தமிழர் சிறப்புகள் அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்

அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழர் சிறப்புகள்  
படம்

இந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல; அரசின்/பேரரசின் எல்லைகளை மாற்றியமைத்த போர்களும் அல்ல; நாடு பிடித்து மண்ணாளும் மன்னனின் ஆசைக்குப் பலியான வீரர்களால் புகழ்பெற்ற மன்னனின் வரலாறுகளும் அல்ல.

இப்போர்களில், கொத்துக்கொத்தாக மாய்ந்த வீர்ர்களைக் காணமுடியாது. போருக்குத் தொடர்பற்ற அப்பாவி மக்கள், முதியோர், பெண்கள், குழந்தைகள் அவலமாய் மாய்ந்தனர் என்று புள்ளிவிவரங்ளை அடுக்கமுடியாது. அப்படி மாய்ந்தனர் என்ற செய்தியையும் கேள்விப்படவும் முடியாது. சரணடைந்தவர்களைக் கொல்லும் கீழ்மையை, போர் யுக்தியில் ஒன்றாகக் கொள்ளும் தீர்மானத்தை அறிய முடியாது.

 

 

 

இப்போர்களில் மாய்ந்த வீரன், ஒருவனே. அரிதாக இருவர் மாய்ந்த செய்தியை அறியமுடியும். வீரனின் மரணத்துடனே இப்போர் முடிந்துவிடுகிறது என்பது ஒரு குறிப்புதானேயன்றி, மரணம் கட்டாயமன்று. ஆனால், இப்போரைப் புரிந்தவர்களால் வீர மரணம் விரும்பப்பட்டது; சமூகத்தினரிடையே போற்றப்பட்டது; வீர மரணத்தைத் தழுவியவர்களை வணங்குவது இயல்பான மரபாக, சந்ததிகளுக்குத் தலைமுறைக்குத் தலைமுறை கடத்தப்பட்டது.

 

 

 

 

இலக்கியங்களும் வரலாற்று நூல்களும், பேரரசர்களின் வீரத்தை, கொடையைப் போற்றி, மரணமில்லாப் பெருவாழ்வை அவர்களுக்கு வழங்கியிருக்கின்றன. இருந்தும், இவர்கள் தெய்வமாக உறைந்த வழிபடும் நிலையில் உள்ள கல்லைக் காணமுடியாது உள்ளது. மன்னனின் நினைவில் எழுப்பப்பெற்ற ‘பள்ளிப்படைக் கோயில்*களில்கூட வணங்கப்படும் உருவம், லிங்கமே அன்றி மன்னனின் பீடும் பேரும் கூடிய உருவமன்று.

வீரம் வித்திக் கல்லான இவர்களின் வரலாறு, பெரும்பாலும் இவர்கள் கடவுளர்களாக வடிக்கப்பட்ட நடுகல்லிலேயே சிறு செய்தியாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இருந்தும், பெரும்பாலான உருவம் பொறிக்கப்பட்ட நடுகற்கள், செய்தி பொறிக்கப்படாதவை. அடையாளம் காணப்பட்ட நடுகற்களைக் கொண்டு வகைப்படுத்தும்போது செய்தி சொல்பவை 35 சதவீதமே. மீதமுள்ள 65 சதவீதம் செய்தி பெறாதவை எனலாம். ஆனால், விதிவிலக்கின்றி இவை வணக்கத்திலும் வழிபாட்டிலும் இருக்கின்றன. இன்று கைவிடப்பட்டவை என்று தோன்றும் நிலையில் உள்ளவைகூட, முன்னர் வணக்கத்திலும் வழிபாட்டிலும் இருந்தவை என்பதில் கருத்து முரண் இராது.

 

 

 

 

வீரன் இறந்த இடத்தில், ஊர் அருகே பாதை ஓரத்தில், ஊர்ப் பொதுஇடத்தில், ஊர் எல்லையில், மரத்தடியில், வீட்டில், கோயிலில் என எங்கெங்கும் இக்கடவுளர்கள் நிலைநிறுத்தி வணங்கப்பட்டதை, தற்கால அறிதல்களில் இருந்து அறிய முடிகிறது.

 

 

 

 

மனித இனத்தில், வீரவணக்கத்தின் தொன்மை குறித்து அறிய மிகப் பழமை வாய்ந்த சான்றுகள் இன்னும் கிட்டாமல் உள்ளன. மாந்தரினத்தின் பரிணாம வளர்ச்சி, வாழ்க்கை முறை, சிந்தனைப் போக்கின் எழுச்சி மற்றும் இவற்றுக்குச் சான்றாக விளங்கும் தொல்லியல் எச்சங்களைக் கொண்டு பார்க்கும்போது, இடைநிலைப் பழங்கற்காலத்தில் இருந்தே, இறந்தோரை மாந்தரினம் முறையாக அடக்கம் செய்த சான்றுகளைப் பெறமுடிகிறது. இறந்தவர்களின் உடல் சிவப்பு நிறக்கலவையால் பூசப்பட்டுக் காட்சி தருவது, பிற்கால வாழ்வில், மறுபிறப்பில், வளமையில் மனித இனம் கொண்டிருந்த நம்பிக்கைச் சிந்தனையை அடையாளப்படுத்துவதாகும். மேலும், சிவப்பு நிறம் வீரத்தையும் ஆவேசத்தையும் சுட்டும் நிறக்குறியாக மனிதனால் பயன்படுத்தப்படுவதாகும். எனில், சிவப்பு நிறம் பூசப்பட்டுப் புதைக்கப்பட்ட இடைநிலைப் பழங்கற்கால மனித உடல், வீர மரணம் அடைந்தவனின் உடல் எனல் தகும்.

 

 

 

 

கடைநிலைப் பழங்கற்காலத்தின் இறுதிக் காலகட்டத்தில், வேட்டையிலும் உணவுதேடுவதிலும் வாழ்ந்த மனித இனத்தினர், வேட்டையின்போது வீரத்தின் இன்றியமையாமையை அறிந்தனர் எனலாம். வேட்டைக்கு முன் அவர்கள் மேற்கொண்ட குழு நடனங்களை அல்லது வேட்டைக்கள மாதிரிகளைச் சித்தரிக்கும் தொல்பழங்கால குகை ஓவியங்கள், வீர வழிபாட்டுச் சிந்தனையை அடையாளப்படுத்துவதாகவும் எடுத்துக்கொள்ள முடியும். நுண்கற்காலத்தில், இவ்வழிபாடு இன்னும் வலிமை பெற்றிருக்க வேண்டும். புதிய கற்காலத்தில், நிச்சயமான சில வீர வழிபாட்டு முறைகள் வழக்குபெற்றிருந்தமைக்குப் பலவகை தொல்பொருள் எச்சங்கள் சான்றாக உள்ளன.

மனிதன் புரிந்த யுத்தங்களில், ஆநிரைக்காக்கவை முதன்மையானவை. இலக்கியங்களும், இலக்கண நூல்களும் இந்த யுதங்களையே போற்றின. இலக்கணங்கள் வகுத்தன.  விலங்குகளுடன் மனிதன் புரிந்த யுத்தங்கள் குறித்து பண்டைய நூல்கள் கூறாதிருப்பினும், ஆநிரைப் போருக்குப் அடுத்த நிலையில் இருப்பவை புலி, யானை, பன்றி, குதிரை, பாம்பு முதலான விலங்குடனான யுத்தங்களே.

 

 

 

 

வரலாற்றுக்காலத்தின் இலக்கியங்களும் வரலாற்று நூல்களும் வழங்காத மரணமில்லாப் பெருவாழ்வைப் பெற்றவர்கள் இவ்வீரர்கள்; வணங்கப்படும் தெய்வங்களாகக் கல்லில் இவர்கள் உறைந்துள்ளனர். இவர்களின் இயற்பெயர்களை நினைவுகூர்வோர் இக்காலத்தில் எவருமிலர். இவர்களுக்குத் தற்காலத்தில் சில பொதுப்பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பொதுப்பெயர்களே அவர்களின் தற்கால அடையாளம். “வேடியப்பன், கரி வேடியப்பன் / கரிய வேடியப்பன், வேடர், சிலைக்காரன், வீரக்காரன், முனியப்பன், ஐயானாரப்பன், ஐயனார், கிருஷ்ணாரப்பன், மீனாரப்பன், சன்யாசியப்பன், ஆஞ்சநேயர் கல், சித்தப்ப சாமி, வீரபத்திரசாமி, சாணாரப்பன்” என்பவை சில. “மொசவேடியப்பன், நொண்டி வேடியப்பன், ஊமை வேடியப்பன், இரட்டை வேடியப்பன், ஓட்டை வேடியப்பன்” என சில பட்டப்பெயர்களாலும் வழங்கப்பட்டுள்ளன. சில, அவை காணப்படும் இடம் சார்ந்து “சாவுமேட்டு வேடியப்பன், நத்தமேடு வேடியப்பன், ஏரிக்கரை வேடியப்பன்” எனவும் குறிக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இப்பெயர்கள் வீரன் என்பதுடன் தொடர்புடையனவாக உள்ளதைப் பெயராய்வு வெளிப்படுத்துகிறது. (பெயராய்வு பற்றி அடுத்து வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்)

 

 

 

 

இக்கடவுளர் அமர்ந்த இடங்களின் பெயருடன் கோயில் ஒட்டுப்பெற்று ‘வேடியப்பன் கோயில்’, ‘வேடன் கோயில்’, ‘கிருஷ்ணாரப்பன் கோயில்’, ‘முனியப்பன் கோயில்’, ‘ஐயனார் அப்பன் கோயில்’ என அழைக்கப்படுகின்றன.

 

 

 

 

இப்பெயர்களுள் ‘வேடியப்பன்’ பெயர் பெருவழக்கில் உள்ளது. அடுத்தநிலையில் ‘முனியப்பன்’, ‘ஐயனார்’ இடம்பெறுகின்றன.

*

அடிக்குறிப்பு -

பள்ளிப்படைக் கோயில் - இறந்தவர் நினைவாகக் கட்டப்பட்ட கோயிலே பள்ளிப்படை என்று அகராதி பொதுவாக விளக்கம் அளித்தாலும், மரபில் அரசனைப் புதைத்த இடத்து எழுப்பப்பட்ட சமாதிக் கோயில் ‘பள்ளிப்படைக் கோயில்’ ஆகும்.

உதாரணம் -

1. முதலாம் ஆதித்த சோழன் நினைவாக ஆற்றூரில் எழுப்பப்பட்ட ஸ்ரீ கோதண்டராமீஸ்வரமாகிய ஆதித்தேஸ்வரம் கோயில்.

2. அரிஞ்சய சோழனுக்கு மேற்பாடியில் எழுப்பப்பட்ட அரிஞ்சைகை ஈஸ்வரம் கோயில்.

3. ராஜராஜனின் மனைவி பஞ்சவன் மாதேவிக்குப் பழையாறையான முடிகொண்ட சோழபுரத்தில் எழுப்பப்பட்ட பஞ்சவன் மாதேவீச்சுரம்.

 

***

 

மணி பாரி - அத்தியாயம் 2-ல் இடுகை செய்யப்பட்ட 4-வது கருத்துப் பதிவு...

வேளிர் 12 குடியினர் அல்ல, நசினர்கிநியரும் அப்படி சொல்லவில்லை. சேர சோழ பாண்டியரும், "அரி வழி வந்த 12 வேளிர்கள்" இந்த நாட்டை ஆண்டார்கள் என்று கல்லாடம் கூறுகிறது வேளிர்கள் அனைவரும் பன்றி வேளிர்களே. (அடிக்கோடு த.பார்த்திபனால் இடப்பட்டது).

பதில்

 • நச்சிநார்க்கினியரின் கூற்றை பல பழைய பதிப்புகளின் தொல்காப்பிய சிறப்புப் பாயிர உரையில் காணமுடியும். நீங்கள் எந்தப் பதிப்பைக் கொண்டு நச்சினார்க்கினியர் அப்படிச் சொல்லவில்லை என்ற முடிவுக்கு வந்தீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். இனி, ஆய்வாளர்களும் மாணவர்களும் அப்பதிப்பிலிருந்து விலகியிருக்க உங்கள் தகவல் உதவியாக இருக்கும்.

பழைய பதிப்பு ஒன்றை நீங்கள் தேடி அடைய முடியாவிட்டால், இங்கு குறிப்பிட்டுள்ள இரு நூல்களில் இருந்தும் நச்சிநார்க்கினியர் கூறியதை தெரிந்துகொள்ளுங்கள்.

1. தொல்காப்பிய சிறப்புப் பாயிரம் - உரை வளம், (பதிப்பு ஆசிரியர்) சிவலிங்கனார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, (1980), ப.101.

2. அபிதான சிந்தாமணி, சிங்காரவேலு முதலியார், ஏசியன் எஜூகேசன் டிரஸ்ட், சென்னை, (1982), ப.28.

 • கல்லாடம் செய்தியை அறிவேன். ஆய்வு ‘அருவாளர்கள்’ மீதானது என்பதால், அருவாளரைப் பற்றி குறிப்பிடாத கல்லாடத்தின் செய்தியை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

 • அது என்ன “வேளிர்கள் அனைவரும் பன்றி வேளிர்கள்”? இடுகையில் சொல் பிசகா? என்று தெரியப்படுத்துங்கள். உடன், நீங்கள் இடுகை செய்ய விரும்பிய வார்த்தையும்.

 

***

 

மணி பாரி – அத்தியாயம் 3-ல் வைக்கப்பட்ட முதலாவது கருத்துப் பதிவு…

அருவாளர் என்போர் வேளிர்வகையினரே, நன்னனும் நந்தனும் ஒருவனே அவன் அருவ குலத்தவன், அவன் சேதி என்று கூரிக்கொள்கிரன். இக்கல்வெட்டு நன்னன் சேய் நன்னனுடையது காலம் கிமு 3 – 4-ம் நுற்றாண்டு, கிடைத்த இடம் ஆந்திர நெல்லூர் மாவட்டம், கண்ட கூர் (கண்டி = எருமை, கண்டி ஊர்+கண்ட ஊர். (தென் இந்திய கல்வெட்டுத் தொகுதி 2, எண்.531) "அருவாள குலத்து நந்த சேதி மகன் வீரன் சேதி செய்வித்த குகை" என்பதாகும், இக்கல்வெட்டு பிராகிருத பிராமி எழுத்தில் உள்ள தமிழ் கல்வெட்டு ஆகும். சேதி என்பதை சிலர் செட்டி என்றும் படிக்கின்றனர் (அத்தி கும்ப கல்வெட்டிலும் sethi என்றே இருக்கிறது, இதில் சேதி என்றே படிப்பது குறிப்பிடதக்கது). இந்த கல் வெட்டு "அரி வேளிர் குலம்" என்பது "அருவாளர் குலம்" என்று திரிந்து வழங்குகிறது. நச்சினார் கினியர் உரையில் "வெள்ளித்தம்பிரனின்" திரிபு வேலையை இந்த கல்வெட்டு நிருபிக்கும். அருவாளர், வேளிர் என்போர் ஒரே தொகுதியினரே, அவர்கள் ஆளும் நாட்டிற்கு ஏற்ப அவர்களின் கோடி - இலச்சினை பெயர்கொண்டு அழைக்கப்பட்டனர். அரிவாள் என்ற சொல் அருவாள் என்று இன்று மருவி வழங்குவது காண்க.

பதில்

 • என் அளவில், நந்த மரபுக்கும், நன்னன் மரபுக்கும் தொடர்பில்லை.

 • அருவாளர், வேளிர் என்பதில் உடன்பாடு இல்லை. சங்க இலக்கியம் மற்றும் பெயர் மரபு கொண்டு பார்க்கையில், அருவாளர்கள் இனக்குழுத் தலைமையிலேயே இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. நச்சினார்க்கினியரின் கூற்றை உற்று நேக்கினாலும் இந்த உண்மையை அறிந்துகொள்ளலாம். அவர் “பதினெண் வேளிரையும் அருவாளர்களையும்” என்று வேளிரை தனியாகவும், அருவாளரைத் தனியாகவும் குறிப்பிடுகிறார். அருவாளர், வேளிர் ஆயின், அவர் “அருவாளர் உள்ளிட்ட வேளிர்…” என்றே குறித்திருப்பார் என எண்ணல் தகும்.

 • நாம் இருவருமே அருவாளர் குறித்து சான்றை வழங்கும் ஒரே கல்வெட்டைத்தான் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறோம். (காண்க: யுத்தபூமி, அத்தியாயம்-2) படித்தறிதல் (வாசிப்பு) வேற்பாடுகள் சில பிரச்னைகளை ஏற்படுத்துவது உண்மையே என்பதை ஏற்கிறேன். இக்கல்வெட்டில் வரும் sethi-ஐ, காரவேலனின் சேதி மரபுடன் தொடர்புபடுத்துகின்றீர்கள் எனில், மேலாய்வு மூலம் அதனை நிறுவ அழைக்கிறேன்.

 • நன்னன் என்பது ஒரு குடிப்பெயர் பயன்பாடா அல்லது இயற்பெயர் பயன்பாடா என்று அறிவது இங்கு அவசியமாகிறது. இக்கல்வெட்டு குறிப்பிடப்படும் நன்னன் என்பது சேதி மரபில் ஒருவன். எனில், இங்கு நன்னன் பெயர் இயற்பெயராகிறது. சங்க இலக்கியம், குடிப்பெயரில் ஒருவனைக் காட்சிப்படுத்தும் நன்னன் வேறானவன் ஆகிறான் என்பது ஆய்வின் முக்கியப் புள்ளியாகிறது. ஏனெனில், குடிப்பெயரோ, இனப்பெயரோ, குலப்பெயரோ ஒரே பெயரில் வரும் மரபு வழக்கில் இல்லாதது.

 • இக்கல்வெட்டை நன்னன் மரபினருடன், நன்னன் சேய் நன்னனுடன் பொருத்தி ஆய்வு செய்வதில் உள்ள இடர்களை நான் கீழ்க்கண்டவாறு பட்டியல் செய்கிறேன்.

1. கல்வெட்டில் நன்னன் செய் நன்னன் அதாவது நன்னன் மகன் நன்னன் என்ற பயன்பாடு இல்லை. ‘நந்த செட்டி/சேதி மகன் சிறீவீரி’ என்று உள்ளதாகத்தான் படிக்கப்பட்டிருக்கிறது. எனில், சீறிவீரி அல்லது வீரன் என்பவனை சங்க இலக்கியம் - பத்துப்பாட்டு, ‘மலைபடுகடாம்’ பாடல் நாயகன் நன்னன் சேய் நன்னன் சிறீவிரி/ வீரன் என்று அழைக்கப்பட்டதற்கான இணைச் சான்று தேவை.

2. நன்னன் சேய் நன்னன், செங்கம் பகுதியை ஆட்சிபுரிந்தவனாக உள்ளவன். எனில், திருவண்ணாமலையை அடுத்த பல்குன்றக் கோட்டத்தில் இருந்த இவனது ‘செங்கன்மா நாடு’ நெல்லூர், கந்துகூர்/கண்டகூர் வரை பரவி இருந்தமை நிறுவப்பட வேண்டும்.

3. இக்கல்வெட்டின் காலம் கி.மு. 3-ம் நூற்றாண்டு அளவினது என்பதை நானும் ஏற்கிறேன். எனில், உங்கள் கருத்துப்படி, நன்னன் சேய் நன்னன் கி.மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் ஆகிறான். வரலாறு ஆசிரியர்களின் பொதுக் கருத்து ஒன்றை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அது. நன்னன் சேய் நன்னன் சங்க இறுதிக்காலத்தில் வாழ்ந்தவன். சங்ககாலத்தின் துவக்கம் குறித்து கருத்து மாறுபாடு இருப்பினும், சங்ககாலத்தின் இறுதி கி.பி. 200 - 250 என்பதில் கருத்து முரண்பாடு இல்லை. எனில், நன்னன் சேய் நன்னன் கி.பி. 200 என்ற காலக்கணக்கை ஒட்டியே ஆய்வு செய்யத் தகுந்தவனாக இருக்கிறன். நீங்கள் குறிப்பிடுவதுபோல் கி.மு. 300 அளவில் அல்ல.

4. அரி வேளிர் குலம்தான் அருவாளர் குலம் என்று திரிந்துள்ளது எனத் தெரிவிக்கின்றீர்கள். அரி என்பதற்கு நீங்கள் ஆய்வுக்குக் கொண்டுள்ள பொருளை அறியத் தாருங்கள். காரணம், உங்கள் அடுத்த வரி அருவாளரை அரிவாள் என்ற அருக்கும், வெட்டும் கருவியுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்கிறது. முதலில் குறிப்பிடும் அரி குலம், இறைவன் அரியுடன் தொடர்புடையதாக விரிவதாக உள்ளது. கோடி - இலச்சினைப் பெயர் என்ற தொடரும், இறைவன் தொடர்புடைய சிறப்புக் கூறல் அல்லவா!

 • அருவாளர் யார்? என்ற கேள்வி எழுப்பி விடை காண முயன்ற ஆய்வுகளில், பண்டைய நாகர் இனத்தினருடன் தொடர்புபடுத்தும் வி.கனகசபை அவர்களுடையது (‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’) பல புதிய செய்திகளை முன்வைகிறது. அதுபோலவே, மொ.அ.துரை அரங்கசாமி அவர்களின் ‘சங்ககாலச் சிறப்புப் பெயர்கள்’ நூலும் அருவாளர்களை ஆய்வுசெய்கிறது. களம் அமைத்துள்ள இவர்கள் கருத்துகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாமல், ஒரு புதிய செய்தியை முன்வைப்பது ஆய்வு நெறிப்பட்ட ஒன்றாக இருக்காது. இவ்வாய்வு, காரவேலன் பகுதியை வெகுவாக நீட்டிவிடும் என்பதால் விலகியிருந்தேன். ஆனால், அறிமுகம் அளவிலாவது அது இருந்திருக்க வேண்டும் என்பதை உங்கள் பதிவு ஏன் எழுந்தது என்று நான் கேட்டுக்கொண்டபோது உணர்ந்தேன்.

 

***

 

மணி பாரியின் இரண்டாம் பதிவு

காரா என்றால் "எருமை" என்று பொருள் - செந்தமிழ் அகராதி பக்கம் 178. வேல/வேள என்றால் வெளிர் என்று பொருள். காரவேள என்றால் எருமை (நாட்டு) வேளிர் என்று பொருள். கார வேள என்பதும் கவேரன் என்பதும் வேறு வேறானது என்பதை ஒப்புகிறேன். தங்கள் குறிப்பிடும் "ஆவ அரசன்" என்று அத்திகும்ப குறிப்பிடும் சொற்கள் அதிக்கும்ப கல்வெட்டில் இல்லை. அப்படி இருக்குமாயின், அச்சொல்லை ஆங்கிலத்திலும், பிராகிருத மொழியை தமிழ் எழுத்திலும் தந்தால், என்னை திருத்திக்கொண்டு செழுமைப்படுத்திக்கொள்ள ஏதுவாகும். "தாமிர தேக சங்காத்தம்" என்ற தொடர், அக்கல்வெட்டில் 11-வது வரியில் இடம் பெற்றிருக்கிறது. நான், விக்கிபீடியா முலம் இக்கல்வெட்டு விவரத்தை படித்தேன்.

வரலாற்றுக்கலையில் நான் விரல் எடுக்கப்படாத ஏகலைவன். பெரிய வரலாற்று அறிஞர்களின் புத்தகங்களை அதிகம் நான் படித்ததில்லை, இருப்பினும் எம் முன்னோர்கள் வரலாற்றை அதன் காலம் - சமூகம் - சூழல் இவற்றோடு பொருத்தி புரிந்துகொள்ள முயன்று வருகிறேன். தங்கள் தொடரின் மூலம் தங்களிடமும் தற்போது கற்று வருகிறேன். தொடரட்டும் தினமணியின் வரலாற்று விழிப்புணர்வுப் பணி.

பதில்

 • ‘காரா’ என்பது எருமை என்பதைச் சுட்டும் சொல் என்பதில் உடன்படுகிறேன். அதனால், காரவேளன் எருமை நாட்டின் அதாவது இன்றைய மைசூர்ப் பகுதியின் வேள் என்பதில் வேறுபடுவேன். ஏனெனில், எருமை நாட்டில் இருந்து காரவேலனின் முன்னோர் கலிங்கம் சென்று ஆட்சி அமைத்து, வேளிர் நிலையில் இருந்து வேந்தன் நிலைக்கு உயர்ந்தனர் என்று கொள்வதற்கு, வட புலத்தில் கிடைக்கும் சான்றுகள் இடமளிக்காது உள்ளன.

 • நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விக்கிப்பீடியாவின் காரவேலன் அத்திக்கும்பா கல்வெட்டுப் பக்கங்கள் பார்த்தேன். அது முரண்படும் இடங்களே உங்கள் முரணான நிலைப்பாட்டுக்குக் காரணம் என சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விக்கிப்பீடியா, இப்பதிவில் தமிழ், ஆங்கிலம், பிராகிருத ஒலிப்பின் தமிழ் வரிவடிவம் என மூன்று வடிவங்களில் வெளியிட்டுள்ளது. இதில் ஆங்கில வடிவம், கே.பி. ஜேயசுவால் மற்றும் ஆர்.டி.பானர்ஜி அளித்தவை. இதன் மொழிபெயர்ப்பே தமிழ் வரிவடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிராகிருத ஒலிப்பின் தமிழ் வரிவடிவம் இவர்களின் படித்தறியும் வடிவமல்ல. அது, சதானந்த அகர்வாலுடையது. இதுவே உங்களை முரணான நிலைப்பாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. என்னுடைய அத்தியாயம்-2 பதிவிலேயே, சதானந்த அகர்வால் தமது படித்தறிதலில் ஆவா அரசர்கள் பற்றி குறிப்பு இல்லை என்று மறுக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளேன்.

சாதானந்த அகர்வாலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பையும் அத்தியாயம் 2-ல் அளித்துள்ளேன். அதன்படி, தமிழர் கூட்டுப்படை இருந்ததை அவர் அங்கீகரிக்கிறார். நீங்கள் குறிப்பிடும் தேகம், அதாவது உடல், குருதி என்ற பொருளை அவர் காட்டவில்லை என்பது புலனாகிறது.

விக்கிப்பீடியா, உரிய குறிப்பு கொடுத்து தம்பதிப்பை திருத்திக்கொள்ள வேண்டுவோம்.

 

***

 

மேலாக, தரம் தாழ்ந்த பதிவுகள், தொடர்பற்ற செய்திகளைக் கொண்டு வாதிடல், தனிநபர் விமரிசனம், இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் பதிவுகளைப் புறக்கணித்திருப்பது என்றும், கட்டுரைகளின் செய்திகளுடன் தொடர்புடைய எந்த வினாவுக்கும், பதிவுக்கும் மதிப்பளித்து பதில் அல்லது ஆலோசனை வழங்குவது, சரியான சுட்டிக்காட்டல் என்றால் ஏற்பதில் எந்தத் தயக்கமும் இல்லாதிருப்பது என்ற முடிவின் அடிப்படையிலேயே உங்கள் பதிவுகளுக்குத் தக்க பதில் தரப்பட்டது என்பதை தங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எந்த எண்ணிக்கை அதிகத்தில் கற்றிருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமிதமோ, மேலான எண்ணமோ இல்லை. நான் எவ்வாறு அவற்றை உள்வாக்கிக்கொண்டு வளர்ந்திருக்கிறேன் என்பதில்தான் உணர்வுப்பூர்வமாகக் கவனத்துடன் இருக்கிறேன்.

அவ்வையார் “கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு” என்றார். கைம்மண் அளவு என்பது அவருக்கு மட்டுமே பொருந்தும். எனக்கோ, இந்த உலகே ஒரு புல்வெளி என்றால், நான் கற்றது ஒரு புல் இதழின் நுனிப்புல் அளவே. இந்த உணர்தல் எப்போதுமே எனக்குள் இருக்கும்.

என் பதிவுகள் என்னிடமிருந்து உங்களை விலக்கிவைக்கும் எனில் நான் வருந்துவேன். புகழ்ச்சி வார்த்தைகளைவிட உங்கள் பதிவுகள் எனக்கு வெகுமதியானவை.

அன்புடன்.

த.பார்த்திபன். தருமபுரி.

 

***

கமலேசன், வம்சி கிருஷ்ணா ஆகியோரின் மின்னஞ்சல் கேள்விகளுக்கான  என் பதில் அடுத்த வாரம் இடம்பெறும்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்