தமிழ் செய்திகள் நாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை

நாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதை - அண்ணாதுரை

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ் செய்திகள்  
படம்

மொழிப் பிரச்னை இன்னும் தீர்ந்துவிடவில்லை. அதற்குப் பரிகாரம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று முதல் மந்திரி அண்ணாதுரை கூறினார்.

ஆங்கிலோ - இந்திய சங்கத்தின் விழாவில் அவர் பேசினார்.

ஹிந்தி திணிப்புக்குக் காணப்படும் எதிர்ப்பு, மொழி ஏகாதிபத்தியத்தின் திமிரைப் பெருமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆங்கிலமானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மொழி என்றில்லாமல், உலக மொழியாயிருப்பதால், அதைத் தாம் ஆதரிப்பதாகவும் அவர் சொன்னார்.

ஆங்கிலத்தைத் தீவிரமாக எதிர்த்து வந்தவர்கள்கூட, அதை தாங்கள் புறக்கணிக்க முடியாது என்பதை இன்று ஒப்புக்கொள்கிறார்கள். நாட்டின் ஒற்றுமையானது ஒரு குறிப்பிட்ட மொழியையோ, அல்லது எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்தாக வேண்டுமென்ற நிலையையோ பொருத்ததல்ல; உணர்ச்சியைப் பொருத்ததாகும். இந்நாட்டை ஒன்றுபடுத்த ஹிந்தி அவசியம் என்று சொல்வது அரசியல் கட்டுக்கதையாகும்.

பல வருஷங்களுக்கு முன்னால் ஹிந்தி எதிர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது, தேசியத்தையும் ஏன் இந்தியா பூராவையுமே எதிர்ப்பதற்குச் சமமாகக் கருத்தப்பட்டது. ஆனால், இப்போதோ ஹிந்தி பேசாத பகுதிகளுக்குக்கூட போய், ஹிந்தியை தாராளமாக எதிர்க்க முடியும்.

நாட்டுக்குள் பல்வேறு பகுதிகளுக்கிடையில் தொடர்புகொள்வதற்கு ஒரு மொழியும், வெளிநாடுகளுடன் தொடர்புக்கு ஒரு மொழியும் அவசியம் என்று சொல்வது அரசியல் அதிகப்பிரசங்கித்தனமாகும் என்றார் அண்ணாதுரை.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்