கட்டுரைகள் வேண்டும் ஒரு கல்வி புரட்சி!

வேண்டும் ஒரு கல்வி புரட்சி!

பதிவர்: நிர்வாகி, வகை: கட்டுரைகள்  
படம்

இன்று, உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வர்த்தக நிறுவனங்களின் உயர் பதவிகளை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய உதாரணம், பிரபல கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற உயர்ந்த ஸ்தானத்தை எட்டியிருக்கும் தமிழரான சுந்தர் பிச்சை.

இருந்தும் உலகளவில் தரம் வாய்ந்த, 200 பல்கலைகளின் வரிசையில், இந்தியாவிலுள்ள ஒன்று கூட இடம் பெறவில்லை.இன்று, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் கல்விமுறை தான், உலகிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. அதுபோல, உலகின் தரம் வாய்ந்த முதல், 10 பல்கலைகளில், இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் தவிர்த்து மீதமுள்ள எட்டும், அமெரிக்காவில் தான் இருக்கின்றன.வளர்ந்த நாடுகளின் கல்விக் கொள்கையிலிருந்து, நாம் எந்த அளவுக்கு மாறுபட்டு இருக்கிறோம் என்பதை ஆய்ந்து பார்த்தால், கல்வியில் நாம் பின்தங்கி இருப்பதன் பின்னணியில், அதிர்ச்சியளிக்கும் பல காரணங்கள் இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

முதலாவதாக, கல்வியின் தரத்தை உயர்த்தும் வழிகளை ஆராய்வதற்காக, கடந்த காங்., ஆட்சியில் நிறுவப்பட்ட, 'அனில் போர்டியா' கமிட்டியின் பரிந்துரைகள், காற்றிலே பறக்க விடப்பட்டு விட்டன.அவற்றில் ஒன்றான, ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதம், கல்விக்காக ஒதுக்கப்பட வேண்டும். அதில், 50 சதவீதம் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்காக செலவிடப்பட வேண்டும் என்ற பரிந்துரை, இன்று வரை செயலாக்கம் பெறவில்லை.இந்த ஆண்டு பட்ஜெட்டில், கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 69 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த ஆண்டு, 46 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த ஆரம்பக் கல்விக்கான நிதி, நடப்பு ஆண்டு, 42 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டு, உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு, 13 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஆரம்பக் கல்வியை புறக்கணித்து விட்டு, உயர் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவதால், கல்வியின் தரம் உயர்ந்து விடுமா? வேர்கள், நீரும், உரமும் இன்றி வாடும் போது, செடிகள் எவ்வாறு செழித்து வளரும்?மத்திய அரசின் மதிய உணவு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியும், இந்த ஆண்டு கணிசமான அளவில் குறைக்கப்பட்டிருப்பது, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் வருகையும், செயல்திறனும் குறைவதற்கு வழி வகுக்கும்.அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, டென்மார்க் மற்றும் பின்லாந்து போன்ற கல்வியில் முன்னோடியாக திகழும் நாடுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 55 முதல், 88 சதவீதம் வரை, கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.அடுத்ததாக, நமக்கு ஏற்பட்டுள்ள சவால், தரமான கல்வியை தரும் நிறுவனங்களுக்கு, இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பஞ்சம்.

தகுதி வாய்ந்த மாணவர்களின் சேர்க்கை, உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், அங்கிருந்து வெளியிடப்படும் தரமான ஆராய்ச்சி கட்டுரைகள், உயர் கல்விக்கு தகுதி பெறும் மாணவர்களை உருவாக்கும் பாடத் திட்டம் இவை தான், ஒரு கல்வி ஸ்தாபனத்தின் தரத்தை மதிப்பீடு செய்யும் அளவுகோல்கள்.
நம் நாட்டில், ஆண்டுதோறும், ஒரு கோடி மாணவர்கள், பள்ளி இறுதித் தேர்வை முடித்து, கல்லுாரிகளில் சேரும் தகுதி பெறுகின்றனர். இவர்களில், முதல், 10 சதவீதம், 'ரேங்க்' பெறும் மாணவர்கள்; அதாவது, 10 லட்சம் பேர், உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெறும் தகுதி பெற்றவராக கருதப்படுகின்றனர்.

ஆனால், அவர்களது அறிவுப்பசிக்கு தீனி போடுமளவுக்கு, தரமான கல்வி நிறுவனங்கள், நம்மிடையே விரல் விட்டு எண்ணுமளவுக்கே உள்ளன. வசதி படைத்த மாணவர்கள், தரமான கல்வியை தேடி, வெளிநாடுகளுக்கு படையெடுக்கின்றனர்.தரமான கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை பெருக்கியிருந்தால், வெளிநாட்டில் இந்திய மாணவர்களால் கல்விக் கட்டணமாக செலுத்தப்படும், 30 ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பகுதியை, இங்கேயே தக்க வைத்திருக்கலாம்.இங்கு, மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதிலுள்ள சிக்கல், உயர்கல்வியின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் மூன்றாவது முக்கிய காரணி.

அமெரிக்காவின் அட்லாண்டாவிலுள்ள பிரபலமான, 'எமரி பல்கலையில்' வர்த்தக மேலாண்மையில், முதுகலை பயிலும் இந்திய மாணவருக்கு, அந்த பல்கலையின், முன்னாள் மாணவர் சங்கம், 6.5 சதவீதம் வட்டிக்கு, இணை பிணையம் எதுவுமில்லாமல், கல்வி கடன் வழங்குகிறது.ஆனால், இந்தியாவில் கோடிக்கணக்கில் வங்கி கடன் வாங்கி ஏப்பம் விடும் பண முதலைகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் சிவப்பு கம்பள வரவேற்பளிக்கும் வங்கிகள், கல்வி கடனுக்காக தங்களை அணுகும் ஒரு ஏழை மாணவரை, புழு பூச்சியைப் போல பார்க்கின்றன.
இங்கு, நடைமுறையிலிருக்கும் சமச்சீரற்ற பாடத் திட்டம், கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும், பல்வேறு பாடத் திட்டங்கள் நடைமுறையில் இருப்பதால், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு, குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே கிடைக்கிறது.உதாரணமாக, தமிழகத்தில் நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில், மனப்பாடம் செய்து நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தான், சிறந்த அறிவாளியாகக் கருதப்படுகின்றனர். ஆனால், அவர்களால், தேசிய அளவில் நடத்தப்படும் உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு இணையாக சாதிக்க முடியவில்லை. தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில், ஒரு லட்சம் சீட்டுகள் சீந்துவாரற்றுக் கிடக்கின்றன.

பொறியியல் பட்டதாரிகள், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும், எஸ்.எஸ்.எல்.சி., தகுதிக்கான குரூப் - 4 தேர்வுக்கு போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். நலிந்து வரும் நம் உயர் கல்வியின் தரத்தை பறை சாற்ற, இதை விட சான்றுகள் என்ன வேண்டும்?நம் ஆட்சியாளர்கள், குளு குளு அறையில் அமர்ந்து அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், மாணவர் சேர்க்கையின்றி, பல அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தும் அவலமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மதிப்பீடு செய்யும், கல்வி, தனிமனித சராசரி ஆயுட்காலம், சராசரி தனிமனித வருமானம் போன்றவற்றை உள்ளடக்கிய, எச்.டி.ஐ., எனப்படும் குறியீட்டு கணக்கெடுப்பில், இந்தியா, 0.516 புள்ளிகளுடன், 187 நாடுகளில், 135வது இடத்திலும், பின்லாந்து, 0.993 புள்ளிகளுடன், உலகில் முதலிடத்திலும் இருக்கின்றன. இந்த மதிப்பீட்டில், கல்வி முக்கியமான இடம் பெறுவது கவனிக்கத்தக்கது.கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, நாடு முழுவதும் ஒரே சீரான பாடத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். ஆரம்பக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி, உயர்கல்வி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கல்விக் கடனை எளிதாக்கி, மாணவர்களின் படைப்பாற்றலையும், ஆளுமைத் திறனையும் வளர்க்கும் பாடத்திட்டத்தை கொண்டு வருவதன் மூலம், இந்தியாவில் மிகப்பெரிய கல்விப் புரட்சியை ஏற்படுத்த சூளுரைப்போம்!


இ - மெயில்: rajt1960@gmail.com

- டி.ராஜேந்திரன் -
மருத்துவர், சமூக ஆர்வலர்

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்