ஆசிரியர் கையில்...


முன்றாவது :

50 ஆயிரம் ஆண்டுகள் தமிழ் பேசி வாழ்ந்த நம் முன்னோர்கள் என்ன.. வீழ்ந்தா போனார்கள்..., எல்லா சிறப்பு பெற்று தலை சிறந்த மக்களாக தான் வாழ்ந்தார்கள். நாம் மட்டும் மாறி போனால் தம் முன்னோர்கள் விட்ட மூச்சு காத்து வீண் போகாதா?

நாம் மட்டும் ஏன் ஆங்கில மோகம் கொண்டு ஆங்கிலமும் தெரியாமல் தமிழும் தெரியாமல் அரை கோமனமாக திரிகிறோமே? தாய் மொழி அவமானம் அல்ல அது நமது கலாச்சாரம், நமது பண்பாடு, நமது பாரம்பரியம், இதை எல்லாம் புறம் தள்ளி வாழ்ந்து விடலாம் என்பது மடமையின் உச்சம்.

தாய் இல்லாத குழந்தை போல், தலைவன் இல்லாத வீடு போல், தாய் மொழி இல்லாத நாடு வளமாக வாழாது வீழ்ந்து தான் போகும் என்பது வரலாறு அதை நாம் உணர வேண்டும்.

ஒவ்வொருவரும் உளமார சிந்தித்து தமிழை போற்ற வேண்டும், அடுத்த தலைமுறை பிள்ளைகள் உங்கள் குழந்தைகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுங்கள் மொழி பற்று ஊட்டுங்கள், மொழிக்காக உயிர் நீத்த புண்ணியவான்களை நினைத்து பாருங்கள் நம் தமிழை தொலைத்தால் அவர்கள் பவம் நம்மை விடாது உறுதியாக நம்மை விடாது.

நீங்கள் உயிர் எல்லாம் தர வேண்டாம் உள்ளம் தந்து தமிழ் போற்றி வாழவையுங்கள். பயண சீட்டு எடுத்து பயணம் போங்கள் டிக்கெட் வேண்டாம், பேருந்தில் போங்கள் பஸ் வேண்டாம், தூய தமிழ் கூட வேண்டாம்... எளிய தமிழ் பேசுங்கள்.

நாவை கூட திருத்த முடியாது என்றால் நம்மால் எதையும் திருத்த முடியாது. முதலில் நாம் நாம் என்று அனைவரும் மாறுவோம் போப்புக்கு தெரிந்த தமிழ் அருமை மான தமிழனுக்கு தெரியாமல் போய்விடுமா?

பெற்ற தாயை பட்டினி போட்டு என்னை புன்னியம் செய்தாலும் எப்படி வீண் போகுமோ... அதே போல் தாய் மொழியை மறந்து வாழ்வது வீண். உலகத்தில் உள்ள எந்த மொழிகளையும் கற்பபோம்.. ஆனால் தமிழை உயிராய் நேசிப்போம்.


பிறமொழி புகுத்திடும் வழி மறிப்போம் - இதை
பித்தர்கள் எதிர்திடின் உடல் முறிப்போம்!
பிறவழி அடிமையின் களை பறிப்போம் - நற்
பீடுடைய பழந்தமிழ் திறம் பொறிப்போம்!!
நன்றி!!! நன்றி!!!இரா. ஏழுமலை (அகவை 26)
130 கம்பர் தெரு
குமரன் நகர்
பாடி
சென்னை
600050.
கைபேசி : 8189897676.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்