கட்டுரைகள் தமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி?

தமிழ் மொழியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவது எப்படி?

பதிவர்: நிர்வாகி, வகை: கட்டுரைகள்  
படம்

செம்மொழியாம் நம் தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழி. நம் மொழி என்றென்றும் வாழவதற்கு முதலில் பெற்றோர்கள் தமிழ் மொழியின் சிறப்புகளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பரவலாக பல நாடுகளில் ஆங்கிலம் பேசப்படுவதால் நாம் வர்களுடன் தொடர்பு மற்றும் நட்பு வைத்துக் கொள்ள ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் தாய்மொழிகளில் பின்தங்கி விடுகிறோம். முதலில் பெற்றோர்கள் குழந்தைகளை தாய்மொழியில் பேச ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசுவது மிக அவசியம். முக்கியமாக வீடுகளில் அவர்கள் தமிழில் பேச வேண்டும். சிறு வயது முதலே தமிழில் கேட்டு தமிழில் பதில் சொல்லி வளரும் பிள்ளைகள் தமிழை நன்றாகவே பேசுகிறார்கள்.

குழந்தைகள் தமிழ் மொழியைக் கற்க பெற்றோர்களும், ஆசிரியர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். பல வழிகளில் குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்கலாம். 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எளிதில் சொல்லக் கூடிய அம்மா, அப்பா, உறவுமுறை, வணக்கம், டாடா போன்ற சொற்களை சொல்லிக் கொடுக்கலாம். சிறு வயதில் குழந்தைகளின் கற்கும் திறன் மிக அதிகமாக இருக்கும்.

மூன்று வயது முதல் குழந்தைகளுக்கு படங்களைக் காட்டி அதன் பெயர்களைச் சொல்லி விளக்க வேண்டும். உதாரணமாக சிங்கம் என்று சொன்னால் அது கர்ஜிக்கும், காட்டுக்கு ராஜா, ஆண் சிங்கத்திற்கு பிடறி இருக்கும் என சிங்கத்தைப் பற்றிய பல தகவல்களையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். படங்களைப் பார்ப்பதன் மூலம் குழந்தைகள் மனதில் அக்காட்சி ஆழமாக பதிந்து விடும்.

எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் எளிதில் எழுதும்படி உள்ள எழுத்துக்களில் எழுத ஆரம்பிக்க வேண்டும். சிறிய அட்டைகளில் எழுத்துக்களை எழுதி எழுத்துக்களைச் சொல்லி குழந்தைகளை எடுக்கச் சொல்லலாம். பின்னர் அவ்வெழுத்துக்கள் தொடர்பாக உள்ள சொற்களைக் கூறி எழுத வைக்கலாம். பெற்றோரின் அக்கறையினாலும், பொறுமையினாலும் தான் இதை நிறைவேற்ற முடியும்.

குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பாடல்கள் இன்றியமையாத பங்கை ஆற்றுகின்றன. குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு பாடி விடுவார்கள். நாம் அப்பாடல்களைப் பாடி நடித்தும் காட்ட வேண்டும். குழந்தைகளும் நம்மைப் பார்த்து அதே போல் செய்வார்கள். இன்றைய காலகட்டத்தில் தமிழ் என்றாலே குழந்தைகள் தூரம் ஓடி விடுகிறார்கள். அவர்களுக்கு பிடிக்கும் வகையில் சொல்லிக் கொடுப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கைகளில் தான் உள்ளது. தமிழ் மொழியில் யோசித்து தமிழ் மொழியில் எழுத அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் படிப்பதை குழந்தைகள் வழக்கப்படுத்திக் கொள்வதற்கு பெற்றோர்கள் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். சின்ன சின்ன கதைகள் மூலம் அறிவுரைகள் பல கூறலாம். சிறுவயது முதலே கதைகள் மூலம் அறிவுரைகள் கூறும் போது அவர்கள் மனதில் அது பசுமரத்தாணி போல பதிந்து விடும். பின்னர் அவர்களையே எழுத்துக்களைக் கூட்டி படிக்கச் சொல்ல வேண்டும். படிக்க படிக்கத்தான் அவர்களின் தமிழறிவு வளரும்.

குழந்தைகள் அவர்கள் வயது ஒத்தவர்களுடன் அல்லது நண்பர்களுடன் பூங்காவிலோ, கோயில்களிலோ மற்றும் வெளி இடங்களிலோ சந்தித்தால் தமிழில் பேச ஊக்கப்படுத்த வேண்டும். பேச பேசத்தான் மொழி ஆர்வம் அதிகரிக்கும்.

குழந்தைகளின் தமிழ் கற்கும் திறன் ஒவ்வொரு பெற்றோரின் கையில் தான் உள்ளது. ஆசிரியர் பள்ளியில் சொல்லிக் கொடுத்தாலும் வீட்டில் தினமும் தமிழ் படிப்பது மிகவும் முக்கியம். இதை பெற்றோர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்