சங்க கால நாணயங்கள் என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது!, 'தினமலர்' ஆசிரியர்
அக் 13,2015:- ''நாணயங்கள் சேகரிப்பில், இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால், பழங்கால நாணயங்கள், கிடைப்பது அரிதாக உள்ளது,'' என, தமிழ்நாடு நாணயவியல் சங்கத் தலைவரும், 'தினமலர்' நாளிதழ் ஆசிரியருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சென்னையில் நடைபெறும், இந்திய நாணயவியல் சங்க கருத்தரங்கில், அவர் கூறியதாவது:
தமிழகத்தில், சங்க கால மன்னர்கள் நாணயம் வெளியிட்டுள்ளனர். முதன் முதலாக, 'பெருவழுதி' நாணயத்தை கண்டு பிடித்தேன். அதுவரை, 'சங்க காலத்தில், நாணயங்கள் வெளியிடப்படவில்லை' என, வரலாற்று ஆசிரியர்கள் கூறி வந்தனர்.
'ஆதாரம் இல்லை'
பழைய ஓலைச்சுவடிகள், புறநானுாற்றில், பாண்டிய, சோழ, சேர மன்னர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், 'அவை கவிஞர்கள் வைத்த கற்பனைப் பெயர். வேறு ஆதாரங்கள் இல்லை' என, வரலாற்று ஆசிரியர்கள் கூறினர். இந்நிலையில், பெருவழுதி நாணயத்தை கண்டு பிடித்ததன் மூலம், வரலாற்று ஆசிரியர்களின் கூற்று பொய்யானது. அந்த நாணயத்தில், தமிழ் பிராமி எழுத்து இருந்தது. அதில் இருந்த, 'ழு' எழுத்து, தமிழுக்குரியது. இதுகுறித்து, 1985ல், இந்திய நாணயவியல் சங்கத்தில், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தேன்.
அங்கு வந்திருந்த பேராசிரியர்கள், 'அசோக பிராமி எழுத்து, 2,300 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. நீங்கள் தமிழ் பிராமி எழுத்து என, எப்படி கூறுகிறீர்கள்?' எனக் கேட்டனர். அப்போது, 'ழு' எழுத்தின் சிறப்பு குறித்து விளக்கினேன்; அவர்கள் ஏற்றுக் கொண்டனர். என் ஆய்வுக் கட்டுரை, இந்திய நாணயவியல் சங்க இதழில், 1985ல் வெளியானது. கரூரில் கிடைத்த, சேர நாணயங்கள் குறித்து, 1987ல் கட்டுரை வெளியிட்டேன். சோழ, சேர, பாண்டிய, மலயமான் நாடு நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், சேர நாணயங்கள் கிடைக்காமல் இருந்தன. மதுரையில் ஒரு வியாபாரி, வில் அம்பு அச்சிடப்பட்ட ஒரு நாணயம் வைத்திருந்தார். அதன்பின், சேரர்கள் நாணயம் வெளியிட்டது தெரிய வந்தது.
நாணய புதையல்
அவரிடம், 'அந்த நாணயம் எங்கிருந்து கிடைத்தது' என, கேட்டதற்கு, தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார். அந்த நாணயம், கரூரில் கிடைத்திருக்கும் என, நினைத்து அங்கு சென்றேன். அங்கு அமராவதி நதி அருகே, மலைவாழ் மக்களுக்கு, நாணய புதையல் கிடைத்துள்ளது. அவற்றில், பெரும்பாலானவற்றை உருக்கிவிட்டனர்.
அதை கேட்டு கவலை அடைந்தேன். அதைத் தொடர்ந்து, தென்னிந்திய நாணயவியல் சங்கத்தை உருவாக்கினோம். சங்க கால நாணயங்கள், என் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது.
தொன்மையான நாணயங்கள், அவற்றின் வரலாற்றை, அறிந்து கொள்வதற்காக, இந்திய நாணயவியல் சங்கம் துவக்கப்பட்டது. தமிழகத்திலும், நிறைய நாணயங்கள், அருங்காட்சியகத்தில் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு, அங்குள்ள ஊழியர்கள், நாணயங்களை காண்பிக்க மறுக்கின்றனர்.
ஏன் எனக் கேட்டால், சுத்தம் செய்ய சென்றுள்ளதாக கூறுகின்றனர். சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்ய மறுக்கின்றனர். அவர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இங்கு நடைபெறும் கருத்தரங்கில், நாணயவியல் ஆய்வாளர்கள், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க உள்ளனர். ஒருவர் ரோமன் அடையாளம் உள்ள நாணயம் குறித்து பேச உள்ளார்.
என் நாணயவியல் ஆய் வில், தமிழகத்திற்கும் ரோமாபுரிக்கும் உள்ள தொடர்பு குறித்து, நிறைய கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன்.ரோமானியர்கள் தமிழகத்திற்கு வந்து வாணிபம் செய்துள்ளனர்.
கொங்கு நாடு வாணிபத்தில், சிறப்பாக இருக்க காரணம், 2,000 ஆண்டு வரலாறு உள்ளது.
தற்போது இளைஞர்கள் அதிக அளவில், நாணயங்களை வாங்குகின்றனர்; நாணயம் கிடைப்பது அரிதாக உள்ளது. ஐந்து ரூபாய்க்கு வாங்கிய நாணயம், இன்று, 1,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வசதி படைத்தவர்களும் நாணயங்களை வாங்குகின்றனர்.
நல்ல வரவேற்பு
பல்லவர், பாண்டியர் கால நாணயங்கள் கிடைப்பதில்லை. நாணயவியல் தொடர்பான புத்தகங்களுக்கு, நல்ல வரவேற்பு உள்ளது. என் புத்தகத்திற்கு, 'டிமாண்ட்' உள்ளது. வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் இருந்து என், பல்லவர் நாணயங்கள் புத்தகத்தை கேட்டுள்ளனர். இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.