தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயில்!
தமிழகத்தின் வீரம் செறிந்த நெல்லைச் சீமையில் கோவில்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் அமைந்த பழம்பெரும் ஊர் கழுகுமலை. நாளந்தா, தட்சசீலம் போன்ற ஆதியில் அமைந்த கலாசாலைகள் போன்று சமண கலாசாலை அமைந்த இடம். சிலகாலம் சமணம், பௌத்தம், இறுதியாக சைவம் என்ற மாற்றங்களோடு அமைந்த பேரூர்தான் இந்த கழுகுமலை.
பருத்தி அரவை ஆலைகளும், தீப்பெட்டி உற்பத்தித் தொழிலும், மாட்டுத் தாவணிகளும், சத்திரங்களும், மடங்களும் கோயிலும் அமைந்தது இந்த ஊர். இந்த ஊரில் செய்யப்படும் தின்பண்டமான காரச்சேவும், பட்டர்சேவும், கருப்பட்டிப்பாகு மிட்டாயும் சுவை மிகுந்தவை. சைவத் தலமான இவ்வூருக்கு தினமும் நூற்றுக்கணக்கில் பயணிகள் வருகின்றனர்.
இவ்வூருக்கு கழுகாசலம், தென்பழனி, சம்பாதி சேத்திரம், கஜமுகபர்வதம், பவணகிரி, உவணகிரி, அரைமலை, திருநெற்சுரம், பெருநெற்சுரம் என்று பழங்காலப் பெயர்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் இந்தக் கழுகுமலையை நோக்கி காவடி ஏந்தி நடைபயணமாக வந்தபோது பாடிய பாடலே காவடிச்சிந்து. கழுகுமலையின் சிறப்பை தன்னுடைய பாக்களில் சொல்லியுள்ளார்.
கதலி கமுகுசூழ் வயற்குளே அளி
இசையை முரலமா வறத்தில் மீறிய
கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய
பெருமாளே
என்று அருணகிரி நாதர் கழுகுமலையைத் திருப்புகழில் பாடியுள்ளார்.
இந்தத் தலத்தில் கழுகாசலமூர்த்தியாக சிவசுப்பிரமணியர் விளங்குகிறார். ஆறுகரங்கள் ஒருதலையுடன் போர்க்கோலத்தோடு காட்சி அளிக்கும் கழுகுமலைத் தலத்தை மகாகவி பாரதியார் பாடியுள்ளார்.
இவ்வூரின் வரலாற்றைச் சொல்லும் கழுகுமலைக் கல்வெட்டுகள் பிரதானமானவை. இதன் சுற்றுவட்டாரத்திலும் நாலாட்டின்புத்தூர், வானரமுட்டி, சாயமலை கல்வெட்டுகளும் பல வரலாற்றுச் செய்திகளைச் சொல்கின்றன.
கழுகுமலையின் வடகிழக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது வெட்டுவான் கோயில். மோனோலித்திக் முறையில் ஒரே பாறையில் வெட்டி இக்கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள். அதனாலேயே வெட்டுவான் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வடிவமைப்பில் தமிழகத்திலேயே வெட்டுவான் கோயில் ஒன்றுதான் என்பதுவே கழுகுமலையின் சிறப்பு ஆகும்.
இந்தியாவிலேயே கழுகுமலையைத் தவிர, மராட்டிய மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் மட்டுமே, இப்படி மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை யானைமலையில் உள்ளது போலவே கழுகுமலையில் 7ஆம் மற்றும் 8ஆம் நூற்றாண்டு கால சமணர் சிற்பங்கள் உள்ளன. மலைச்சரிவிலுள்ள பாறையில் கடைசி சமண தீர்த்தங்கரர்களான வர்த்தமானர் உள்பட இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் தலைக்கு மேற்பகுதியில் முக்குடைகளுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளன.
இச்சிற்பங்களை உருவாக்கியவர்களின் பெயர்கள் வட்டெழுத்தில் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் இச்சிற்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மலையில் அமைந்துள்ள சிறுசிறு குகைகளில் சமணர் பள்ளிகள் அமைத்து சமண மதக் கருத்துகளைப் போதித்திருக்கிறார்கள்.
சமய இறையாண்மைமிக்க இடமாகவும், கலைக் கருவூலமாகவும் திகழும் கழுகுமலை, உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெறக்கூடிய வகையில் சிற்பக் கலையை தன்னகத்தே கொண்டுள்ளது.
எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயில், மாமல்லபுரம் சிற்பக் கோயில் ஆகியவற்றைக் காட்டிலும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது. இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்புக்குரியதாகும். இப்பாறைகள் எண்ணற்ற புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளது.
முன் காலத்தில் கழுகுமலையில் மங்கல ஏனாதி என்னும் தானைத் தலைவர் இருந்தார். ஆய் மன்னன் கருநந்தன் மீது பாண்டியன் மாறஞ்சடையன் படை எடுத்தபோது, மங்கல ஏனாதியின் சேவகர்கள், பாண்டியனுக்காகச் சென்று அருவி ஊர் கோட்டையை அழித்து போரில் மாண்டனர். அவர்களுக்காக நிலம் அளித்த தகவலை குசாக்குடி கல்வெட்டு தெரிவிக்கிறது.
அக்கல்வெட்டு, தற்போது மதுரை திருமலைநாயக்கர் மகாலில் உள்ளது.
திருமலை வீரர், பராந்தக வீரர் எனும் பெயர் பெற்ற படைகள், பாண்டியன் பராந்தக வீரநாராயணன் காலத்தில் இவ்வூரில் இருந்தது பற்றிய குறிப்புகளும் உள்ளன. கோட்டாறு மிழலூர், வெண்பைக்குடி (வெம்பக்கோட்டை) முதலிய 32-க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழ்ந்த சமணப் பெரியார்கள் இங்கு வந்து, இவ்வுருவங்களைச் செய்திருக்கிறார்கள்.
எட்டி, எனாதி, காவிதி முதலிய சிறந்த தமிழ்ப் பட்டங்கள் பெற்றவர்களும் இச்சிற்பங்களைச் செய்வித்துள்ளனர். தச்சர், வேளாண், குயவர், கொல்லர் முதலிய பல தொழில்கள் புரிவோரும் இங்கு பணிபுரிந்துள்ளனர். குணசாகரபடாரர் என்னும் சிறந்த சமணப் பெரியாரும் இன்னும் பல வயிராக்கியர்களும் இங்கு வாழ்ந்துள்ளனர்.
மலையின் ஒருபகுதியில் 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி அதன் நடுப்பகுதியைக் கோயிலாகச் செதுக்கியிருக்கிறார்கள். உள்பகுதியில் கருவறையும், அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன. விமானத்தில் உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகிய வடிவங்கள் காணப்படுகின்றன.
கழுகுமலையில் அமைந்துள்ள வெட்டுவான் கோயிலில்தான் இந்தியக் கட்டடக் கலை வரலாற்றிலேயே முதலாவதாக மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.
ஜைன தீர்த்தங்கரர்கள் சிற்பங்கள் அமைந்துள்ள இக்கோயில் அமைந்துள்ள இடம் வரைக்கும் கெüதம புத்தர் தமது புத்த மதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக வந்திருக்க வேண்டும் என சரித்திர ஆராய்ச்சியாளரான து.அ.கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார். இலங்கைக்கு பெüத்தத்தைப் பரப்பச் சென்றவழியில் சங்கமித்திரை கழுகுமலைக்கு வந்ததாகவும் செவிவழிச் செய்திகள் உள்ளன.
கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்ட கோயில்களைப் போல பாறைகளைக் குடைந்து கோயில்கள் அமைக்க சமணர்கள் பெருவிருப்பம் கொண்டவர்களாக இருந்திருக்க வேண்டும்.
எல்லோரா குகையிலுள்ள இந்திர சபையும், ஜகந்நாத சபையும், கி.பி. 800- 1100 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவை இரண்டும் ஆரம்ப கால திராவிட பாணியில் அமைந்த கலைவடிவங்களாகத் திகழ்கின்றன. கழுகுமலை வெட்டுவான் கோயில் குறித்து ஏ.ஆர்.கணபதி ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்.
கழுகுமலையின் அடிவாரத்தில் பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இதன் மூலவர் இருக்கிற இடமும் ஒரு குடைவரையாகவே அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் தெப்பக்குளத்தில், பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைப்பதால் ஊர் மக்கள் அதையே குடிநீராக அண்மைக்காலம் வரையிலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
வெட்டுவான் கோயில் குறித்த சுவாரசியமான கதைகள் பல கோவில்பட்டி, சிவகாசி, சாத்தூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் பகுதியில் உலவி வருகிறது.
பாண்டிய நாட்டில் மிகவும் புகழ்பெற்ற சிற்பி ஒருவன் இருந்தான். அவன் சிலை செய்யும் கலைநேர்த்தியைக் கண்டு இவன்தான் தெய்வத் தச்சன் மயனோ என்று அனைவரும் வியந்தனர். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். இருவரும் ஒருநாள் திருவிழாவுக்குச் சென்றனர். கூட்டத்தில் மகன் தொலைந்து போய்விட்டான். தேடி அலைந்து அழுது புலம்பினான். மகன் கிடைக்கவில்லை.
அதன்பிறகு இம்மலையில் சமணத் துறவிகளின் சிலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டு அங்கேயே தங்கிவிட்டான்.
திடீரென்று ஒருநாள் மலையின் கீழ்ப் பகுதியில் கல் செதுக்கும் ஒலி கேட்டது. மேலே வந்தவர்கள் இந்தச் சிற்பியிடம் கீழே ஓர் இளம் சிற்பி சிலை செதுக்குகிறான். எவ்வளவு அழகாக செதுக்கிறான் தெரியுமா? பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அவ்வளவு அழகு என்றனர். அவனைப் பற்றி வருபவர்களெல்லாம் புகழ இவனுக்கு வெறுப்பு அதிகமாகியது.
ஒருநாள் தன் கையிலிருந்த பெரும் உளியை இளம் சிற்பி இருக்கும் திசையை நோக்கி வீசினான். உளிபட்டு அந்த இளம் சிற்பி அப்பா என அலறி விழுந்தான். போய் பார்த்தால் திருவிழாவில் காணாமல் போன அவனுடைய மகனின் தலையைத்தான் உளியால் வெட்டியிருக்கிறான். அங்கு அவன் செதுக்கிய சிற்பங்களைப் பார்த்து மலைத்து நின்றான். பிறகு தன் மகனை எடுத்து அழுது புலம்பினான். இதனால், இக்கோயில் பணி பாதிலேயே நின்றுவிட்டது என்று முடிகிறது அந்த செவிவழிக் கதை.
தென் தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலையில், பல நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை நடுவண், மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபொழுது கழுகுமலைக்கு சுமார் ரூ.3 கோடி வரை 1999 காலகட்டத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
உலகம் முழுவதும் ஏறக்குறைய 911 இடங்களை பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அதே போன்று கழுகுமலையையும் பண்பாட்டு மரபுச் சின்னமாக அறிவித்தால் தமிழகத்தின் பெருமை ஓங்கும்.
இப்படி தமிழ் கலாசாரத்தைப் பறைசாற்றும் கழுகுமலை வெட்டுவான் கோயிலைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். இதன் தரவையும் தொன்மையையும் பறைசாற்ற வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.
கட்டுரையாளர்:
வழக்குரைஞர்.