தமிழர் செய்திகள் தமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்!

தமிழ் தெரியாத ஏக்கத்தில் கயானா தமிழ் வம்சாவளி பிரதமர்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழர் செய்திகள்  
படம்

அண்மையில் கயானா நாட்டின் முதல் தமிழராக பிரதமர் பதவியை மோசஸ் வீராசாமி நாகமுத்து ஏற்றதை அறிந்து, தில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் செயலர் வே. ராம் சங்கர், அவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைக் கூறினார். இளம் வழக்குரைஞரான ராம் சங்கர், கயானா பிரதமர் நாகமுத்துவைச் சந்தித்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டவை:

""அண்மையில் கனடா சென்றிருந்தேன். அப்போது, அங்கு கயானா நாட்டின் பெண் வழக்குரைஞரைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவரது தந்தை கயானா குடியரசின் பிரதமராக பதவியேற்றுள்ளதையும், அவர் பூர்வீகத் தமிழர் என்பதையும் கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். அந்நிய மண்ணில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் பிரதமராக முதல் முறையாக வந்துள்ளதால் அவரைப் பாராட்ட நினைத்தேன். இதைத் தொடர்ந்து, சமீபத்தில் கயானா சென்றேன். தென் அமெரிக்க நாடான கயானா குடியரசில் சுமார் 8 லட்சம் மக்கள் உள்ளனர். எனினும், விரல் விட்டு எண்ணும் அளவில்தான் தமிழ்க் குடும்பங்கள் உள்ளன. அவர்களில் பலருக்குத் தமிழ்ப் பேசத் தெரியவில்லை. பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்துவும் அவர்களில் ஒருவர். இவரது மூதாதையர்கள் தமிழகத்தின் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஏறத்தாழ 170 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1860களில் ஆங்கிலேயர்களால் கரும்புத் தோட்டம், விவசாய வேலைகளுக்கு கப்பல் மூலம் கயானாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.

இன்றும் தமிழ்ப் பெயர்களுடன் கயானிஸ் இந்தியன் எனும் இந்திய வம்சாவளியாக அந்நாட்டில் அழைக்கப்படுகின்றனர். கயானா 1966-இல் சுதந்திரம் பெற்றது.

நிகழாண்டின் ஜூன் 20ஆம் தேதி மோசஸ் வீராசாமி நாகமுத்து கயானா நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை குடியரசுத் தலைவராகவும் உள்ளார். இவருக்கு கீழ் 25 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரும் அமைச்சராக இருக்கிறார். பிரதமர் நாகமுத்து ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமன்றி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்குரைஞராகவும் திகழ்ந்தவர்.

உலகில் முதல் முறையாக தமிழர் ஒருவர் ஒரு நாட்டின் பிரதமராக வந்துள்ளார். அவரைச் சந்திக்க எனக்கு 10 நிமிடம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவரைச் சந்தித்த போது திருக்குறள், பாரதியின் கவிதைப் புத்தகங்கள், நினைவுப் பரிசை அளித்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

அதை மிகுந்த மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட பிரதமர், தாம் எழுதிய "புதிய உலகில் மதராசியின் (தமிழனின்) வாழ்க்கை' எனும் புத்தகத்தையும், கயானா நாட்டின் பரிசையும் வழங்கினார். அவருக்கு தில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்த விரும்புவதையும், அதில் அவர் பங்கேற்க வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

அவருடனான எனது சந்திப்பின் போது, கயானா நாட்டின் சுதந்திரத்திற்காக தாம் அனுபவித்த துயரங்கள், கருப்பின மக்களுக்கான போராட்டங்கள் ஆகியவை குறித்து பகிர்ந்துகொண்டார்:

""எனது மூதாதையர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் எங்கு பிறந்தனர் என்பது தெரியாது. அதை அறிவதில் மிகவும் ஆவலாக உள்ளேன். அது குறித்து ஆய்ந்து தகவல் தெரிவிக்குமாறு இந்தியத் தூதரகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளேன்'' என்று பிரதமர் நாகமுத்து கூறினார்.

நான் அவரிடம் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற தலங்கள், கோயில்களை எடுத்துக் கூறினேன். மதுரை பற்றி கூறியதும் மிகவும் ஆர்வமுடன் கேட்ட பிரதமர், தனது தாத்தா மூலமும், பள்ளி பருவத்தின் போதும் மதுரை பற்றிய வார்த்தையைக் கேள்வியுற்றதாகவும் கூறினார். தமிழ் மீதும், தமிழ்க் கலாசாரம் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ள பிரதமர், தனக்கு தமிழ் தெரியவில்லையே என்று மனம் வருந்துகிறார்.

எனது கல்வி குறித்த விவரங்களைக் கேட்டறிந்த பிரதமர், இணையதளக் குற்றம், பன்னாட்டுச் சட்டம் போன்ற பிரிவுகளைப் பயின்றதைக் கேட்டுப் பாராட்டினார். மேலும், அந்நாட்டில் காவல் துறையினருக்கு இந்திய தண்டனைச் சட்டம், இணையதளக் குற்றம், குறித்து அறிமுக உரை வழங்குமாறும், அதற்கான அரசு முறையிலான அழைப்பை அனுப்புவதாகவும் கூறினார்.

அவரிடம் பேசுவதற்கு 10 நிமிடம் மட்டுமே பிரதமர் அலுவலகம் அனுமதி தந்துள்ளதாக நான் கூறிய போது, ""நீங்கள் இந்த நாட்டுக்கு என்னைப் பார்ப்பதற்காக 30 மணி நேரம் விமானப் பயணம் செய்துள்ளீர்கள். உங்களுக்கு ஒரு மணி நேரம்கூட நான் செலவிடவில்லை என்றால் நான் தமிழனே இல்லை'' என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார். மேலும், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக என்னிடம் அளவளாவினார். சந்திப்பின் முடிவில் என்னை வாசல் வரை வந்து வழியனுப்பிய அவரை, நினைத்தபோது தமிழர்களின் பண்பாடும், கலாசாரமும் என் நினைவில் நிழலாடியது'' என்கிறார் ராம் சங்கர்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்