தமிழர் சிறப்புகள் அத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1

அத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - 1

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழர் சிறப்புகள்  
படம்

சங்க இலக்கியம் அக்காலத்தில் நடுகற்களை வணங்கும்போது மக்களிடையே வழக்கில் இருந்த சில பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிவிக்கிறது. நெல் தூவி வழிபடுவது அதில் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. ஒரு மரபாக அது அன்று நிலவியிருந்ததைக் காட்டுகிறது.

நடுகள் வழிபாடும் நெல்தூவி வணங்கும் மரபும்

சங்க இலக்கியத்தில், புறநானூறு, பாடல் எண் 335-ல், மாங்குடி மருதனார்,

“ஒன்றாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறேந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்

கல்லேபரவின் அல்லது

நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”

என்று, நடுகல் கடவுளரைத் தவிர நெல்லை சொரிந்து வழிபடும் வேறு கடவுள் இல்லை என்பார். பூக்களைத் தூவி கடவுளரை வழிபடுவது போலவே அக்காலத்தில் நெல்லைத்தூவி வழிபடும் மரபு இருந்ததை இப்பாடல் சுட்டுகிறது. பூக்களைத் தூவி வழிபடுவதைவிட நெல் தூவி வழிபடுவது சிறந்ததாகhf கருதப்பட்டதையும் இது சுட்டிநிற்கிறது.

பின்னர் சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரம்,

‘அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி’ (6-124)

என்று மலரையும், அறுகையும், நெல்லையும் தூவி (மங்கல மகளிர் தம் அணிகலன்கள் ஒலிக்க இருமருங்கும் திரியும் திருமகள் இடத்தைக் கடந்தனர்) என்றும்,

‘அறுகு சிறுபூளை நெல்லொடு தூயஉய்ச்’ (9-34)

என்று, அறுகம்புல், சிறு பூளைப்பூ, நெல் ஆகியவற்றைத் தூவி சாத்தான் கோயிலில் வணங்கியது குறித்தும் தெரிவிக்கிறது.

நெல் வளக்குறியீடு

வளக்குறியீடாக நெல் சமுதாய வழிபாடுகளில் இடம்பெற்றன. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் நெடுநல்வாடை 43-44 வரிகளில், மகளிர் நெல்லையும் மலரையும் தூவி தெய்வத்தை வழிபட்டதை,

“நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது

மல்ல லாவன மாலை யயர”

என்று காட்டுகிறது.

இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனாரின், மலைபடுகாடாம் (வரி 394-96),

‘செல்லுந் தேயத்துப் பெயர்மருங் கறிமார்

கல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த

கடவு ளோங்கிய காடேசு கவலை”

என்று கூறுகிறது. நடுகல் வணக்கத்தை, புறநானூறு பாடல் 314,

“ஒயிமென் கூத்த லொண்ணுத வரிவை

நடுகற் கைதொழுது பரவும்”

என்றும், அல்லூர் நன்முல்லையாரின் புறநானூறு பாடல் 306,

“நடுகல் கை தொழுது”

என்றும் நடுகல் தெய்வங்களைத் தொழுவதைக் குறிப்பிடுகிறது.

நடுகல் வழிபாட்டை கணக்கில் கொண்டால், குறிஞ்சி, முல்லை திணை வாழ்க்கை மக்கள் மட்டுமின்றி, தமிழரின் ஐந்து திணைவாழ்க்கை மக்களும் நடுகல் வழிபாட்டை மேற்கொண்டனர் என்பதற்கு இப்பாடல்களே சான்றாகின்றன.

திணை நிலைச் சமுதாயத்துக்குரிய அடிப்படையான உணவுப் பொருளும் வழிபாட்டில் அவற்றின் இடமும்

“ஒவ்வொரு திணை நிலைச் சமுதாயத்துக்கும் ஒரு அடிப்படையான உணவுப் பொருள் உண்டு. தினை குறிஞ்சியிலும் வரகு, முல்லையிலும் நெல் மருதத்திலும் அடிப்படை உணவுப் பொருட்கள். இந்த அடிப்படை உணவுப் பொருட்கள் அந்தந்த நிலத்தின் வளக்குறியீடுகளாகக் கருதப்பட்டுள்ளன. ‘மென் தினை யாணர்து’ (புறம் 119:4), ‘வருந்தா யாணர்த்து’ (புறம் 120:16) எனத் தினை புது வருவாயாகக் காட்டப்பட்டுள்ளது. இத் தினை சடங்குச் சூழல்களில் இடம்பெற்றுள்ளது.

“மறிக்குரல் அறுத்து தினைப்பிரப் பிரீஇச்

செல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்

தோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா

வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்தி

பேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல்

நோதக் கன்றே”

என்று குறுந்தொகை 263:1-6 வரிகளில், வெறியாட்டில் தினை இடம் பெற்றதைக் காட்டுகிறது. முருகாற்றுப்படையில் (வரி 242) தினை இரத்தத்துடன் கலந்து தூவி வழிபட்ட நிலை காட்டப்பட்டுள்ளது. ஆட்டின் ரத்தம் இங்கு வளக்குறியீடாக விளைச்சல் சக்தியாக உள்ளது” என எடுத்துக்காட்டப்படுவது மனங்கொள்ளத்தக்கதாக உள்ளது. (பெ.மாதையன், சங்க இயக்கியத்தில் வேளாண் சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், (2004), பக் 94-95). “ரத்தம் உயிர்ச்சக்தியின் அறிகுறி. ரத்தத்தில் விதை நனைக்கப்பட்டால் வளரும் என்பது அக்கால நம்பிக்கை” என்கிறார் கா. சுப்பிரமணியன். (சங்ககால சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், (1987), ப 36).

இவ்வாறு மருதநிலத்து நெல்லானது, குறிஞ்சி நிலத்தின் குறியீடாக உள்ள நடுகல் வழிபாட்டுக்கும் வளச் சடங்குக்கும் பயன்பட்டதாக உள்ள நிலை இருவிதங்களில் பொருள் கொள்ளத்தக்தாக உள்ளது. நடுகல் எடுப்பும், நடுகல் வழிபாடும் ஐந்து திணை நிலங்களிலும் நிகழ்ந்தது என்பது ஒருபொருள். மற்றொன்று நெல் தூவி வழிபடுவது திணை பகுப்பு மீறி சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பது.

நடுகள் வீரர்களின் தற்காலப் பொதுப் பெயர்கள்

இத்தகு சிறப்புபெற்ற நடுகல் தெய்வங்கள், தன் இயற்பெயர் நீங்கி, சில பொதுப்பெயர்களை வழக்கில் பெற்றுள்ளமை குறித்து முன்னர் குறிப்பிடப்பட்டது. இப்பொதுப் பெயர்கள் வீரத்தை அடியோட்டமாகக் கொண்டிருப்பது பெயராய்விலிருந்து அறியமுடிகிறது.

வேடியப்பன்

நடுகற்களுக்கு தற்காலத்தில் பெருமளவுக்கு வழக்கில் உள்ள பெயர் இது. ‘வேட்டை அப்பன்’ என்ற பெயர் வழக்கில் திரிந்து ‘வேடியப்பன்’ ஆயிற்று என்பர். நடுகற்சிற்பங்களில் வீரனின் சித்தரிப்பு வில், அம்பு, கேடயம், குறுவாள் போன்ற ஆயுதம் தாங்கியவராகவே இருக்கும். வீரன் ஆயுதம் ஏந்தியது போருக்கா? வேட்டைக்கா? என அறியமுடியாத பேதத்துடன் இருப்பதால், பொதுவில், வீரனை வேட்டைக்கு ஏகியவனாகவே மக்கள் கண்டனர். இதற்கு விலங்குகளுடன் நேர்கொண்ட நடுகல் காட்சி சித்தரிப்புகள் கூடுதல் துணையாயின. அதனால் வேட்டையப்பன் என்ற சுட்டு நிலைபெற்றது. வேடியப்பன் எழுப்பப்பட்ட இடம் ‘வேடியப்பன் கோயில்’ ஆயிற்று.

 

 

 

(வேடியப்பன் கோயில், இடம் - நாதியானூர், அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்)

 

கரிய வேடியப்பன் / கரிவேடியப்பன்

இப்பெயரின் நேரடிப் பொருள் பெரிய வேடியப்பன் அல்லது மூத்த வேடியப்பன் என்பது. கரு என்பதின் திரிபே கரி ஆகும்.

கரு என்பது, இரு என்பது போன்று, பெரியது, மூத்தது எனப் பொருள் வழங்கும் சொற்களுள் ஒன்று. சங்க கால பெயர்மரபில் இருங்கோ என்பது பெருங்கோ என்று பொருள் தருவதாகும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரு என்பதற்குப் பெரிய என்பதுடன் கரிய என்ற பொருளையும் காட்டும் (சந்தியா பதிப்பகம், பாகம்-1, ப 279). இன்று கரு/கரி சொல் நிறத்தின் அடிப்படையான சொல்லாக மட்டும் பார்க்கப்படும் நிலை உள்ளது. தருமபுரி / கிருஷ்ணகிரிப் பகுதியில் தலைமுறையில் மூத்தவனுக்கு அதாவது முதல் மகனுக்கு ‘கரியன்’ என்றும் ‘இருசன்’ என்றும் பெயரிடும் மரபு எமக்கு முந்தைய தலைமுறைவரை வழக்கில் இருந்தது. பெண் மூத்தவள் எனில், ‘கரியா’, ‘கரியம்மா(ள்)’, ‘இருசம்மா’, ‘இருசாயி’ ஆவாள். அடுத்தவன்/ள் சின்னவன்/சின்னான், சின்னாயி ஆவாள். இப்பகுதிகளில் விஷ்ணுவுக்கு உள்ள பெயர்களுள் ஒன்று ‘கரிவரதராசப் பெருமாள்’ என்பது. இவரது திருக்கோலம், சங்குசக்கரதாரியாக நின்ற கோலம் ஆகும். இங்கு கரி பெரிய என்ற பொருளிலேயே பயின்று வருகிறது.

 

 

 

(இடம் - மணியக்காரன்கொட்டாய், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம்.

புகைப்படம் நன்றி - ஆ.அன்பழகன், கல்சி குமார்)

 

‘கரியவன்’ என்ற பெயரானது சிவனுக்கு உரிய பெயர்களுள் ஒன்று. சிவன் கருமை நிறத்தவன் என்பதற்கு நமது புராண, இதிகாச, ஆகம நூல்கள் எதிராக உள்ளன என்பது கொண்டு ஆய்கையில் கரியவனாகக் குறிக்கப்பட்ட சிவன், பெரியவன், மூத்தவன் என்ற பொருளிலே என்பது விளங்குகிறது. இந்திரனையும் கரியவன் என்று குறிப்பிடுவதும் இந்த மூத்தவன்/ பெரியவன் பொருளிலேதான். ‘கரிக்கோலம்’, ‘கரிநாள்’ என்பன முறையே கணவனை இழந்த மனைவிக்கு முதல் பத்துநாள் வரை செய்விக்கப்படும் கோலம் மற்றும் தீயநாள், ஆகாத நாள் என்பன அகராதி விளக்கமாகும். நடைமுறையில் இரண்டும் மூத்தோர் நினைவொடு தொடர்புடைய பொருள் தருவனவாக உள்ளன. ‘கரிவரி’ என்பது ஒருவகை வெள்ளைப்பச்ஷாணம் என்பதும், ‘கரிவாளை’ என்பது, பெரிய கடல்மீன் வகையில் ஒன்றை குறிப்பிடுவது என்பதும், ‘கரிகை’ என்பது ஒருவகை செந்நிறமுள்ள கஸ்தூரியைக் குறிப்பிடுவது என்பதும், ‘கரிசற்காடு’ என்பது அடர்காட்டை குறிப்பது என்பதும், ‘கரிசண்ணி’ என்பது, வெள்ளைநிற காக்கணஞ்செடியைக் குறிப்பிடுவது என்பதும் ஒருகாலத்தில் கரு/கரி என்ற பதமானது இன்று அர்த்தபடுத்தப்படும் கருப்பு நிறத்திலிருந்து வேறுபட்ட பொருளை, குறிப்பாக குணப்பொருளைத் தருவதாகவும் விளங்கியதை அறியமுடிகிறது.

இதிலிருந்து கரிவேடியப்பன் / கரிய வேடியப்பன் பெயர், பெரிய வேடியப்பன் / மூத்த வேடியப்பன் என்ற பொருள் தரும் பெயராகும் என்பது வெளிச்சமாகிறது. கரி என்பது காரி என்றும் வழகில் விரிவு கொள்ளும். காரித்தாய், காரி (ஐயனார்), பெயர்கள் இதனையொட்டி ஆலோசிக்கத்தக்கவை.

வேடர்

வேடியப்பன் பெயர்க்காரணங்கள் வேடருக்குப் பெருந்தும். நடுகல்லில் வீரனின் சிற்பச் சித்தரிப்பு, வீரன் வேட்டைக்கு ஏகும் பேதத்தை அடையச் செய்வதால் நடுகல் வீரன், வேடன் ஆகி அர் விகுதி சிறப்பு பெற்று ‘வேடர்’ என வழக்குப் பெற்றுள்ளான்.

சிலைக்காரன்

வீரன் சிலையாக வாழ்வதால் நடுகல் ‘சிலைக்காரன்’ என வழக்குப் பெற்றது. சிலையாதல் என்ற உருவகம், வணங்கத்தகும் நிலையாதல் என்ற பொருளையும் தருவது. வீரன் வணக்கத்துக்கு உரிய கடவுள் ஆனான் என்பதையே சிலைக்காரன் என்ற தொடர் சுட்டும் பொருளாகும்.

 

 

 

(‘ஸ்ரீ சில வீரப்பன் சுவாமி திருக்கோயில்’,

இடம்: வனத்துறை -சுற்றுலா மாளிகை, தருமபுரி நகரம்)

 

தருமபுரி நகரத்தில் அமைந்துள்ள நடுகல், ‘ஸ்ரீ சில வீரப்பன் சுவாமி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இக்பெயரில் ஸ்ரீயும் சுவாமியும் பிற்கால இணைப்புகள். ‘சில வீரப்பன்’ என்பது ‘சிலை வீரப்பன்’ என்பதன் மருவுவழக்காகும், வீரப்பன் என்பது வீரன்+அப்பன் என்பதின் குருக்கம் ஆகும்.

வீரக்காரன்

நடுகல் சிற்பம் வீரனை காட்சிப்படுத்துவதாலும், வீரம் வித்தி மாய்ந்த வீரனென்பதால் நடுகல்லை வீரக்காரன் பெயரால் மக்கள் அழைக்கின்றனர்.

 

 

 

 

(இடம் - செம்மனூர், பெரும்பாலை, தருமபுரி மாவட்டம்.

புகைப்படம் நன்றி - ச.செல்வராஜ்)

 

முனியப்பன்

முனியப்பன் என்ற பெயர் ஊர்க்காவல் தெய்வமாக வீற்றிருக்கும் ஐயனாருக்கு நாட்டுப்புறங்களில் வழகில் உள்ள மற்றொரு பெயர். நீர் நிலைகளைக் காக்கும் தெய்வமாகவும் இவர் இடம்பெறுபவர். தற்காலத்தில் நீரைச் சேகரிக்கும் பெரிய அணைக்கட்டுகளான மேட்டூர் ஸ்டான்லி அணைக்கட்டு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கட்டு போன்றே பல அணைகட்டுகளிலும் இவர் இடம்பெறுவது, நீர்நிலைகளோடு உள்ள இவரது தொடர்பு குறித்த வலிமைக்குச் சான்றாகிறது.

ஊர்களின் புறத்தையும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை அடுத்தும், ஏரிக்கரையையும், ஆற்றங்கரையையும் தம் அமைவிடங்களாக நடுகற்கள் கொண்டிருக்கின்றன. நீர்நிலைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டதால், அந்நடுகலானது வீரன் நீர்க்கத்துப்பட்ட வீரனின் நினைவில் எழுப்பட்டதாகும் எனத் தோன்றுகிறது. நடுகல்லுக்கும் நீர்நிலைகளும் உள்ள தொடர்பு

“ஆற்றங்கரை வேடுவனே அதிகாரம் பெற்றவனே

துண்டு தடிகாரா தூரப்போன வல்லவனே

வில்லாற்றல் மிகுந்தவனே வேடுவனே யான்சரணம்

சர்வம் சரணமப்பா சாட்சாங்க தெண்டனிடேன்

ஆறுதப்பு நூநூபிழை அடியேன்யான் செய்தாலும்

அப்பா மனம் பொறுத்து அனைவரையும் காத்தருளும்

வெள்ளைக் குதிரையேறி வெளிப்பட்டு வரவேண்டும்

வெண்கலத் தமுக்கு போட்டு போட்டு வீசிநீ வரவேண்டும்

முங்க வனத்தைவிட்டு வெளிப்பட்டு வாருமப்பா”

என எடுத்துக்காட்டப்படும் நாட்டுப்புற வணக்கப்பாடல் ஒன்றால் அறியாலாம். (நடன காசிநாதன், காலச்சுவடுகள், ப 86). எனில் ஏரி, ஊர்க்காத்துப்பட்டார் நினைவில் எடுக்கப்பட்ட கல்லானது, பிற்காலத்தில் நடுகல் எடுக்கப்பட்டதற்கான காரணம் மறைய முனியப்பன் பெயர் பொதுப்பெயராகியது எனலாம். போலவே, இரவுக்காலத்தில் ஐயனார் குதிரையில் ஏறி ஊர்க்காவல் செய்கிறார் என்றும் கருதப்படுபவர். இந்தவகையில் ஊர்க்காத்துப்பட்ட வீரனின் நடுகல் ஆதியில் ஊர் காக்கும் தெய்வமான முனியப்பன் பெயரோடு குறிக்கப்பட்டதெனலாம்.

ஐயனாரப்பன் / ஐயனார்

காவல் தெய்வமான முனியப்பன் பெயருக்குப் பொருந்தும் காரணங்கள் ஐயனாருக்கும் பொருந்தும். பெரும் வழக்கில் ஐயனாரும் காவல் தெய்வமே. ஐயனார் பெயருடன் அப்பன் இணைந்து ஐயனாரப்பன் பெயர் தோற்றம் கொண்டுள்ளது.

சாத்தான் வழிபாடு குறித்த செய்திகள் துவக்ககால தமிழ் இலக்கியத்துள் விரவி காணப்படுகின்றன. சங்க காலத்தில் சாத்தான் வழிபாடு பெருமைக்குரியதாக விளங்கியது. சங்ககாலத்தில் சாத்தான் தெய்வம் பெளத்த தெய்வமாகவே அல்லது சமணரின் தெய்வமாக இருந்திருக்கலாம். வைதீக மதத்தின் தெய்வமாக இருந்திருக்க இயலாது (சாமி பி.எல். தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, மறு.பதி.1980, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, ப 16). பக்தி இலக்கிய காலத்தில் இவ்வழிபாடு சிறுதெய்வ வழிபாடாக மாறினதை நாயன்மார், ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்து அரியமுடிகிறது. இன்னும் சற்று பிற்பட்ட காலத்தில் சாத்தான் தெய்வம், சிவன் கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒன்றாக வீற்றிருக்கும் நிலை பெற்றது.

அரிதாக நிகழும் சில வழிபாட்டு மீட்சியின் நிகழ்வாகச் சாத்தான் வழிபாட்டில் சபரிமலை சாஸ்தா வடிவில் ஏற்பட்டுள்ளது. சில ஐயனார் கோயில்களில் ‘மதுரை வீரனு’க்கு உயிர்ப்பலி கொடுக்கும்போது அதை ஐயனார் பார்க்கக்கூடாது என்பதற்காக ஐயனாருக்கு முன் திரைவிரித்து தடுக்கின்றனர். இதிலிருந்து ஐயனாருக்கு சைவ பலி எவ்வளவு அடிப்படையானது என்பது தெளிவாகிறது. இது ஐயனார் வழிபாட்டில் சமண, பெளத்த கொள்கைகளின் தாக்கம் எவ்வளவு வீச்சுடையது என்பதை காட்டுகிறது.

சிலப்பதிகாரத்தில் ஊருக்குப் புறம்பாக அமர்த்தப்பட்ட புறம்பணையான் என்ற சாதவாகனன் தெய்வமே தற்காலத்தில் கிராமங்களில் ஊருக்குப் புறம்பாகக் காணப்படும் ஐயனார் என்று கொள்ள வேண்டும். (சாமி பி.எல். மேலது. ப 17).

ஐயனார் உருவச் சிலை குறித்த சில செய்திகள் வழிபாட்டில் அதன் பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடையதாக உள்ளது. கிராமப்புறங்களில் அமைக்கப்படும் ஐயனாருக்கு மண்ணாலான குதிரைகள், யானைகள் செய்து நேர்ச்சியாக வைப்பர். சில ஐயனாருக்கு புலியின் உருவச்சிலை வைக்கப்படுவது. சிற்பக்கலையில் பெளத்த சாஸ்தாவுக்குக் குதிரையும், சமண சாஸ்த்தாவுக்கு யானையும் வாகனமாக இருக்கின்றன. இது குதிரை வாகனமுடைய சாஸ்தாவைப் பெளத்தரும், யானை வாகனமுடைய சாஸ்தாவை சமணரும் வணங்கினர் என்ற கூற்றை ஒட்டியதாகலாம்.

வேட்டை வீரன் மற்றும் வீர வழிபாட்டின் தொடர்ச்சியாகவே சாத்தான் தெய்வ வழிபாடு வளர்ந்துள்ளது. இதனால் சங்க காலத்தில் சாத்தான் தெய்வத்தின் பெயரை பல புலவர்களும், புரவலர்களும் கொண்டிருந்தனர். ராஜராஜன் காலம் வரை இப்பெயர் மக்களிடையே பெரும் செல்வாக்குடன் விளங்கியமையை தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளில் இருந்து அறிய முடிகிறது, ஆனால் பிற்காலத்தில் இப்பெயர் அவ்வளவாக வழக்கில் இல்லை. ஆனால், ‘கேரளத்தில் இன்றும் செருமர், தீயர் முதலிய இனத்தாரிடம் இப்பெயர் பெரிதும் வழங்குகிறது. இனக்குழு மக்களான பெட்டக்குறும்பர் கொடுஞ்சாத்தான் என்ற தெய்வத்தை வணங்குகின்றனர். குடகு நாட்டில் வாழும் கொடவர்களுக்கு ஐயப்பனாக வேட்டைத் தெய்வமாக இருப்பதைக் காணலாம். ஐயப்பன் இரவு நேரங்களில் கொடிய வேட்டை நாய்களுடன் காடுகளில் உலவுவதாக நம்புகின்றனர். வேட்டை துவக்குமுன் ஐயப்பனுக்கு பூசை படைக்கின்றனர். ஐயப்பன் முதலில் வேட்டைத் தெய்வமாக இருந்ததை தெரிந்துகொள்ளலாம்’ என்றும் ‘சாத்தன் என்ற தெய்வம் வீரவணக்கத்தின் அடிப்படையாகத் தோன்றியதென்று தெரிகிறது. இந்தத் தெய்வப் பழங்குடி மக்களின் தெய்வமாக இருந்து, பழங்குடி மக்களின் தாய்த்தெய்வத்தின் மகனாகவும் கருதப்பட்டான். காரித்தாயின் மகனாகவும் கருதப்பட்டான். வேட்டைத் தெய்வமும் வீரவணக்கத் தெய்வமும் ஒன்றாகியது” என்றும் சாமி பி.எல். அவர்கள் காட்டுவது மனங்கொள்ளத்தக்கதாக உள்ளது.

எனில், ஆதியில் வேட்டைக்கும், வீரவழிபாட்டுக்கும் உரியதாக இருந்த சாத்தான் தெய்வத்தைப் பெளத்தரும், சமணரும் தங்கள் தெய்வமாக ஆக்கிக்கொண்டனர் என்பதும் பின்னர் சைவரும் தங்கள் தெய்வமாக ஆக்கிக்கொண்டதும் விளங்குகிறது.

கிருஷ்ணாரப்பன்

கிருஷ்ணாரப்பன் பெயர், பெருந்தெய்வ வழிபாட்டில் வைணவ சமயத்தின் கிருஷ்ணரின் பெயரில் அமைந்ததோ என்ற பொருள் மயக்கத்தைத் தருகிறது. உண்மையில் கிருஷ்ணாரப்பன் என்ற பெயர் கிருடி / கிருட்டி என்ற பெயரின் மருவுவழக்காக உள்ளது. கிருடி / கிருட்டி என்ற சொல் ‘பன்றி’ விலங்கைக் குறிக்கும். நடுகற்கள் பன்றி, குதிரை, புலி, மான் என விலங்குகளுடன் போரிட்டு மாய்த்தவர்களுக்கும் எடுக்கப்பட்டிருப்பது அறிந்ததே (வரவிருக்கும் ‘நடுகற்களின் வகைகள்’ பகுதில் இதன் விரிவைக் காணலாம்). பன்றி குத்திப்பட்டான் கற்களே கிருடியப்பன், கிருட்டியப்பன் என அழைக்கப்பட்டு, மக்கள் வழக்கில் திரிந்து கிருஷ்ணாரப்பன் என வழக்குப்பட்டுள்ளது எனத் தெளியமுடிகிறது.

மீனாரப்பன்

நடுகற்கள் பெற்றிருக்கும் மீனாரப்பன் என்ற பெயர் ‘மீளியப்பன்’ என்பதன் மருவுவாக உள்ளது. ‘மீளி’ என்பது சங்க இயக்கியங்களில் பயின்று வரும் ஒரு சொல். மீளி என்பதற்கு ‘வீரன், மறம், பாலைநிலத்தலைவன்’ என பொருள்கள் உண்டு. இதனுடன், பெருமை, வலிமை, விறலோன் அதாவது திண்ணியன் என்ற பொருளையும், (சூ.3966), பெருமையில் சிறந்தோனை மீளி (சூ.837) என்றும் பிங்கல நிகண்டு சுட்டும். மீளியும், பின்ஒட்டுகளுடன் மீளியின் பயன்பாடும் சங்க இயக்கியத்தில் காண முடிகிறது (மீளி: பெரும்.75, பரி. 16-22, கலி. 17-21; மீளி உள்ளம்: அகம். 373-7; மீளிகொள் மொய்ம்பினவர்: ஐ.குரு.381-4; மீளி நெஞ்சு: அகம்.379-4; மீளிமறவன்: கலி.104-50; மீளியாளர்: புறம். 260-13; மீளிவேழம்: அகம். 381-2; மீளிவேல்தானையர்: கலி.31-24). பிற்காலக் கல்வெட்டு ஒன்று (SII. Vol: 14. எண்.169.) மீளி சொல்லை தலைவன் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளது. (ஏ. சுப்பிராயலு, கல்வெட்டு அகராதி, பகுதி-2, ப.50). புறப்பொருள் வெண்பாமாலை வெட்சிப்படலத்தில் கொற்றவைநிலை துறையை விளக்க -

“ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்

கூளி மலிபடைக் கொற்றவை- மீளி

அரன்குருங்க வாகோள் கருதி நடையார்

முரண்முருங்கத் தான்முந் துறும்.”

என்ற செய்யுளைக் காட்டுவார்.

வீரன் என்று பொருள் வழங்கிய சங்ககால மீளி அப்பன் பண்புப்பெயரை ஏற்று பின்னர் வழக்குப் திரிபடைந்து மீனாரப்பன் ஆகியுள்ளது என்பதை மேற்கண்ட சான்றுகள் காட்டுகின்றன.

 

 

 

 

(இடம் - செம்மனூர், பெரும்பாலை, தருமபுரி மாவட்டம்.

புகைப்படம் நன்றி - ச.செல்வராஜ்)

 

சன்யாசியப்பன்

துறவரத்தை மேற்கொண்ட தலைவன் என்று பொருள்படும்படி சன்யாசியப்பன் பெயர்வழக்கு தோற்றம் தருகிறது. புறனாக, ‘சன்னாகம்’ என்றால் போர்க்கவசம், போருக்கு ஆயத்தம் என்பது பொருள். இதிலிருந்து ‘சன்னாகி’ வழக்கு உருவாகி போர்கவசம் தரித்தவன், போர் வீரன் என்ற குறிப்பைப் பெற்ற சொல் என்பது விளங்குகிறது. இந்த வகையில் ‘சன்னகம்’ என்பது ‘பூங்கருவி’ என்ற போர்கருவியையும், ‘சன்னவீரம்’ என்பது வெற்றிமாலை என்ற அணிகலன் பெயராகியுள்ளது. ‘வெற்றி வீரத்தலைவன்’ என்று பொருள்படும் சன்னாகியப்பன் என்பது மருவி சன்யாசியாப்பன் என்ற வழக்குப் பொற்றுள்ளது.

 

 

 

 

(இடம் -  வாழைத்தோடம், முத்துராயன்குண்டு, பாலக்கோடு, தருமபுரி மாவட்டம்)

 

ஆஞ்சநேயர் கல்லு

நடுகல்லுக்கு இப்பெயர் வழக்கு புதிராக உள்ள தோற்றம் தருகிறது. கிருஷ்ணாரப்பன் பெயர், பகவான் கிருஷ்ணரின் பெயரில் அமைந்ததோ என்ற பொருள் மயக்கத்தைத் தந்ததைப் போலவே, ஆஞ்சநேயர் பெயர் அனுமனின் பெயர் இடப்பட்டிருகிறது என்ற மயக்கத்தைத் தருகிறது. உண்மையில் ஆஞ்சநேயர் கல்லு என்ற வழக்கு, ‘ஆகவியன் கல்’ என்ற வழக்கின் திரிபாக உள்ளதோ என்று சொல்லாய்வு செய்யவைக்கிறது. ஆகவியன் என்பதற்கு போர்வீரன் என்பது பொருள். இப்பொருளைச் சார்ந்து, ‘ஆகவம் = போர், ஆகவ பூமி = போர் பூமி’ வழக்குகள் உள்ளது கவனிக்கத்தக்கது. இருந்தும், புறப்பொருள் வெண்பாமாலை, காஞ்சிப்படலத்தில் ‘ஆஞ்சிக்காஞ்சி’ என ஒரு துறையை வகுத்துக் கூறுகிறது. அதனை, “போர்க்களத்தில் கணவனுடன் தீயில் மூழ்கு மனைவியின் பெருமை கூறும் புறத்துறை” என்பர். அத்துறை சூத்திரம்,

“காதற் கணவனெடு கனையெரி மூழ்கும்

மாதர்மெல் லியலின் மலிபுரைத் தன்று”

என்று சித்தரிக்கிறது. எனில், போரில்பட்ட வீரன் சிதையில் தானும் மூழ்கி சதியாகிய நிகழ்வுக்கு எடுக்கப்பட்ட கல், ஆஞ்சிக்கல் என வழக்குப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணரலாம். ஆஞ்சிக்கல் வழக்கு ஆஞ்சநேயர் கல்லாகியிருக்கிறது. (ஆஞ்சி என்பது சதியினைக் குறிக்கும் சொல்லா அல்லது வழக்கில் அறியப்படும் அஞ்சுதல் என்ற பொருளை மட்டும் கொண்டதா என விவாதங்கள் எழலாம். முன்னர் ஆலோசித்த கரி / கரிய சொல் கருப்பு நிறத்தை மட்டும் பொருளாகக் கொள்வதில் வேறு பொருள்கள் நெடுங்காலத்துக்கு முன்னரே மறைந்து இருக்கும் நிலையுடன் ஒப்பிட ஆஞ்சியும் மேலாய்வை வேண்டுகிறது எனலாம்).

 

 

 

 

(இடம் - மணியக்காரன்கொட்டாய், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம்.

புகைப்படம் நன்றி - ஆ.அன்பழகன், கல்சி குமார்)

***

குறிப்பு: இடம்பெற்ற நடுகள் சிற்பங்களுக்கும் விவரிக்கப்பட்ட பெயர் மரபுக்கும் தொடர்பில்லை.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்